ஆதிசைவர் மரபில் அவதரித்த அருளாளர்கள்
1. ஸ்ரீ புகழ்துணை நாயனார்
அவதரித்த தலம் : செருவிலிபுத்தூர் (சோழநாடு அழகாபுத்தூர் என்று அழைக்கப்படுகின்றது)
மரபு : ஆதிசைவ மரபு
அவதார நட்சத்திரம் : சித்திரை மாதம் – சதயம்.
சிறப்புகள் :
• பஞ்சம் மிகுந்து பசிநோய் வாட்டிய வறுமை நிலையிலும் சிவபெருமானை ஆகமவிதிப்படி பூஜித்து வழிபாடு செய்தவர்.
• சிவபெருமானால் பொற்காசு வழங்கப் பெற்றவர். சமணசமய ஆதிக்கம் நிறைந்த களப்பிரர் ஆட்சிக் காலமாகிய கி.பி.5 ம் நூற்றாண்டில் சிவபக்தியோடு வாழ்ந்து அருள் பெற்றவர்.
• திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோருக்கு முற்பட்டவர். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர்.
புடை சூழ்ந்த புலி அதன் மேல் அரவு ஆட ஆடி
பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்’
• திருத்தொண்டத் தொகை
’புண்ணியர்கள் புகழ் அழகார் திருப்புத்தூர்வாழ்
புகழ்துணையார் அகத்தடிமைப் புனிதர் சின்னாள்
மண்ணிகழ மழைபொழியா வற்காலத்தால்
வருந்துடலம் நடுங்கிடவு மணிநீ ரேந்தி
அண்ணல்முடி பொழிகலசம் முடிமேல் வீழ
அயர்ந்தொருநாள் புலம்ப அரன் அருளாலீந்த
நண்ணலரும் ஒருகாசுப் படியால் வாழ்ந்து
நலமலிசீர் அமருலகம் நண்ணினாரே
• திருத்தொண்டர் புராணசாரம்
முக்தியடைந்த தலம் – அழகாபுத்தூர்
குரு பூஜை நாள் : ஆவணி மாதம் – ஆயில்யம்
2. ஸ்ரீ சடையனார் (சடைய நாயனார்)
அவதரித்த தலம் : திருநாவலூர் திருமுனைப்பாடி நாட்டில் தலைநகரம்
மரபு : ஆதிசைவ மரபு
அவதரித்த நட்சத்திரம் : ஆடி மாதம் – புனர்பூசம்
சிறப்புகள் :
• மாதொருபாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலமாகிய ஆதிசைவ மரபில் அவதரித்து சிவபெருமானை ஆகமவிதிப்படி பூஜித்து வந்தவர்.
• ஆலாலசுந்தர்ராகிய நம்பியாரூராரை திருமகனாக வாய்க்கும்திருவரம் பெற்றவர்.
• கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசைவர்.
• அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
‘என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்’
• திருத்தொண்டத் தொகை
’தலம்விளங்கும் திருநாவலூர் தன்னில் சடையனென்னும்
குலம் விளங்கும் புகழோனை உரைப்பர் குவலயத்தில்
நலம் விளங்கும்படி நாம் விளங்கும்படி நற்றவத்தின்
பலம் விளங்கும்படி ஆருரனை முன் பயந்தமையே’
• திருத்தொண்டர் திருவந்தாதி.
3. ஸ்ரீ இசை ஞானியார்
அவதரித்த தலம் : திருவாரூர்
வாழ்ந்த தலம் : திருநாவலூர்
அவதரித்த நட்சத்திரம் : ஐப்பசி மாதம் – மூலம்
சிறப்புகள்:
• ஆலாலசுந்தரராகிய நம்பியாரூராரை திருமகனாக பெற்றெடுக்கும் பாக்கியம் பெற்றவர்.
• சிவபக்தி நிறைந்த அம்மையார். சிவபெருமானை இசைப்பாடல்களால் வழிபட்டு வந்தவர்.
• கி.பி.7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசைவ மங்கையார்.
• அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
இசைஞானியார் திருவாரூர்ரில் வாழ்ந்த சைவகெளதம கோத்திரத்து ஞானசிவாசாரியாரின் திருமகளார் என்பது திருவாரூர் கோயில் கல்வெட்டு செய்தி.
’என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி’
• திருத்தொண்டத்தொகை
’ஒழியாப் பெருமை சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார்
அழியாப் புரங்கள் எய்தழித்தார் ஆண்டநம்பி தனைப்பயந்தார்
இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டியாரை என்சிறுபுன்
மொழியாற் புகழ் முடியுமோ முடியா தெவர்க்கும் முடியாதால்’
• பெரிய புராணம்
முக்தியடைந்த தலம் : திருநாவலூர்
குருபூஜை நாள் : சித்திரை மாதம் – சித்திரை.
4. ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள்
அவதரித்த திருத்தலம் : திருநாவலூர்
ஆன்மார்த்த தலம் : திருவாரூர்
தந்தையார் : ஸ்ரீ சடையனார்
தாயார் : ஸ்ரீ இசைஞானியார்
மரபு : ஆதிசைவ மரபு
குழந்தை திருநாமம் : நம்பி ஆரூரன்
மனைவிகள் : ஸ்ரீ பிரவை நாச்சியார் – ஸ்ரீ சங்கிலி நாச்சியார்
அவதார நட்சத்திரம் : ஆவணி மாதம் – உத்திரம்
சிறப்புகள் :
• ஆதிசைவ மரபில் அவதரித்த சுந்தர், சிவபெருமானால் தனது அடிமை என்று தடுத்தாட்கொள்ளப்பட்டவர்.
• வந்தொண்டர் என்ற திருநாமம் பெற்றவர்.
• அறுபத்தி மூன்று நாயன்மார்களின் பெருமையை எடுத்துக்கூறும் திருத்தொண்டத் தொகையைப் பாடி அருளியவர்.
• திருவாரூரில் சிவபெருமானை தோழனாகப் பெற்றவர்.
• தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பெற்றவர்.
• திருத்தலங்கள் தோறும் சென்று தேவாரம் பாடியவர்.
• முதலை உண்ட பாலகனை மீட்டு அருள் செய்தவர்.
• திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்திற்குப் பின்பு வாழ்ந்தவர்.
• அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
• கி.பி.7-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்நிலவுலகில் 18-வயது வரை வாழ்ந்து மானிடயாக்கையுடன் யானைமீது திருக்கயிலைக்கு எழுந்தருளும் அருள் பெற்றவர்.
• ஸ்ரீ சுந்தரர் பாடிய மொத்த பதிகங்கள் 38,000 ஆகும். நமக்கு கிடைத்த பதிகங்கள் 100 ஆகும். சுந்தரர் தேவாரங்கள், பன்னிரு திருமுறைகளில் 7-ம் திருமுறையாக வைத்துப் போற்றப்படுகின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலையில்யோக நெறியை விளக்க வந்தவர்.
• அறுபத்து மூன்று நாயனார்களின் தொண்டின் சிறப்பை திருத்தொண்டத் தொகையாக பாடியருளவே இவ்வுலகில் அவதரித்தவர்.
’தொழுதும் வணங்கிய மாலயன் தேடருஞ் சோதி சென்றாங்
கெழுதுந் தமிழ்ப்பழ ஆவணங் காட்டி எனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செய் எனப்பெற்றவன் முரல்தேன்
ஒழுகும்மலரினற்றாள் எம்பிரான் நம்பியாரூரனே’
• திருத்தொண்டர் திருவந்தாதி
முக்தியடைந்த தலம் : திருவஞ்சைக்களம்
குருபூஜை நாள் : ஆடி மாதம் – சுவாதி
5. ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள்
அவதரித்த தலம் : திருநாறையூர் (சிதம்பரம் அருகே)
மரபு : ஆதிசைவ மரபு
சிறப்புகள் :
• மாமன்னர் ராஜராஜசோழன் வேண்டுதலுக்கிணங்க தேவாரப் பாடல்களை சிதம்பரத்தில் கண்டெடுத்துத் தந்தவர்.
• தேவார திருமுறைகளை தொகுத்துத் தந்தவர்.
• நாயன்மார்களின் தொண்டினை பெருமைகளை போற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி பாடலை பாடியருளியவர்.
• இளம் பருவத்திலேயே பொல்லப் பிள்ளையாரால் ஆட்கொள்ள பெற்றவர்.
• ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு காலத்தால் பிற்பட்டவர். கி.பி. 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசைவர்.
• வேதத்தை நான்காக வகுத்த வேதவியாசரைப்போன்று நம்பியாண்டார்நம்பி திருமுறைகளை வகுத்தும் தொகுத்தும் அருள் செய்த்தால் ’தமிழ் வியாசர்’ , ‘சைவ வியாசர்’ , என்று சிறப்பிக்கப் பெற்றவர்.
• பத்து நூல்களை பாடியருளியவர். இவர் அருளிய பிரபந்தங்கள் சைவத்திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையில் வைத்து போற்றப்படுகின்றன.
நம்பியாண்டார் நம்பிகள் பாடியருளிய நூல்கள் :
1. திருநாரையூர் விநாயகர் திரு இரட்டை மணிமாலை
2. கோயில் திருப்பண்ணியர் விருத்தம்.
3. திருத்தொண்டர் திரு அந்தாதி
4. ஆளுடைய பிள்ளையார் திருஅந்தாதி
5. ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்.
6. ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை.
7. ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை.
8. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்.
9. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை.
10. ஆளுடைய பிள்ளையார் திருஏகாதச மாலை.
நம்பியாண்டார் நம்பி பாடிய இந்த பத்து பதிகங்களே, சேக்கிழார் ‘பெரிய புராணம்’ பாடுவதற்கும், வரலாற்றுண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கும் பெருந்துணையாக விளங்கியது.
‘பொன்னி வடகரைசேர் நாரையூரில் புழைக்கைமுக
மன்னன் அறுபத்து மூவர் பதிதே மரபு செயல்
பன்ன அத் தொண்டத் தொகைவகை பல்கும் அந்தாதிதனைச்
சொன்ன மறைக்குல நம்பி பொற்பாதத் துணைதுணையே’
முக்தியடைந்த தலம் : திருநாரையூர்
குருபூஜை நாள் : வைகாசி மாதம் புனர்பூசம்
6. ஸ்ரீ அருணந்தி சிவாசாரியார்
அவதரித்த தலம் : திருத்துறையூர் (நடுநாடு)
மரபு : ஆதிசைவ மரபு
அருளிய நூல்கள் : சிவஞான சித்தியார், இருபா இருபஃது
சிறப்புகள் :
• சைவசித்தாந்த தத்துவத்தை பாடியருளிய சந்தானாசாரியார்கள் நால்வரில் ஒருவர். மெய்கண்டார் திருஅவதாரம் செய்ய, குருவாக இருந்து நற்காரணமாக விளங்கியவர்.
• சைவசித்தாந்த தத்துவத்தை அழகுற எளிய நடையில் பாடியருளியவர். தமிழில், சைவசித்தாந்த தத்துவங்களை தெளிவாகவும் விளக்கமுடனும் அளிக்கும் முதல் நூலின் ஆசிரியர் என்ற சிறப்புக்குரியர்.
• கி.பி.13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசைவர்.
• தாம் பிறந்த ஆதிசைவ சிவாசாரியார் மரபிற்கேற்ப ஆகமங்கள் அனைத்திலும் பெரும்புலமை பெற்று ’சகலாகம பண்டிதர்’ என சிறப்பிக்கப் பெற்றவர்.
• தேவாரத் திருமுறைகளின்மீது பெரும் பக்தியும், அன்பும் கொண்டு போற்றி வழிபட்டுவந்தவர். திருமுறைப் பாராயணம் நாள்தோறும் செய்து வந்தவர். தாம் வாழ்ந்த காலத்தில், ஆகமங்களில் தேவாரத் திருமுறைகளில் சைவசித்தாந்த தத்துவங்களில் கரைகண்டு நடமாடும் பல்கலைக்கழகமாக, நடமாடும் நூலகமாகத் திகழ்ந்த பெருமைக்குரியவர்.
• அருணந்தி சிவாசாரியார் சகல ஆகமங்களிலும் பண்டிதராக விளங்கியதால் தாம் செல்லுமிடங்களிலெல்லாம், சாத்திர ஏட்டு சுவடிகளையும், ஆகம சுவடிகளையும் ஏற்றிச் செல்வாராம். தமக்கு ஒரு வண்டி, ஆகம சுவடிகளுக்கு ஒரு வண்டி. எனவே இவர் நடமாடும் பல்கலைக் கழகம் என புகழப்பட்டார்.
• சிவஞானசித்தியார் – பரபக்கம், சுபபக்கம் என்று இரண்டு பாகங்களாக பாடியுள்ளார். பரபக்கம் 301 பாடல்களைக் கொண்டது. சுபபக்கம் 328 பாடல்களைக் கொண்டது.
• தாம்பிறந்த ஆதிசைவ மரபில் கடமை சிவபெருமானின் பெருமைகளை உலகறியச் செய்வது என்ற கொள்கைக்கேற்ப, மாற்று சமயங்களின் கொள்கைகளை மறுத்து சைவசித்தாந்த தத்துவத்தை, சிவபிரத்துவத்தை சுபபக்கம் வாயிலாக அழகுற எடுத்துக்கூரி தாம் அவதரித்த ஆதிசைவ மரபிற்கு பெருமைசேர்த்தவர்.
’முப்பொருளின் ஈரியல்பும் ஓர் இயல்பா நுவலாது முறை
வெவ்வேறாய்
செப்பு சிவாகமங்களின்தன் பொருள் ஒருமை பெற உணர்ந்து
தின்முன் நூலை
ஒப்பவிரி யாப்பு அதனால் சித்தி எனும் வழிநூலாய் ஒளிர்பிற்
காலத்து
இப்புவியோர் தெளிந்து உய்ய மொழிந்த அருள்நந்தி சிவன்
இணைத்தாள் போற்றி’
முக்தியடைந்த தலம் : திருத்துறையூர்
குருபூஜை நாள் : புரட்டாசி மாதம் பூரம்.
7. ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியார்
அவதரித்த திருத்தலம் : காஞ்சிபுரம்
தந்தையார் : காளத்தியப்ப சிவாசாரியார்
மரபு : ஆதிசைவ மரபு
சிறப்புகள் :
• காஞ்சிபுரம் குமரகோட்டத்து ஸ்ரீ முருகப்பெருமானை முப்பொழுதும் திருமேனி தீண்டி வழிபடும் ஆதிசைவ மரபில் அவதரித்தவர்.
• சைவசமயத்தின் பெருங்காப்பியம் எனப் போற்றப்படும் கந்தபுராணத்தை பாடியருளியவர்.
• முருகப்பெருமானே கனவிலே வந்து ‘ கந்தபுராணம் பாடுவாயாக’ என்று அருள் செய்து, ‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என்று அடியெடுத்துக் கொடுக்கும் திருவருள் பெற்றவர்.
• கந்தபுராணம் அரங்கேற்றத்தின் பொழுதுமுருகப் பெருமானே தோன்றி ‘வீரசோழியம்’ என்ற இலக்கண நூல் மூலம் புலவர்களின் சந்தேகத்தைத் தீர்த்து அருள் செய்த புண்ணியம் பெற்றவர்.
• சைவ சமயத்தில் சிவபெருமானின் மூன்று கண்களாக போற்றப் படுபவை, 1. பெரிய புராணம், 2. கந்த புராணம், 3. திருவிளையாடற் புராணம். இவற்றில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணாக போற்றப்படும் கந்தபுராணத்தை பாடியருளிய பெருமைக்குரியவர்.
• ‘கந்தபுராணம் எவரையும் கவர்ந்து இழுக்கும் காந்தபுராணம்’ என்று போற்றப்படும் பெருமைக்கும் சிறப்பிற்கும் உரியவர்.
• தாம்பிறந்த ஆதிசைவ மரபிற்கேற்ப, கந்தபுராணம் நூல் முழுவதிலும், சிவபெருமானின் பெருமைகளையும், ஆகம கருத்துகளையும், சைவசித்தாந்த்த் தத்துவங்களையும் பெருமளவு பாடியருளியவர்.
• கம்பனின் கவித்திறத்தையும் விஞ்சக்கூடிய வகையில் கவியமுதக் காவியமாக கந்தபுராணத்தை வழங்கிய சிறப்புக்குரியவர். ‘காதல் மழை பொழிந்த அருள் கொண்டலான கச்சியப்பன் இருபாதம் உச்சி வைப்பாம்’ என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க பக்தி மழை பொழிந்த கருமேகம் போன்றவர் கச்சியப்ப சிவாசாரியார்’ என்ற பெருமைக்கும் புகழுக்கும் உரியவர். கி.பி.14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசைவர்.
’உச்சிதமாம் சிவவேதியன் காளத்தி ஓங்குமைந்தன்
கச்சியப்பன் செய்த கந்த புராணக் கலைக்கடலின்
மெச்சிய கல்வி மதியும் வெண்டாமரை மேவு மின்னும்
இச்செவி நாவினுக்கு இன்பாம் அமுதம் எழுந்தனவே
8. ஸ்ரீ சிவகோசரியார்
அவதரித்த தலம் : திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி)
மரபு : ஆதிசைவ மரபு
சிறப்புகள் :
• சிவத்தையே எப்பொழுதும் கோசரித்துக் கொண்டிருப்பவர் என்பதால் சிவகோசரியார் எனப் பெயர் பெற்ற சிறப்புக்குடையவர்.
’எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கேற்ப’ என்ற சேக்கிழார் வாக்கிற்கேற்ப ஆகம விதிப்படி சிவபெருமானைப் பூஜித்து அருள் பெற்றவர்.
’கானவர் பெருமானார் தம் கண்ணிடந்தப்புன்போதும்
ஊனமு துகந்த ஐயர் உற்றுமுன் பிடிக்கும் போதும்
ஞானமாமுனிவர் கண்டார்…’
என்று சேக்கிழார் பெருமானால் ஞானமாமுனிவர் என்று போற்றப்படும் பெருமைக்குரியவர். ஏனெனில், கண்ணப்ப நாயனாருடைய செயல்கள் யாவும் இறைவனருளினால் காட்டவும், உணர்த்தவும் பட்ட ஞானத்தை பெற்றவராதலின் ஞானமாமுனிவர் என்றார் – என்று விளக்கம் அளிப்பார் சைவ அறிஞர். சி.கே. சுப்பிரமணிய முதலியார்.
• நக்கீரதேவ நாயனார் தாம் பாடிய கண்ணப்பதேவர் திருமறத்தில் போற்றி புகழப்பெற்றவர். கலியுகத்தின் தொடக்க காலத்தில் ஆகமவிதிப்படி பூஜித்த ஆதிசைவர்.
• கண்ணப்ப நாயனார் செய்த அன்புவழி பூஜை முறைக்கு முன்னுதாரணமாக விளங்கும் அருள் பெற்றவர்.
9. ஸ்ரீ தருமி
அவதரித்த தலம் : திரு ஆலவாய்(மதுரை)
தந்தையார் : சிவமுனி
மரபு : ஆதிசைவ மரபு
சிறப்புகள் :
• சங்ககாலத்திலேயே வாழ்ந்துவந்த ஆதிசைவ மரபைச் சார்ந்தவர்.
• தருமியின் பொருட்டு சிவபெருமான் சங்கப்பலகை ஏறி வாதிட்டு பொற்கிழியினைப் பெற்றுத்தந்த சிறப்பிற்குரியவர்.
அப்பர்பெருமான் திருப்பத்தூர் தேவாரத்தில்,
’நன்பாட்டுப் புலவனாய் சங்கமேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண்’
என்று போற்றிப் பாடியுள்ளார்.
கல்லாடம் நூலானது,
’பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக்
கொங்குதேர் வாழ்க்கைக் செந்தமிழ் கூறிப்
பொற்குவைதருமிக்கு அற்புடன் உதவி
என்னுளங் குடிகொண்டு இரும்பயன் அளிக்கும்
கள்ளவிழ் குழல்சேர் கருணையெம் பெருமான்’
என்று தருமிக்கு பொற்கிழி அளித்த செயலைப் போற்றிப் பாடுகின்றது.
திருவிளையாடற் புராணத்தில்,
அந்த வேலையிலா ஆதிசைவரில்
வந்த மாணவர் மணஞ்செய் வேட்கையான்
முத்தை யாச்சி முயலும் பெற்றியான்
தந்தை தாயிலான் தருமி யென்றுளான்’
என்று தருமியைக் குறித்துப் பாடப்பட்டுள்ளது.
இன்றும், மதுரை திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவில் நான்காம் திருநாளில் தருமிக்கு பொற்கிழி அளித்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.