ஆலயங்கள்!

ஆலயம் என்பது ஆன்மாக்கள் இறையருளில் லயப்படும் இடம் என்பது பொருள். “ஆலயந் தானும் அரனெனத்தொழுமே” என்பது சிவஞானபோத சூத்திரமாக அமைந்துள்ளது. ஆலயங்கள் ஆண்டவனைச் சிந்திக்கவைக்கும் இடங்கள் என்பதை இந்த அடிகள் வலியுறுத்துகின்றன. இதனால் ஜீவாத்மாக்கள் பரமாத்மாவில் லயப்பட்டு  அவனருள் பெறும் இடமாகக் கருதப்படுகின்றது. ஆலயங்களைக் கோவில்கள் என்றும் கூறுவர்.  இது இறைவன் மகிழ்வொடு இருக்கும் இடம் என்பர். இதனால் தமிழ் மூதாட்டியான ஒளவைப்பிராட்டியும்‚ கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்‛ என்று கூறியுள்ளார். “திருக்கோவில் இல்லாத திருவிலூர்” எனத் திருமுறைகளும் எடுத்துறைக்கின்றது. இதிலிருந்து கோவில்களின் முக்கியத்துவம் விளங்குகின்றது.

ஆலயங்கள் வழிபாடுகளுக்கு மட்டுமின்றி விக்ஞான ரீதியாகவும் நமக்கு பல நன்மைகளை தருகின்றது. பொதுவாக பழமை வாய்ந்த ஆலயங்கள் பல ஏக்கர் நில பறப்பு கொண்டதாக அமைந்திருக்கும். ஆலயங்கள் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம்,விசுத்தௌ, பிரஹ்மரந்திரம் என தத்துவங்களை அடிப்படையாக கொண்டு அமைக்க பெற்றிருக்கும். ஆலயத்தின் கற்பக்ரஹம் சிரசாகவும், ராஜகோபுரம் பாதமாகவும் விளங்குகின்றது. காற்றில் கலந்திருக்கும் இறை சக்தியை (Positive energy) யை பிரதிஷ்டையின் (கும்பாபிஷேகத்தின்) போது யாகசாலை அமைத்து ஒரு கலசத்தில் ஆவாகனம் செய்து நான்கு காலம், ஆறு காலம், எட்டு காலம், பன்னிரெண்டு காலம் என பூஜைகள் செய்யப்படுகின்றது. இவ்வாறு பூஜை செய்த கலசத்தில் இருந்து கற்ப கிரகத்தில் இருக்கும் விக்ரஹத்திற்கு (நாம் வழிபடும் திருமேனிக்கு)தர்பை கயிற்றின் மூலம் இறை சக்தியை கலாகர்ஷணம் என்று சொல்லக்கூடிய தத்துவ பூஜைகள் செய்து, அந்த கலசத்தை இறைவனின் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் பொழுது விக்ரஹத்தின் ( இறைவனின் திருமேனியின்) கீழே வைக்க பட்டுள்ள எந்திரமானது சக்தியூட்ட படுகிறது. அந்த சக்தியானது இறைவனின் திருமேனி மூலமாக நமக்கு கிடைக்கிறது. அந்த சக்தி இறைவனின்திருமேனியில்(யந்திரத்தில்) குறையாமல் இருக்க (Battery recharge செய்வது போல்)ஆலயங்களில் நான்கு, ஆறு மற்றும் எட்டு கால பூஜைகள் செய்யப்படுகிறது.

பல ஏக்கர் பரப்பில் உள்ள ஆலயங்களை நாம் சுற்றி வரும் பொழுதும், நமஸ்காரம், தியானம், பிராணாயாமம் (மூச்சிப்பயிற்ச்சி) ஆகியன செய்யும் பொழுதும் நமது உடலும் உள்ளமும் புத்துணர்சி அடைகிறது. திருக்கோவில்களை வழிபடுவதன் மூலம் மக்கள் அருட்செல்வம், பொருட்செல்வம் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கின்றனர். ஆலயங்கள் மூலமாக கலை, கலாசாரப் பண்பாடுகள் வளர்க்கப்படுகின்றன. சமயநெறிகள், ஆன்மீக சிந்தனைகள் மக்களுக்கு உணர்த்தப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

 

 

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!