ஆதிசைவர்கள் இனத்தால் தமிழர்களே!


ஆதிசைவர்கள் சங்க காலம் முதலே தமிழ் நிலத்தில் வாழ்த்து வரும் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களாவார்கள். ஆதிசைவர்கள் பழத்தமிழர்கள். தொல்குடி அந்தணர்கள்.தமிழ்நாட்டுக் கோயில்களில் பூஜை செய்யும் மரபுக்குரியவர்கள். "கா.சு. பிள்ளை, அவர்கள் தமது ’சேக்கிழார் சுவாமிகள் வரலாறு’ என்ற நூலில், “கோயிலில் பூஜை புரியும் ஆதிசைவர்கள் பண்டைத் தமிழ்ப் பார்ப்பனராவார். நம்பி என்ற தமிழ்பெயரும் அவர்கள்க் குறித்து வழங்குகின்றது” என்று கூறுயுள்ளார். அவரே தாம் எழுதுய ’தமிழர் சமயம்’ என்ற நூலில், ‘இப்போது ஆலயங்களின் குருக்களாக உள்ள ஆதிசைவ மரபினர் தமிழ்ப் பார்ப்பனரே ஆவார். அவர்கள் சிவன் முகத்து அருள்பெற்ற அந்தணர் எனவும், ஸ்மார்த்தப் பிராம்மணர் அயன் முகத்துதித்த பிராமணர் எனவும் கருதப்படுவதுடன், பின்னையோர் கோயிற் பூசனைக்கு உரியரல்லர் என்று ஆகமம் விதிக்கிறது.

ஆதிசைவர் தமிழ்நாட்டிலே பொதியின் மலைக்குத் தெற்கிலுள்ள பெருஞ் செல்வமென்னும் மகேந்திர மலையில் தவமியற்றித் திருவருள் பெற்ற ஐந்து தமிழ் முனிவர்களின் சந்ததியர் ஆவார். அவர்கள் தற்காலத்தில் தம்மை இன்னார் என்று அறியாது சுமார்த்த மதநெறியை தழுவி நடக்க முயலுகின்றார்கள் என்று கூறுகிறார். மேலும், ஆதிசைவர்களை தமிழ் குருக்கள், சைவ குருக்கள்மார் என்றும் கா.சு.பிள்ளை குறிப்பிடுகின்றார்.

மறைமலையடிகளாரும் தனது ’தமிழர் மதம்’ எனும் நூலில், ஆதிசைவர்களை தமிழ் பார்ப்பனர் என்றும் தமிழ்குருக்கள்மார் என்றும் குறிப்பிடுகின்றனர். சமயங்களின் அரசியல்’ என்ற நூலில் முனைவர். தொ. பரமசிவம் அவர்கள், சிவப்பிராமணர்கள் தமிழ்நாட்டில் உருவாகிய ஒரு கூட்டத்தராக இருக்க வேண்டும். வடமொழியிலும் தமிழிலும் அர்ச்சனை செய்யத் தெரியும். அடியவர்களுக்குத் திருநீறு வழங்கும் உரிமையும் கடமையும் இவர்களுக்கு மட்டுமே உண்டு. இவர்கள் எண்ணிக்கையில் சிறிய கூட்டத்தவராவர். இவர்களுக்குக் ’காணியாளர்’ என்ற பெயரும் உண்டு. காணியாளர் என்றால் மரபுரிமை உடையவர் (மண்ணின் மைந்தர்) என்பதே பொருளாகும். பின்நாளில் வடநாட்டிலிருந்து இடம் பெயர்ந்து வந்து வேதப் பார்ப்பனர் பெருந்தொகையினர் ஆவர். எனவே, இந்த கடைசி இடப்பெயர்வுக்கு ’பிருகத்சரணம்’ என்றே பெயர். எனவேதான் சிவன் கோயிலை அடுத்த அக்ரஹாரங்களில் சிவப்பிராம்மணர் வீடுகள் ஒன்று, இரண்டு என்பதாக இருக்க, வேதப்பார்ப்பனர்கள் வீடு நாற்பது, ஐம்பது என்பதாக இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

திருப்பனாந்தாள் ஸ்ரீ காசிமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ எஜமான் சுவாமிகள் தனது ‘ மெய்யும் பொய்யும்’ என்கிற நூலில், ‘சிவாசார்யார்கள் ஆரியர் அல்லர் என்றும், திராவிடர்களில் ஆதியானவர்கள் இந்த நிலத்திற்கே சொந்தமான பூர்வீக் குடிமக்கள் என்றும், சைவர்களில் ஆதியானவர்கள் ஆதிசைவர்கள் ஆக ஆதி என்ற அடைமொழி பூர்வீகமானவர்கள் என்ற பொருள் தருவதை உணரலாம். எனவே, ஆதிசைவர்கள் தமிழகத்தின் பூர்வீக்க் குடிகள்’ என்கிறார். மேலும், ஆதியிலிருந்தே இந்நிலத்தில் இருந்தவர்களை ‘ஆதிதிராவிடர்கள்’ என்கிறோம். திராவிடர்கள் என்ற சொல் விந்திய மலைக்குத் தெற்கே உள்ள்வர்களைக் குறிக்கும். சைவர்கள் என்ற சமயப் பெயர் ஒட்டுவதால் சிவாசாரியார்களை ஆதிசைவர்கள் என்கிறோம். நிலப்பெயரும், சமயப்பெயரும் ஒன்றாக ஒட்டாது என்பது யாவரும் அறிந்த்தே. ஒட்டுத்தான் ஆகவேண்டுமென்றால், இவர்களை ‘ஆதிசைவத்திராவிடர்கள்’ என்பதே பொருந்திவரும். எனவே, சமயரீதியாகப் பார்க்கும்போது சிவாசாரியார்கள் சைவர்கள், மொழிவழியாகப் பகுக்கும்போது தமிழர்கள்’ என்கிறார்.

பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி வரை பிராமணர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஆதிசைவ சிவாசாரியார்கள் தமிழகத்தில் மட்டுமே வாழ்ந்து வருபவர்கள். தமிழகம்மட்டுமே சிவாசாரியார்களின் பூர்வீகமாக உள்ளது. தமிழகத்தைத் தாண்டி வட இந்தியாவில் சிவாசாரியார்கள் என்ற பிரிவினர் கிடையாது. ஆதிசைவ சிவாசாரியார்களும் அவர்கள் பிரமாணமாகக் கொண்ட ஆகம நூல்களும் தமிழகத்தில் மட்டுமே வழக்கில் உள்ளவை. இதன் மூலமே சிவாசாரியார்கள் தமிழகத்தின் பூர்வீகக் குடிகள், தமிழர்களே என்பதை அறந்து கொள்ள வேண்டும். மேலும், ஆதிசைவர்களாகிய சிவாசாரியார்கள் தமிழகத்தில் மட்டும் வாழ்ந்து வருவது போல், தமிழர்கள் பூர்வீக்க் குடிகளாக வாழும் மற்றொரு நாடாகிய இலங்கை ஈழத்திலும், சிவாசாரியார்கள் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வருவது சிந்திக்கத்தக்கது. ஈழ தேசத்தில் உள்ள சிவாலயங்களில் அகமபடித்தொண்டு என்ற சிவாலய பூஜைகளைச் செய்துகொண்டு சைவ சமயம் வரைவும், சிவபத்தி பெருகவும் பல சிவாசாரியார்கள் ஈழத்தில் தொண்டு செய்துவருகிறார்கள். தமிழர்கள் தொன்மையாக வாழும் இடங்களே, சிவாசாரியார்களின் பூர்வீக இடமாக இருப்பதில் இருந்தே ஆதிசைவ சிவாசாரியார்கள் தமிழர்களே என்பதை தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் ஆதிசைவர்கள் தமிழ்நாட்டின் பூர்வகுடிகள், மண்ணின் மைந்தர்கள் என்பதை உணர முடியும்.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!