ஆகமங்களும்,ஆதிசைவர்களும்
சைவ சமயத்தில் முதல் நூல்கள் இரண்டு. அவை வேதம், சிவாகமம். இவற்றுள், வேதத்தை பொது நூல் என்றும் ஆகமத்தை சிறப்பு நூல் என்றும் அழைப்பார்கள், இதனை திருமூலர் தமது திருமந்திரத்தில்,
"வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டத்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே"
என்று பாடியுள்ளார்.
இதே கருத்தை சைவ சித்தாந்த நூல் சிவஞான சித்தியார்,
"ஆரணநூல் பொது சைவம் அருஞ்சிறப்பு நூலாம்
நீதியினால் உலகர்க்கும் சத்தி நிபாதர்க்கும் நிகழ்த்தியது’ என்று கூறுகின்றது.
ஆதிசைவகளாகிய சிவசாரியார்கள் வேதங்களை பொதுவாகக் கொண்டு சிவபெருமானால் அருளப்பட்ட சிறப்பு நூலாகிய சிவாகமங்களையே தங்கள் வாழ்வில் பிரமாணமாகக் கொண்டவர்கள்.ஆகமமானது ஸதாசிவமூர்த்தியின் ஈசானம் தத்புருஷம், அகொரம்,வாமதேவம், ஸத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களில் மேல்முகமாகிய ஈசான திருமுகத்தில் இருந்து ’ஈசானஸ் ஸர்வ வித்யாணாம்’ என்ற வாக்கிற்கேற்ப எட்டு ஆகமங்களும் தத்புருஷம் முதலிய நான்கு முகங்களில் இருந்தும் ஐந்து ஐந்தாக இருபது ஆகமங்களும் ஆக மொத்தம் 28 ஆகமங்கள் தோன்றின.
சிவபெருமான் தனது சத்யோஜாத முகத்தில் இருந்து, காமிகம், யோகஜம் சிந்தியம், காரணம் அஜிதம் என்ற ஐந்து ஆகமங்களையும், வாமதேவம் என்ற திருமுகத்தில் இருந்து, தீப்தம், சூக்ஷ்மம், ஸஹஸ்ரம், அம்சுமான், சுப்ரேதம் என்ற ஐந்து ஆகமங்களையும், அகோரம் என்ற திருமுகத்தில் இருந்து விஜயம், நிச்வாசம், சுவாயம்புவம், அநலம், வீரம் என்ற ஐந்து ஆகமங்களையும், தத்புருஷம் என்ற திருமுகத்தில் இருந்து ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம் என்ற ஐந்து ஆகமங்களையும், ஈசானம் என்ற திருமுகத்தில் இருந்து புரோத்கீதம்,லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம் பாரமேஸ்வரம், கிரணம், வாதுளம் என்ற எட்டு ஆகமங்களையும் அருளிச் செய்தார்.
இந்த இருபத்தெட்டு ஆகமங்களும் சிவபேதம், ருத்ரபேதம் என்று இருவகைப்படும். சத்யோஜாதம், வாமதேவம் ஆகிய இருமுகங்களில் இருந்து அருளிய பத்து ஆகமங்கள் சிவபேதமாகும். ஈசானம், தத்புருஷம், அகோரம் ஆகிய மூன்று முகங்களிலிருந்து அருளிய பதினெட்டு ஆகமங்கள் ருத்ரபேதமாகும். மேற்கண்ட இருபத்தெட்டு ஆகமங்களும் ‘மூல ஆகமங்கள்’ என்று அழைக்கப்படும். இவையன்றி உப ஆகமங்கள் 207 உள்ளன. சிவபெருமான் தனது ஐந்து திருமுகங்களில் இருந்து இருபத்தெட்டு ஆகமங்களையும் அருளினார் என்பதை திருமூலர் தமது திருமந்திரம், ‘அஞ்சனமேனி அரிவையோர் பாகத்தன்’ என்னும் பாடலிலும், மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில், ‘மன்னு மாமலை மகேந்திரம்’ என்று தொடங்கும் பாடலிலும் பாடியுள்ளார்கள்.
ஆகமங்கள் ஒவ்வொன்றும், சரியை, கிரியை, யோகம், ஞானம், என்று நான்கு பாதங்களாக (பிரிவுகளாக) உள்ளன.
1.சரியாபாதம்: ஆகமங்களில் உள்ள நடைமுறை விதிகள் இதில் கூறப்பட்டுள்ளன. அதாவது திருகோயில் அலகிடுதல், மெழுகுதல், திருநந்தவனம் அமைத்தல், அனுஷ்டானம் போன்ற சரீரத்தால் செய்யப்படும் பணிகளை விளக்குகின்றது.
2.கிரியாபாதம்: தீக்ஷை பற்றியும், ஆலயங்களை நிர்மாணம் செய்வது பற்றியும், இறை பிம்பங்களில் உருவ அமைப்பு பற்றியும், பிரதிஷ்டை,கும்பாபிஷேகம் செய்யும் முறைகள் பற்றியும், உத்ஸவ விழாக்கள் செய்வது பற்றியும் கூறுகிறது. பொதுவாக சிவாகம விதிப்படி பூஜைகள் செய்யும் முறைகளை கூறும் பகுதி கிரியாபாதம் ஆகும்.
3.யோகபாதம்: அஷ்டாங்க யோகங்களைப் பற்றியும் பூதசுத்தி, அந்தர்யாகம் போன்ற யோக நிலைகள் இந்த யோகபாதத்தில் கூறப்பட்டுள்ளன.
4.ஞானபாதம்: பதி,பாசம்,பசு பற்றிய முப்பொருள் உண்மைகளை விளக்கும் பகுதி ஞானபாதம் ஆகும். ஆகம தத்துவங்களை அறியும் பகுதியாகவும் உள்ளது. சிவாகமத்தில் இந்த ஞானபாதமே ’சைவ சித்தாந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சிவாகமங்களே சைவ சித்தாந்த நூலாக விளங்குகின்றது என்பதனை, பதினொறாம் திருமுறையில் திருக்கழுமல மும்மணிக் கோவையில், பட்டிணத்து அடிகள்,” கைவலம் நெல்லியங் கனியது போலச்சைவசித்தாந்தத் தெய்வ ஆகமத்தை வரன்முறை பகர்ந்த திருமலர் வாய “ என்று பாடியுள்ளார்.
சைவசித்தாந்த நூல்களில் ஒன்றான சிவஞான சித்தியாரில், வேதநூல் சைவ நூல் என்று இரண்டே நூல்கள், வேறு உரைக்கும் நூல்கள் இவற்றின் விரிந்த நூல்கள், ஆதிநூல் அநாதி அமலன் திருநூல் இரண்டும், ஆரணநூல் பொது சைவம் அருஞ்சிறப்பு நூலாம் நீதியினால் உலகர்க்கும் சத்திநிபாதர்க்கும் நிகழ்த்தியது நீள் மறையின் ஒழிபொருள் வேதாந்தத்தீது இல் பொருள்கொண்டு உரைக்கும் நூல் சைவம்பிறநூல் திகழ்பூர்வம் ‘சிவாகமங்கள் சித்தாந்தம்’ “ ஆகும் என்று அருள்நந்தி சிவாசாரியார் சிவாகமங்களே சித்தாந்தமாகும் என்பதனைத் தெளிவு செய்து பாடியுள்ளார்.
ஆகமங்களின் சாரமாக திருமூலரால் பாடப் பெற்ற திருமந்திரத்தில் தான் ‘சைவ சித்தாந்தம்’ என்ற சொல் முதன் முதலில் வருகின்றது. "கற்பன கற்றுக் கலைமன்னும் மெய்யோகம் முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே சொற்பதம் மேவித் துரிசற்று மேலான தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே” என்று சைவசித்தாந்தத்தை சிறப்பித்துக் கூறுகிறார் திருமூலர். மேலும், சிவஞான சித்தியார் –பரபக்கம் நூலில், படிக்கும் நூல்கள் சிவாகமம் ; பசுபாசமோடு பதித்திறம் எடுத்து இயம்புவது ஈசன்; வார்கழல் ஏத்திடும் என்று அருள்நந்தி சிவம் பாடியிருக்கின்றார். அதாவது பேரின்பம் எய்த விரும்புபவர் படிக்கும் நூல்கள் சிவாகமங்கள் ஆகும். அவை பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மைகளை எடுத்து கூறும் நூல்களாக விளங்குகின்றன என்று கூறுகிறார். இவ்வாறு நமது சைவ சமய அருளாளர்கள் சிவாகமங்களே சைவ சித்தாந்த தத்துவமாக விளங்குகின்றன என்று தெளிவுபடுத்தி உறுதிபடக் கூறுகின்றனர்.
மேலும், இந்த ஆகமங்களில் வழிநூல்களாக பதினெட்டு சிவாசாரியார்கள் பத்ததி நூல்களை (பத்ததி என்றால் வழி, பாதை அல்லது ஒழுங்கு செய்தல் எனப் பொருள்படும்) அருளிச் செய்தனர். இந்த பத்ததி நூல்கள் ஆகமவிதிப்படி பூஜைகள், கும்பாபிஷேகம், உத்ஸவங்கள் செய்வது பற்றியும், சிவதீஷை, அனுஷ்டானம், சிவபூஜை போன்றவற்றின் முறைகளைப் பற்றியும், ஆலய நடைமுறைகள் பற்றியும், விரிவாகவும், விளக்கமாகவும், விவரித்துக் கூறுகின்றன. இந்த பத்ததி நூல்கள் ஆகமங்களுக்கு அமைந்த விளக்கவுரை போல் உள்ளன. இந்த பத்ததி நூல்களில் , ‘அகோர சிவாசாரியார் பத்ததி’ , ‘சோமசம்பு சிவாசாரியார் பத்ததி’, ‘ஈசான சிவாசாரியார் பத்ததி’ போன்றவை புகழ்பெற்ற பத்ததி நூல்களாக விளங்குகின்றன. இன்று தமிழகத்தில் பெரும்பாலான சிவாலயங்களில் ஆதிசைவ சிவாசாரியார்களால் ‘ஸ்ரீ அகோர சிவாசாரியார் பத்ததி’யே கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாறு சிவபெருமானால் அருளப்பட்ட சிறப்புமிக்க ஆகமங்களை ஆதிசைவர்கள் தங்களது முன்னோர்கள் காட்டிய வழியில் கடைபிடிக்கிறார்கள். சிறுவயது முதலே குருகுல முறையில் கற்று ஆகம விதிப்படி பூஜைகள், விழாக்கள், கும்பாபிஷேகங்கள் ஆகியவற்றை செய்யும் அருள் பெற்றவர்களாகத் திகழ்கின்றார்கள்.
ஆதிசைவ சிவாசாரியார்கள் வேதங்களில் உள்ள கோயில் வழிபாடுகளுக்குரிய மந்திரங்களை மட்டுமே பயின்று ஆகம பிரதானமாக பயில்வார்கள். ஆதிசைவர்கள் ஆகமங்களையே பிரதானமாகவும், பிரமாணமாகவும் கொள்வதால் இவர்கள் ஆகம அந்தணர்கள் என்றும், ஆகம வேதியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சிவபிரானை வழிபடும் சைவர்களுக்கு ஆகமமே பிரமாண நூலாகும். சிவனை வழிபடும் அடியார்களுக்கும், சைவர்களுக்கு ஆகம விதிப்படி சிவதீக்ஷை அளித்து சிவபக்தியை பரவச் செய்யும் முதற்கடமை ஆதிசைவர்களுக்கே உரியதாகும். ஆதிசைவர்கள் சிவாகம விதிப்படி சிவபெருமானை அர்ச்சிப்பவர்கள் என்பதை ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி தனது ‘திருத்தொண்டர் திருஅந்தாதியில்’, ’நெறிவார் சடையரைத் தீண்டி முப்போது நீ டாகமத்தின் அறிவால் வணங்கி அர்ச்சிப்பவர் நம்மையும் ஆண்டமராக் கிறையாய் முக்கண்ணும் எந்தோளிம் தரித்தீறில் செல்வத் தொடும் உறைவார் சிவபெருமாற்குறை வாய உலகினிலே’ என்று பாடியுள்ளார்.
ஸ்ரீ உமாபாதிசிவசாரியார் தமது திருத்தொண்டர் புராண சாரத்தில், ’செப்பலருந் தவமுடைய செம்மை யாளர் சிறுகாலே மலர்வாவி திகழ மூழ்கி ஒப்பில் திருநீறணிந்து நியதி ஆற்றிஓவாமே ஐந்தெழுத்தும் உணர்ந்துரைத்துதப்பில் சிவாகம விதியால் இன்பால் அன்பாந்தன்மையால் தன்மையாந் தகையார் என்றும் முப்பொழுந் திருமேனி தீண்ட வல்ல முறைமையார் பிறவிதொறுந் திறமையாரே’ என்று பாடியுள்ளார். இதுபோலவே ஆகமங்கள் சிவபிரானால் அருளப் பெற்றவை என்பதை, ‘அண்டர் தமக்கு ஆகமநூல்கள் மொழியும் எம் ஆதியை’ என்று ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பாடியருளுகின்றார். அந்த ஆகமவிதிப்படியே அன்னை பார்வதி தேவி பூஜை செய்ய ஆசைப் பட்டாள் என்பதை சேக்கிழார் பெருமான், திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணத்தில், ’இங்கு நாதா நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரியப் பொங்கு கின்றதென் ஆசை என்றிறைஞ்சிப் போக மார்த்தபூண் முலையினாள் போற்றி’ என்று கூறுயுள்ளார்.
மேலும், அம்மையார், சிவபெருமான் அருளிய ஆகமநெறியிலே உறைத்துநின்று பூஜித்த செயலை, ’உம்பர் நாயகர் பூசனைக்கவர்தாம் உரைத்த ஆகமத் துண்மையே தலைநின் எம்பிராட்டியார் அர்ச்சனைபுரிவதனும்’ – என்றும், ஆகம விதியில் குறைவில்லாமல் அம்மையார் சிவபூஜை செய்த செயலை, ’மெய்தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவமெய்ப் பூசை எய்த ஆகம விதியெலாஞ் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம்பிராட்டி என்றும் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் பாடுகின்றார். இவ்வாறு இவ்வுலகத்தில் முதன்முதலில் சிவபூஜை செய்தவள் அன்னை பார்வதி தேவியே.
அன்னை பார்வதிதேவியே ஆகம விதிப்படியே சிவபெருமானை பூஜை செய்த்தாக சேக்கிழார் பெருமான் பாடி அருளியது அனைவரும் சிந்திக்கத்தக்கது. அன்னை பார்வதி தேவி மட்டுமல்ல, 63 நாயன்மார்களில் ஒருவராகிய திருநீலநக்க நாயனார் தினம்தோறும் ஆகம விதிப்படியே சிவபெருமானை பூஜை செய்து வந்தார் என்பதனை, ‘மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை நித்தல் பூசனை புரிந்தெழு நியம்முஞ் செய்தே’, என்றும் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் கூறுயுள்ளார். இவ்வாறு, சிவபெருமானுக்குச் செய்யப்படும் பூஜைகள் மட்டுமல்ல, சிவபெருமானுக்கு அமைக்கப்படும் கோயில்களும் கூட ஆகம விதிப்படியே தான் நிர்மாணிக்கப்பட வேண்டும்.
பூசலார் நாயனார் தனது மனதுக்குள் தான் எழுப்பிய கோயிலையும் ஆகம விதிப்படியே அமைத்தார் என்பதை, சாதனத்தொடு தக்சர் தம்மையும்’ என்கிற பாடலில் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் பாடியுள்ளார். மேலும், சிவபெருமானுக்கு செய்யும் பூஜைகளும் எழுப்பும் கோயிலும், ஆகம விதிப்படி நடப்பதொடு அல்லாமல், திருக்கோயில்களில் நடைபெறும் விழாக்களும், திருக்கோயில்களுக்கு வழங்கப்படும் நிபந்தங்களும் ஆகம விதிப்படியே நடந்திடல் வேண்டும். இதனை மனுநீதிச்சோழன் வரலாறு உணர்த்தும். மனுநீதிச் சோழன் திருவாரூர் திருக்கோயிலிக்கு சிவாகம விதிப்படியே பூஜைக்கு வேண்டிய நிபந்தங்களை அளித்தான் என்பதை, ‘பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர் எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக் அங்கன் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்தான் துங்க ஆகமம் சொன்ன முறைமையால்’ என்று பெரிய புராணம் கூறுகிறது. இவ்வாறு, ஓர் ஆலயம் நிர்மணித்து அமைப்பது முதல் பூஜைகள், விழாக்கள் அனைத்தும் ஆகம விதிப்படியே செய்யப்பட வேண்டும் என்பதை சைவத் திருமுறைகளும் நமது அருளாளர்க்ளின் திருவாக்குகளும் நமக்கு உணர்த்துகின்றன.
திருக்கோயில்களுக்கு நிலத்தைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து (பூகர்ஷணம்) கோயில் அமைத்து தெய்வங்களை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் முதல் மண்டலாபிஷேகம் வரையிலும் அதன்பின் நடைபெறும் விழாக்கள், பிராயச்சித்தங்கள் என அனைத்திற்கும் ஆகமங்களே பிரமாணமாகும். இதனை, கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம்- கோயில் நிலம் தேர்ந்தெடுத்து அமைப்பது முதல் கும்பாபிஷேகம் வரை ப்ரதிஷ்டாதி உத்ஸவாந்தம்- கும்பாபிஷேகம் முதல் உற்சவ விழாக்கள் வரை உத்ஸவாதி ப்ராயச்சித்தாந்தம்- உத்ஸவ விழாக்கள் முதல் பிராயச்சித்த பரிகாரம்வரை என்ற வரிசை முறையில் ஆகமங்கள் விளக்கமாக எடுத்து உரைக்கின்றன. ஆகமவிதிப்படித்தான் ஆலயங்களில் பூஜைகள், விழாக்கள் செய்யப் படவேண்டும். ஆகமம் அறிந்த ஆதிசைவ சிவச்சாரியாரைக் கொண்டு, ஆலயங்களில் கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம், ப்ரதிஷ்டாதி உத்ஸவாந்தம்,உத்ஸவாதி பிராயச்சித்தாந்தம் என்கிற முறையில் பூஜைகள், விழாக்கள் செய்யப்பட வேண்டும் என்பது ஆகம விதியாகும்.
இவ்வாறு, ஆகம விதிகளை முறைப்படி கடைபிடுத்து பூஜித்து வரும் பக்தர்களுக்கு சிவபெருமான் அருள் புரிவான் என்பதை, ’அம்மானே ஆகம சீலர்க்கருள் நல்கும் பெம்மானே’ என்று ஸ்ரீ சுந்தரர் திருவாரூர் தேவாரத்தில் பாடி அருளுகின்றார். அவ்வாறு இல்லாமல், சிவபெருமானால் அருளப்பட்ட ஆகம விதிகளை புறந்தள்ளி இகழ்பவர்களை அரசன் தண்டித்திடல் வேண்டும் என்பதனை திருமூலர் தமது திருமந்திர்த்தில், தத்தம் சமய தகுதிநில் லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி எத்தண்டமும் செயும் அம்மையில் இம்மைக்கே மெய்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே’ – என்று பாடுகின்றார். ஓர் ஆலயத்திற்குரிய நிலத்தை தேர்ந்தெடுப்பது முதல், ஆலயத்தை அமைக்கும் முறை, கும்பாபிஷேகம் செய்யும் முறை, அதற்குண்டான மந்திரங்கள், தத்துவ விளக்கங்கள், கும்பாபிஷேகத்திற்குப் பின் அந்த ஆலயத்தில் செய்யப்படும் உத்ஸவங்கள், விழாக்கள் ஆகியவற்றைச் செய்யும் முறைகள், ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அதனை நீக்கும் பிராயச்சித்த விதிகள், பரிகாரங்கள் என்று ஒரு கோயிலைப் பற்றிய அனைத்துவித தகவல்களும், செய்திகளும் ஆகமங்களில் மட்டுமே உள்ளன.
ஆகமங்கள் சிவபெருமானால் அருளப்பெற்றதும், ‘ஆகமவிதிப்படி பூஜிப்பதே தமக்கு விருப்பமானது’ என்று சிவபெருமானே அருளியதும், அன்னை பார்வதி தேவியே ஆகம விதிப்படி சிவபெருமானை பூஜித்து வரம் பெற்றதும் ஆகமங்களின் முக்கியத்துவத்தையும், சிற்ப்பையும் உணர்த்துகிறது. கடந்த காலங்களில் நமது முன்னோர்களாகிய மன்னர்கள் திருக்கோயில்களை ஆகம விதிப்படியே அமைத்தும், ஆகம விதிப்படியே பூஜித்தும், விழாக்களும் செய்து வந்துள்ளார்கள் என்பதை ஒவ்வொரு திருக்கோயில்களிலும் உள்ள கல்வெட்டுச் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆகமங்கள் தமிழ்பண்பாட்டையே பிரதிபலிக்கின்றன. ஸ்மார்த்த பிராமணர்களை விட சிவாசாரியார்கள் உயர்ந்தவர்கள் என்று ஆகமங்கள் கூறும். ஆகமங்கள் சிவாசாரியார்களின் பெருமைகளை பேசுவதால் வட இந்தியாவில் ஆகமங்கள் புறக்கணிக்கப்பட்டன என்று கூறுவார் உழவாரம் ராஜசேகரன் அவர்கள்.