திருமடங்களும் ஆதிசைவர்களும்

குருத்துவம், ஆச்சாரியத்துவம் ஆதிசைவருக்கே உரியது. ஆகமவிதிப்படி சிவதீக்ஷை அளிக்கும் உரிமை ஆதிசைவருக்கே உண்டு. குருவாக இருந்து சிவஞானம் அளிக்கும் காரணாத்தால்தான் ஆதிசைவர்களுக்கு ‘குருக்கள்’ என்ற பெயர் ஏற்பட்டது, குருக்கள் என்ற பெயர் காரணத்தைக் கொண்டே ஆதிசைவர்களின் குருவத்துவத்தை அறிய முடியும்.

கடந்த காலங்களில் சிவாலயத்திற்கு அருகே ஆதிசைவர்களாகிய சிவாசாரியார் இல்லம் இருக்கும். இவர்களின் இல்லம் ஒவ்வொன்றும் சைவ மடமாகவே விளங்கியது. பல சைவர்களுக்கும், சைவ குடும்பங்களுக்கும் குலகுருவாக இருந்து ஆகம உபதேசகமும் சிவபக்தியையும் ஊட்டி வந்துள்ளார்கள்.

பெண்ணாகடத்தைச் சேர்ந்த மெய்கண்டாரின் தந்தை அச்சுதகளப்பாளருக்கு, திருத்துறையூர் சைவ சித்தாந்த ஆசிரியர் அருள்நந்தி சிவாசாரியார் குலகுருவாக இருந்த வரலாற்றை நாம் இங்கும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுபோன்று அக்காலத்தில் பல சைவ குடும்பங்களுக்கு, சைவ குருமார்களாக, குலகுருவாக இருந்து ஆதிசைவ சிவாசாரியார்கள் சிவ உபதேகம் செய்து வந்துள்ளார்கள்.

பதினெட்டு சைவ மடங்கள் என்பதே, சிவாசார்ய பெருமக்களுக்கு உரிய மடங்கள் என்பதே, சிவாசார்ய பெருமக்களுக்கு உரிய மடங்கள் என்பதும், அவர்களால் தோற்றுவிக்கப்பட்டவை என்பதும் வரலாற்று உண்மையாகும்.

பதினெண் மட்த்திற் பயிலு முதலிகளும் – திருவானைக்கா உலா
வெண்ணீற்று வண்டற் பதினெண் மட்த்தாரும் – திருக்காளத்திநாதர் உலா
சைவமார்க்க பதினெண் மட்த்தாரும் – திருப்பூவணநாதர் உலா.

போன்ற உலா நூல்களில் பதினென் மடங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
மேற்கண்ட உலா நூல்களுக்கு அரும்பதவுரையெழுதிய தமிழ் தாத்தா உ.வெ.சாமிநாதய்யர் அவர்கள் "பதினெண் மட்த்தார்" என்பது, சிவாகம பத்ததிகள் பதினெட்டும் இயற்றிய சிவாசாரியார்கள் பதினெண்மர்களுடைய பரம்பரையினர் என்றும், அந்த மரபில் வந்தவையே பதினெண் மடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

மேற்கண்ட செய்திகளை தமது ‘சைவ ஆதினங்கள்’ என்ற நூலில் எடுத்துக் காட்டியுள்ள தவத்திரு ஊரன் அடிகள், கீழ்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளார். மேற்குறித்த உலாநூல்கள் மூன்றிலும் காலத்தால் முற்பட்டது, காளமேகப்புலக்வர் பாடிய திருஆனைக்கா உலாவாகும். காலம் பதினைத்தாம் நூற்றாண்டு. அக்காலத்தில் பதினெண் மடங்கள் என்பது பத்ததி ஆசிரியர் பதினென்மர் பரம்பரை மடங்களையே குறித்த்து. சுத்த சைவ பதினெண் ஆதினங்கள் என்ற பட்டியலிற் காணப்பெறும் மடங்களிற் பல அக்காலத்தில் தோன்றவில்லை.

காளமேகப்புலவர் திருவானைக்கா உலா பாடிய பதினைந்தாம் நூற்றாண்டில் பதினெண்மடங்கள் என்றால் பத்ததிகள் செய்த சிவாசாரியார் பரம்பரை மடங்களே. பிற்காலத்தில் அவை இல்லாமல் போயின. பின்வந்தோர் அவை இன்னதென அறியாத நிலையில் தம் காலத்தில வழக்கிலுள்ள தமிழ்ச் சைவ மடங்கள் பதினெட்டு எனக் கூறப்பெற்றுவிட்டதால் தம் காலத்திலுள்ள மடங்களிற் பதினெட்டைப் பட்டியலிட்டுவிட்டனர்’ என்கிறார்.

அதாவது, முதலில் சைவ மடங்கள் பதினெட்டு என்பது ஆகம பத்ததி நூல் இயற்றிய சிவாசாரியார்கள் மடங்களே என்பதும், இந்தப் பதினெட்டு ஆகம மடங்கள் காலப்போக்கில் மறைந்து, அழிந்து போன பின்பு, பின்வந்தோர், சைவ ஆதினங்கள் பதினெட்டு என்று இப்பொழுது கூறக்கூடிய திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், மதுரை போன்ற ஆதீனங்களை சைவ மடங்கள் பதினெட்டு என்று பட்டியலிட்டனர் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. இதன்மூலம், மடங்கள் ஏற்படுத்தி முதன்முதலில் சைவமும் ஆகம்மும் தழைக்க அரும்பணியாற்றிவர்கள் ஆதிசைவ சிவாசாரியார்களே என்பது தெளிவாகத் தெரிகிறது.

மேலும், இன்று, பதினெட்டு சைவ ஆதினங்கள் என்று வழக்கிலுள்ள பட்டியலில் உள்ள குன்றக்குடி ஆதினமும், சூரியனார் கோயில் ஆதின்மும் ஆதிசைவர்களாகிய சிவாசாரியார்களால் தோற்றுவிக்கப்பட்டது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தைத் தோற்றுவித்தவர், திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்த ஸ்ரீ தெய்வசிகாமணி சிவாசாரியார் ஆவார். இவர் ஆதிசைவ அந்தணர். சிவாசாரிய மரபினர். இல்லறத்தார். சைவ சித்தாந்த ஆசிரியர்களில் ஒருவராகிய அருள்நந்தி சிவாசாரியாரின் நேர் மாணாக்கராவார். ஸ்ரீ தெய்வசிகாமாணி சிவாசாரியாரே சைவ சமயம் தழைத்தோங்க குன்றக்குடி ஆதினத்தை தோற்றுவித்தவர்.

அதேபோல் சூரியனார் கோயில் ஆதினம் ஸ்கந்த பரம்பரை வாமதேவசந்தானம். அதாவது கந்த பெருமானிடம் உபதேசம் பெற்ற வாமதேவ மகரிஷியின் வழியில் வந்த ’ஸ்ரீ சிவாக்கிரயோகிகள்’ என்ற ஸ்ரீ சிவக்கொழுந்து சிவாசாரியார் என்பவரால் சூரியனார் கோயில் ஆதினம் நிறுவப்பட்டது. இவர் ஓர் ஆதிசைவ அந்தணர்.

சோழ தேசத்தில் மருதாந்த சோழபுரத்தில் அவதரித்தருளின சிவாக்கிரகயோகிகள் என்னும் சிவக்கொழுந்து சிவாசாரியாருக்கு’ என்பது இவரைப் பற்றிய குறிப்பு, என்பார் தவத்திரு ஊரன் அடிகள். சிவ வழிபாடும், சிவாகமங்களும், சைவ சமயமும் தழைத்தொங்க ஆதிசைவ சிவாசாரியார்கள் பல மடங்களை நிறுவித் தொண்டு செய்து, மக்களுக்கு நன்முறையில் சிவஞானம் அளித்து நல்வழி காட்டியுள்ளார்கள். காலப்போக்கில் சிவாசார்ய மடங்கள் எல்லாம் அழிந்து போயின அல்லது வளர்ச்சி குன்றின. இதற்கான காரணம் தமிழகத்தின் இடைக்காலத்தில் ஏற்பட்ட மாற்று தேசத்து மன்னர்களின் ஊடுறுவல்களும், அரசியல் மாற்றங்களுமே ஆகும். மேலும், ஸ்ரீ அகோர சிவாசாரியார் தம்முடைய பத்ததி நூலில் மகோற்சவ விதிப் படலத்தில் பதினைந்து மடங்களின் பெயர்களைக் கூறியுள்ளார்.

1. கைலாச மடம் 2. பெளண்ரக மடம் 3. வலாக மடம் 4. கற்பகிராம மடம் 5. பதரீ மடம் 6. தேவதாருவன மடம் 7. கந்தர்ப்ப மடம் 8. உத்தராரண்யகம் மடம் 9. தக்ஷிணாரண்யகம் மடம் 10. கோவிதார மடம் 11. ஆமந்தக மடம் 12. மத்த மடம் 13. மாயூர மடம் 14 ரணபத்ர மடம் 15. சோழக மடம்.
இந்த பதினைந்து ஆகம சைவ மடங்களும் சிவாசாரியார் தலைமையில் இயங்கி வந்துள்ளன.
மேற்கண்ட பத்ததி ஆசிரியராகிய ஸ்ரீ அகோர சிவாசாரியார் கி.பி.பதினோறாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர். சிதம்பரம் ஸ்ரீ அனந்தேஸ்வரன் கோயில் அருகே திருமடம் ஒன்றை நிறுவினார். இதற்கு ’ஸ்ரீ அகோர சிவாசாரியார் மடம்’ என்று பெயர். இம்மடத்தின் துருவாச முனிவரீன் திருவுருவம் அமைந்துள்ளது. இம்மடத்தில் வீற்றிருந்தே அகோர சிவாசாரியார் ஆகம உபதேசம் செய்தும், பல ஆகம நூல்களை இயற்றியதாகவும், ’சிதம்பரஸார’ என்ற நூலில் கூறப்பட்டிருக்கின்றது. இப்பொழுது இம்மடம் ‘மேலமடம்’ என்று அழைக்கப்படுகிறது. சிவாசாரிய மரபில் வந்த இம்மடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஸ்மார்த்த பிராமணர் தலைமையில் செயல்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது.

இன்றைக்கு, ஆதிசைவ சிவாசாரியார்கள் தலைமையில் இரண்டு திருமடங்களே வழிவழியாக இருந்து சைவபணியும், சிவபணியும், ஆற்றி வருகின்றன. அவை,

1. கூனம்பட்டி ஆதினம்
கூனம்பட்டி மாணிக்கவாசகர் மடாலயத்தை நிறுவியவர் ஸ்ரீ மாணிக்கவாசகரின் சீடராகிய, அணுக்கத் தொண்டர் மாணிக்கப்பண்டிதர் என்பவர். இவர் சோழநாட்டு வாட்போக்கி என்னும் ரத்தினகிரியில் ஆதிசைவர் மரபில் தோன்றியவர். ரத்தினகிரிப் பெருமானை முப்பொழுதும் தீண்டி வழிபடும் பரம்பரையினர் கல்வி, அறிவு, ஒழுக்கங்களிலும், சிறப்புற்றும் வேத ஆகம சாஸ்திரங்களிலும், மந்திர சாஸ்திரங்களிலும் புலமை பெற்று விளங்கினார்.

இவர் மதுரை சென்று மீனாட்சி அம்மை சமேத சொக்கநாதப் பெருமானை வழிபட்டு வந்த நாளில், சமயக்குரவர் நால்வரில் ஒருவரான ஸ்ரீ மாணிக்காசகப் பெருமானை கண்டு தரிசித்து, கண்ணீர் ததும்ப அவரின் அணுக்கத்தொண்டராக தொண்டு செய்யும் பேறு பெற்றார். மாணிக்கவாசகப் பெருமானோடு பல தலங்களுக்கும் தலயத்திரை செய்து வந்தார். இந்நிலையில் மாணிக்கவாசகர் சிவபெருமான் திருவடிகளில் மனம் பதித்தவராக, தில்லை சிதம்பரத்தை வந்தடைந்தார். சிவகாமவல்லி உடனுறை நடராஜப் பெருமானை கண்டு தரிசித்த வேளையில், நிழல்போல் தன்னை விட்டுப் பிரியாமல் ஆணுக்க தொண்டராக விளங்கும் சீடர் மாணிக்கவாசகப் பண்டிதருக்கு ஞானதீக்ஷையும், ஞான உபதேசமும், சிவானந்த வெள்ளத்தினாலே ஞானாபிஷேகம் செய்தருளினார். அவருக்கு மாணிக்கவாசர் என்ற தம்முடைய திருநாமத்தைச் சூட்டி அருளினார். பின்னர் மாணிக்கப் பண்டிதர் பூஜித்துவரும் ஸ்ரீ ராஜலிங்க மூர்த்தியோடு, தம் ஆன்மார்த்த மூர்த்தியாகிய மீனாட்சி சுந்தரேஸ்வரரையும் பூஜித்து வருமாறு அருள் செய்து, சைவ பரிபாலனம் செய்து வருவாயாக என்று அருளாசி வழங்கி விடை கொடுத்தார்.

கூனம்பட்டி ஆதீனம், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகில் உள்ளது. இந்த ஆதீனத்தின் குருபரம்பரை வாழையடி வாழையெனப் பெருகியது. இந்த ஆதீனத்தில் பீடமேறுபவர் தங்கள் பெயரோடு மாணிக்கவாசகர் என்ற குருநாமத்தை சேர்த்துக்கொள்ளுவார்கள். மேலும், இந்த குருபரம்பரையில் வருபவர்களை ‘மாணிக்க சாமி’ என்று அழைக்கும் மரபும் உள்ளது.

இந்த ஆதீனத்தின் குருமகா சந்நிதானமாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ ராஜலிங்க மாணிக்கவாச ஸ்வாமிகள் காலத்தில், சமண இளவரசனின் கூன் நிமிர்த்தி அருள் செய்த காரணத்தால் சுவாமிகள் தங்கிய திருமடம் பகுதி ‘கூனம்பட்டி’ எனப் பெயர் பெற்றது. கூன் நிமிர்ந்த இளவரசனுக்கு சுவாமிகள் மடாலயத்திலேயே திருமணம் செய்துவைத்தார்கள். அதுபற்றியே கூனம்பட்டிக்கு ‘கல்யாணபுரி’ என்ற பெயரும் வழங்குவதாயிற்று.

இந்த ஆதீனத்தின் ஜம்பத்தி ஐந்தாம் குருபீடமாக இருந்து அருளாட்சி புரிந்தவர் ஸ்ரீலஸ்ரீ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள். இவர் சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணத்தை தன் அனுபுதி ஞானத்தால் தமிழுலகமும், சைவ உலகமும் வியக்கும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றி வந்துள்ளார்கள். அதுகண்ட சிவநேய சான்றோர்கள் இவரை ‘ கோவை சேக்கிழார்’ என்று அழைத்து பெருமைப் படுத்தினார்கள்.

கொங்கு தேசத்தில், பல சைவ அன்பர்களுக்கு ஆகமவிதிப்படி சிவதீக்ஷை அளித்து சிவஞான உபதேசம் செய்து சைவபரிபாலனமும், சிவபரிபாலனமும் செய்து வரும் திருக்கையிலாய பரம்பரை கல்யாணபுரி எனப்படும் கூனம்பட்டி ஆதீனத்தில் இப்பொழுது 57 ஆம் பட்ட்த்தில் குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ ராஜலிங்க சரவண மாணிக்கவாசக சுவாமிகள் அமர்ந்து ஞானச்செங்கோலோச்சி செய்துவருகிறார்கள்.

2. சீர்காழி சட்டநாத சுவாமிகள் மடம்

சீர்காழி ஸ்ரீ சட்டநாத சுவாமிகள் திருமடம் ஆதிசைவ சிவாசாரியாரை குரும்முதல்வராக்க் கொண்ட திருமடமாகும். இந்தத் திருமடம் முதலில் சீர்காழியில் இருந்து சைவ பணியும் சிவபணியும் ஆற்றி வந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் சென்னை கோமாலீஸ்வரன் பேட்டையில் இந்தத் திருமடமானது வந்து நிலைபெற்றது. பல சைவ அன்பர்களும் பக்தர்களும் இம்மடம் வந்து குரு உபதேசமும், சிவஞானமும் பெற்றுச் செல்கிறார்கள். இந்தத் திருமடத்தின் ஆன்மார்த்த மூர்த்தியாக காமாட்சி அம்மன் உடனுறை அகத்தீஸ்வரர் ஸ்வாமி வீற்றிருந்து அருள்புரிகிறார்.

சட்டநாத ஸ்வாமிகள் திருமட்த்தின் குருமார்களில் ஒருவரான ஸ்ரீ சாம்பசிவ சிவாசாரியாரின் மனைவியார் பெரும் சித்தராக விளங்கியவர். ஸ்ரீ அனந்தம்மாள் என்பது இவரது இயற்பெயராகும். இந்த அம்மையார் ஸ்ரீ சக்ரபூஜை உபாசனை சிறப்பாகச் செய்துவந்ததால், ‘ஸ்ரீ சக்கர அம்மாள்’ என்று அழைக்கப்பட்டார். தமிழ்த் தென்றல் திரு. வி.க. அவர்கள், ‘இந்த அம்மையார் பறக்கும் ஆற்றல் பெற்றிருந்ததாக’ தம் நூலில் குறித்துள்ளார். இவருடைய ஜீவசமாதி திருவான்மியூரில் உள்ளது. பல சித்துகளைச் செய்து பக்தர்களுக்கு அருள்புரிந்த இவர் ஆதிசைவ சிவாசாரியார் மரபில் வந்த அம்மையார் ஆவார்.

இன்றும் சட்டநாத சுவாமிகள் திருமடம் பல சைவ அன்பர்களுக்கு சிவதீக்ஷை அளித்து சைவசமயம் வளரவும் சிவபக்தி பெருகவும் பல பணிகளை தொண்டினை சிறப்புற செய்து வருகின்றது. காஞ்சிபுரத்தில் காலாண்டார் என்னும் பெயரில் தெரு ஒன்று உள்ளது. காலாண்டார்கள் எனப்படும் ஆதிசைவர்களின் மடம் ஒன்று இத்தெருவில் இருந்ததால் இப்பெயர் பெற்றாதென்பர். ‘இவர்கள் சிவவடிவமாகிய பைரவ மூர்த்தியை உபாசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு ஏகாம்பரேஸ்வர்ர், காமாட்சி அம்மன் ஆலயங்களில் கால்பங்கு ஆளுமை இருந்ததால் ’காலாண்டார்கள்’ என அழைக்கப்பட்டனர்’. இவர்களை வடமொழியில் ‘சதுர்பாக மிராசுதாரர்கள்’ என்று அழைக்கின்றனர் என்று கூறுகிறார் சிவசுந்தரி பூசை. ச.ஆட்சிலிங்கம் அவர்கள்.

கொங்கு குல குருக்கள்

இதேபோல், தமிழகத்தில் கொங்கு நாட்டில் பல சைவ மடங்களை நிறுவி ஆதிசைவர்கள் சில பணியும் சைவ சமயத் தொண்டும் செய்துவருகிறார்கள். ஆதிசைவ குருக்கள்கள் கொங்கு தேசத்தில் கொங்கு குடிமக்களுக்கும், பிற குடிமக்களுக்கும் குலகுருவாக வீற்றிருந்து பல தலைமுறைகளாக அவர்களின் குடும்பங்களின் நலன் கருதி சிவபூஜை, சிவ உபதேசம், செய்து அவர்களிக்கு நல்வழி காட்டி வந்துள்ளனார்.

குருபீடம் உயர குடி உயரும்’ என்ற வாக்கிற்கெற்ப கொங்கு தேசத்து மக்களும் அவர்களின் குல குருக்களை நன்கு ஆதரித்து வந்தனர். கொங்கு தேசத்து பூர்வ குடிகள் ஐம்பத்தோரு ஆதிசைவ ஆதினங்களை நிறுவினர். இந்த 51 ஆதினங்களும் குருகுலங்கள், குருமடாலயங்கள் என்று அழைக்கப்பட்டன. குலதெய்வத்தை வழிபடுவது போன்று தங்களின் குலகுருக்களையும் போற்றி வந்தனர். தெய்வம் குலகுருவின் மூலமே நன்மை அளிக்கும் என்ற நம்பிக்கை கொண்டனர்.

மேலும், தங்கள் குலகுருக்கள் திருமடம் அமைத்து இருந்த பகுதிகளை அய்யம்பாளையம், குருக்கள்பட்டி, குருக்கள்பாளையம் என்று குருவின் பெயரை நினைவுபடுத்தும் விதமாக ஊரின் பெயரை சூட்டிக் கொண்டார்கள். கொங்கர் கொங்குதேசம் வருகையிலேயே குருக்களையும் அழைத்து வந்தனர் என கொங்கு காணிப்பட்டயம் கூறுகின்றது. ஆதிசைவ குருக்கள்கள் கொங்கு தேசத்தில் பல்வேறு குடிகளுக்கு குலகுருக்களாக இருந்து சைவசமய பரிபாலனம், சிவபரிபாலனம் செய்து வருகின்றார்கள். இவர்களின் சைவ மடங்கள் விபரம் வருமாறு:

கொங்கு நாட்டு ஆதிசைவ திருமடங்கள்:
1. ஸ்ரீலஸ்ரீ சிவசமய பண்டித குருசுவாமிகள், சிவகிரி மடம்.
2. ஸ்ரீமத் இம்முடி சிற்றம்பல குருசுவாமிகள், அருணகிரி அய்யம்பாளையம் மடம்.
3. ஸ்ரீமத் நாயனார் தில்லைச் சிற்றம்பல குருசுவாமிகள், தாரமங்கலம் மடம், குருக்கள்பட்டி.
4. ஸ்ரீமத் அழகிய தில்லைச் சிற்றம்பல குருசுவாமிகள், கல்லங்குளம் மடம், ராசிபுரம்.
5. ஸ்ரீமத் கனகசபாபதி பண்டித குருசுவாமிகள், வள்ளியறச்சல் மடம், குருக்கள்பட்டி.
6. ஸ்ரீமத் மீனாட்சி சைவபுரந்தர பண்டித குருசுவாமிகள், காடையூர் மடம்.
7. ஸ்ரீமத் கொடுமுடிப் பண்டித குருசுவாமிகள், கீரனூர் மடம்.
8. ஸ்ரீமத் ஒரு நான்கு வேதாந்த பண்டித குருசுவாமிகள், பாப்பினி மடம்.
9. ஸ்ரீமத் பாலசக்தி சைவ சிகாமணி பண்டித குருசுவாமிகள், பரஞ்சேர்வழி மடம், ஆலாம்பாடி.
10. ஸ்ரீமத் சந்திரசேகர பண்டித குருசுவாமிகள், வெள்ளக்கோயில் மடம், மயிலரங்கம்.
11. ஸ்ரீமத் ஆலாலசுந்தர பண்டித குருசுவாமிகள், மருதுறை மடம், குறுக்குப்பாளையம்.
12. ஸ்ரீமத் சைவசிகாமணி குலசேகர பண்டித குருசுவாமிகள், ஸ்ரீ முத்தூர் சந்தான மடம்.
13. ஸ்ரீமத் கனககிரி பண்டித குருசுவாமிகள், பட்டாலி மடம்.
14. ஸ்ரீமத் கனகசபாபதி பண்டித குருசுவாமிகள், ஸ்ரீகண்ணாபுரம் மடம்.
15. ஸ்ரீமத் கொற்றனூர் சடைய பரமேஸ்வர பண்டித குருசுவாமிகள், இலக்கமநாயக்கன்பட்டி மடம்.
16. ஸ்ரீமத் கனகசபாபதி பண்டித குருசுவாமிகள், போரூர் மடம்.
17. ஸ்ரீமத் சுந்தர சென்னிகிரி பண்டித குருசுவாமிகள், பழனி கீரனூர் மடம்.
18. ஸ்ரீமத் சிவசமய பண்டித குருசுவாமிகள், கீழ்சாத்தம்பூரி மடம்.
19. ஸ்ரீமத் மார்கண்டேய பண்டித குருசுவாமிகள், இருகூர் மடம்.
20. ஸ்ரீமத் மாணிக்கநாயக சந்திரசேகர பண்டித குருசுவாமிகள், கொடுமுடி மடம்.
21. ஸ்ரீமத் ஆலாலசுந்தர ஹர்தன வாக்கிய புத்திர சந்தான குருசுவாமிகள், தென்சேரி மலை மடம்.
22. ஸ்ரீமத் ராசமணிக்க ஸ்ரீ ஆலாலசுந்தர பண்டித குருசுவாமிகள், வலையப்பாளையம் மடம், கருவனூர்.
23. ஸ்ரீமத் ஞான சிவாசாரியார் குருசுவாமிகள், போரூர் மேலை மடம்.
24. ஸ்ரீமத் தியாகராஜ பண்டித குருசுவாமிகள், பல்லா கோயில் மடம்.
25. ஸ்ரீமத் மூவேந்திர பண்டித குருசுவாமிகள், தோளூர் மடம், மொஞ்சனூர்.
26. ஸ்ரீமத் கல்யாண பசுபதி பண்டித குருசுவாமிகள், கருவூர் மடம், கரூர்.
27. ஸ்ரீமத் சுந்தர வாகீச சென்னிகிரி பண்டித குருசுவாமிகள், பிடாரியூர் மடம்.
28. ஸ்ரீமத் மூவேந்திர பண்டித குருசுவாமிகள், வெள்ளோடு மடம்.
29. ஸ்ரீமத் நல்மணி வேதாந்த பண்டித குருசுவாமிகள், கத்தங்காணி மாடம், முதலிபாளையம்.
30. ஸ்ரீமத் ஆண்ட சிவசுப்ரமண்ய பண்டித குருசுவாமிகள், கருமாபுரம் மடம்.
31. ஸ்ரீமத் ஆதிசைவ புரந்திர பண்டித குருசுவாமிகள், சாந்தம்பூர் மடம்.
32. ஸ்ரீமத் சிவராஜ பரமேஸ்வர பண்டித குருசுவாமிகள், மூலனூர் மடம்.
33. ஸ்ரீமத் காவேரி பரமேஸ்வர பண்டித குருசுவாமிகள், மாம்பாடி மடம்.
34. ஸ்ரீமத் உமாபதி பண்டித குருசுவாமிகள், நஞ்சை இடையார் மடம்.
35. ஸ்ரீமத் இம்முடி சிற்றம்பல குருசுவாமிகள், நடத்தை மடம்.
36. ஸ்ரீமத் ஆண்ட சிவசுப்ரமணிய பண்டித குருசுவாமிகள், பெருந்துறை சான்றோர் குலகுரு மடம்.
37. ஸ்ரீமத் திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளல் குருசுவாமிகள், வள்ளல் தலையூர் மடம்.
38. ஸ்ரீமத் திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளல் குருசுவாமிகள், வள்ளல் பழங்கரை மடம்.
39. ஸ்ரீமத் திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளல் குருசுவாமிகள், வள்ளல் மயில் ரங்கம் மடம்.
40. ஸ்ரீமத் திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளல் குருசுவாமிகள், வள்ளல் வடகரை மடம்.
41. ஸ்ரீமத் ஆண்ட சிவசுப்ரமணிய பண்டித குருசுவாமிகள், ஏனாதிநாயனார் மடம், திருமுருகன் பூண்டி.
42. ஸ்ரீமத் பராபர பண்டித குருசுவாமிகள், அலங்கியம் மடம்.
43. ஸ்ரீமத் இம்முடி அகோர தர்ம சிவாசார்ய பண்டித குருசுவாமிகள், நெரிஞ்சிப்பேட்டை மடம்.
44. ஸ்ரீமத் மெய்ஞான தேசிக பண்டித குருசுவாமிகள், சிறுகிணர் மடம்.
45. ஸ்ரீமத் விஸ்வநாத சைவபுடந்தர பண்டித குருசுவாமிகள், பவித்ரம் மடம்.
46. ஸ்ரீமத் உத்தம பண்டித குருசுவாமிகள், புலுவர் தீக்ஷாகுரு மடம்.
47. ஸ்ரீமத் தேவேந்திர சைவ புரந்திர பண்டித குருசுவாமிகள், புகழுர் மடம்.
48. ஸ்ரீமத் ஆலாலசுந்த பண்டித குருசுவாமிகள், செட்டிபாளையம் மடம்.
49. ஸ்ரீமத் ஏழுகரைநாட்டு நம்பி சதாசிவ பண்டித குருசுவாமிகள், திருசெங்கோடு மடம்.
50. ஸ்ரீமத் உத்தம பண்டித குருசுவாமிகள், காங்கேய மடம்.
51. ஸ்ரீமத் நவரத்னநாயக பண்டித குருசுவாமிகள், பவானி திருமடம்.
52. ஸ்ரீமத் வீகிர்தீவர வேதாந்த பண்டித குருசுவாமிகள், திருவெஞ்சமாக்கூடல் மடம்.
53. ஸ்ரீமத் ஆகம பண்டித குருசுவாமிகள், புத்தூர் மடம்.
54. ஸ்ரீமத் சிவஞான பண்டித குருசுவாமிகள், கரையூர் மடம்.
55. ஸ்ரீமத் குலோத்துங்க வேதநாயக பண்டித குருசுவாமிகள், திருச்செங்கோடு மடம்.

மேற்கண்ட சைவ ஆதிச்னங்கள் அக்காலங்களில் கொங்கூ நாட்டில் சைய சமயமும், பக்தி இயக்கமும் கிராமங்களில் சிறப்புற வளர்ந்திட தொண்டாற்றியுள்ளனர். சிவசம்ஸ்கார உடையராம் தன்மை ஆதிசைவர்களுக்கு ஜென்மத்திலேயே வந்த்தாகும். குருக்கள், சிவாசாரியார் என்பவை ஆதிசைவர்க்கே உரிய பட்டமாகும். ஆதிசைவர்களுக்கே ஆச்சாரியாத்துவம் சொந்த நிதி ஆதிசைவர்கள் ஸ்வயம்புவாக ஆசாரிய புருஷர்கள் எனவேதான் ஆகம பிராமணத்தாலும், உலக வழக்காலும் ‘குருக்கள்’ என அழைக்கப்பட்டு வருகின்றார்கள்.

குருவுக்குள்ள தர்மம் சிவபெருமானை காட்டுவது. அதன்படி, சைவ நன்மக்களுக்கு சிவதீக்ஷைகளை அவரவர் பக்குவத்திற்கு ஏற்றவாறு செய்து வைக்கும் ஆச்சார்ய அதிகாரம் ஆதிசைவர்களாகிய சிவாசாரியார்களுக்கு உள்ளது என்று ஆகமங்கள் கூறுகின்றன. அந்த வகையில், ஆதிசைவ சிவாசாரியார்கள் கடந்த காலங்களில் பல சைவ மடங்களையும் ஆகம மடங்களையும் தோற்றுவித்து குலகுருவாக, மடாதிபதிகளாக விளங்கி சைவ சமயத்தொண்டும் சிவப்பணியும் ஆற்றி வந்துள்ளார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடியும்.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!