ஆதி சைவர்கள்

தமிழகத்தின் தொன்மையான சமையங்களாக விளங்கக் கூடியவை சைவமும், வைணவமும் ஆகும். இவற்றில் ‘சைவம்’ என்ற சொல் சிவசம்பந்தம் உடையது எனப் பொருள்படும்.

'சைவம் சிவனுடன் சம்பந்தமாவது’ என்கிறது திருமூலரின் திருமந்திரம். சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவபெருமான்.இவரை முப்போதும் திருமேணி தீண்டி பூஜை செய்து வழிபடும் சிவாச்சார்யப் பெருமக்களை ‘ஆதிசைவர்’ என்றும் போற்றி வழிபடுகின்றன.


இதனை ” அரிய சதாசிவனென்போன் அனாதி சைவன் – அவன்பால்
அவதரித்த சிவமறையோர் ஆதிசைவர் “.
என்ற பாடலால் அறியலாம்.

தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் அகத்தடிமை திருத்தொண்டு செய்து வரும் இவர்கள், குருக்கள் , பட்டர், நாயனார், நாயகர், சிவாசாரியார் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பொதுவாக தமிழில் உள்ள பக்தி இலக்கியங்கள் இவர்களை “ஆதிசைவர்கள் ” என்றே அழைக்கின்றன. சேக்கிழார் பெருமான் பெரிய புராணாத்தில் இவர்களை , ‘ மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமைசெய்யும் வேதியர் குலம் ‘ என்று போற்றிப் பாடுகின்றார். மேலும், பெரிய புராணாத்தில் ஸ்ரீ சுந்தரர் திருவெண்ணெய்நல்லூர், வழக்காடு மன்றத்தில் தம்மை அறிமும் செய்து கொள்ளும்பொழுது, ‘அனைத்து நூல் உணர்ந்தீர் ஆதிசைவனெனற்றிவீர் ‘ . என்று கூறுகிறார். ஸ்ரீ சுந்தர்ரின் பாட்டனார் ஆரூரன் சிவாசாரியார் தம் கைப்பட எழுதிய ஓலைச் சுவடியில், “அருமறை நாவல் ஆதிசைவன் ஆரூரன் “ என்று குறிப்பிட்டு, தன்னை ஆதிசைவன் என்றே கூறுகிறார். ஸ்ரீ சுந்தரர் வாழ்ந்த காலம் கி.பி. 7ம் நூற்றாண்டு. எனவே, 7ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே ஆதிசைவர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருவதும், சிவாலய புஜைகள் செய்து வருவதும் வரலாற்று உண்மையாகும்.

தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் தமது ‘ என் சிரித்திரம் ‘ நூலில் தமது ஊர் சிவாலயத்தில் ‘ஆதிசைவர்’ ஒருவர் பூஜை செய்வதாக குறிப்பிட்டிருப்பார். ஸ்ரீ உமாபதி சிவாசாரியார் தாம் அருளிய திருதொண்டர் புராண சார்த்தில், ‘தன் கயிலையது நீங்கி நாவலூர்வாழ் சைவனார் சடையனார் தனயனராய் மண்புகழ அருட்டுறையான் ஓலைகாட்டி மணம் விலக்க வந்தொண்டராய் ‘ என்று பாடுகிறார்.இதில் ஸ்ரீசுந்தரர் தந்தை சடையனாரை “சைவனார்” என்ற அடைமொழிக் கொண்டு அழைக்கிறார்.
மேலும், ஸ்ரீ உமாபதி சிவாசாரியார் திருமுறை கண்ட புராணாத்தில் நம்பியாண்டார் நம்பி அவதாரத்தைக் குறிப்பிடும் பொழுது

”நாரையூரினில் ஆதிசைவ மறையோன் பால்
வையமெலாம் ஈடேறச் சைவம்வாழ மாமணிபோல் ஓரு
சிறுவன் வந்து தோன்றி “ – என்று பாடுகின்றார்.

இதில், நம்பியாண்டார் நம்பி திருநாரையூரில் ஆதிசைவ மரபில் அவதரித்ததாக குறிப்பிடுகின்றார். சந்தானாசாரிய புராண சங்கிரகத்தில் திருவாரூர் சாமிநாத தேசிகர், அருள்நந்தி சிவாசாரியார் புராணாத்தில்,

"வேத வொலியும் முழவொயும்
வேள்வி யியற்றுந் திருமுறையோர்
நாதவொலியு மோவாத
நன்மை பெருகுந் திருத்துறையூர்
ஆதி சைவ குலம் புரிந்த
அருமையான பெருந்தவத்தால்
நீதி சாலுஞ் சிவாகமங்கள்
நிலவ வொருவ ரவதரித்தார்"
என்று பாடியுள்ளார்.

இப்பாடலில் அருள்நந்தி சிவாசாரியார் ஆதிசைவ மரபில் சிவாகமங்கள் நிலைபெற்று விளங்க அவதரித்தவர் என்று குறிப்பிடுகின்றார். ஸ்ரீ மாதவ சிவஞான சுவாமிகள் பாடி அருளிய காஞ்சிப் புராணத்தில், 

”இருண்மலந்துமிக்குஞ் சிவாகம முறையி னீரிரு பாதமுமனுட்டித்
தருள்பெறு மாதி சைவர்க ளாதி யவாந்தர சைவரீ றனோர்
மருவிவாழ் மாட மாளிகைப் பக்தி மருங்குடுத் துயர்வனப் பினதாற்
றெருடரு மனாதி சைவர்வீற் றிருக்குந் திவளொளிப்புரிசையே கம்பம்”

என்று சிவாகம விதிப்படி புஜித்து வழிபடும் சிவாசாரியார்களை ஆதிசைவர் என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். திருவாவடுதுறை   ஆதினத்துக் கவிராட்சஸ ஸ்ரீ கச்சயப்ப முனிவர், தாம் பாடியருளிய தணிகைப்புராணத்தில்,

"அருள்வளங் கொழிக்கு மைந்தொழிலாக
வடங்கிய சிறப்பொடு பூசை
மருவுமெவ் வகையு மாகம வழியான்
மயரறத் தெளிந்தவர் வரையாச்
சுருதிகண் மிருதி புராணமெக் கலையுந்
துகளறத் தெரிந்தவ ரிறைவன்
தருதிரு மேனி தீண்டிடு ஆதிசைவர்"

என்று ஆகமவழியில் சிவபெருமானின் திருமேனி தீண்டி வழிபடும் ஆதிசைவர்களை போற்றிப் பாடுகின்றார். மேலும், ஸ்ரீ விநாயகர் புராணத்தில் ஸ்ரீ கச்சயப்ப முனிவர்,

"நயந்தரு வேதமோதி நல்லவாகமங்கடோற்றிப்
புயந்தலைச் சூலம் வைத்த புனிதர் பூசனையாற்பேறு
வயத்துறு தமக்குமேனை வையகத்தெவர்க்குமாக்கும்
வியத்தகும் ஆதிசைவர்"

என்று ஆதிசைவர்களை வியந்து போற்றிகின்றார்.இளைசைப் புராணமோ,

"வேதமுற் கலைகளோடு விரிந்திடு சிவாகமங்கள் ஓதியே யுண்மை தேறியுயர் கயிலாய நாதர் சோதிதன்மேனி தீண்டித் தொன்மை யாராதனஞ்செய் கோதிலா ஆதிசைவர்" என்று ஆதிசைவர்களைப் போற்றிப் புகழ்கின்றது. இவ்வாறு சிவபெருமானை முப்பொழுதும் தீண்டி வழிபடும் சிவாசாரியார்களை ஆதிசைவர்கள் என்று பக்தி இலக்கியங்கள் பல இடங்களில் போற்றுவதைக் காணமுடியும்.

'ஆதி' என்றால் முதன்மையான என்று பொருள்படும். ‘சைவர்’ என்றால் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர் என்று பொருளாகும். சிவபெருமானை வழிபடுவதில் முதன்மையானவர், சிவபெருமானை வழிபடுவதற்கு வழிகாட்டுவதில் முதன்மையானவர் என்பதால் இவர்களுக்கு ‘ஆதிசைவர்’ என்று பெயர் ஏற்பட்டது.ஆதிசைவர்கள் சிவபெருமானையே முழுமுதல் பரம் பொருளாக வழிபடும் உறுதி படைத்தவர்கள். ஆதிசைவ சிவாசார்யார்களின் குரு துதியானது,

“ ஸதாசிவ ஸமாராம்பாம் ஸ்ரீ கண்டாச்சார்ய மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பரியத்தாம் வந்தே குருபரம்பராம் ”என்பதாகும்.

அதாவது ஸதாசிவமூர்த்தியாகிய சிவபெருமானையே தங்கள் குலதெய்வமாகவும், முழுமுதற் பரம்பொருளாகவும் வழிபடும் மரபும் பேறும் பெற்றவர்கள். இவர்கள் சிவபெருமானையே முதற்பரம் பொருளாக வழிபடும் மரபுடையவர்கள் என்பதால்தான், சிவபெருமானை ‘அநாதி சைவன் ‘ என்றும், சிவபெருமானுக்கு அடுத்த நிலையில் வைத்து இவர்களை ‘ஆதிசைவர்கள் ‘ என்றும் சைவ இலக்கிய நூல்கள் போற்றுகின்றன. சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் ஆதிசைவர்களை ‘ சைவ முதன் மறையோர் ‘ என்றும், ஆதிசைவ மரபை ‘ மாசிலா மரபு ‘ என்றும் போற்றுகின்றார். மாசிலா மரபு – குற்றமில்லாத மரபு. ஏனெனில் ஆன்மாக்களின் பாசத்தைப் போக்கச் சிவபூஜையை மரபுத் தொழிலாக கொண்டமையால் மாசிலா மரபு என்கிறார்.

வாழ்க ஆதிசைவர்கள் மரபு! வளர்க அவர்கள் சிவத்தொண்டு!!

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!