ஆதிசைவர்களின் சிறப்பு பெயர்கள்
ஆதிசைவர்கள் சைவ சமய பக்தி இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் பல சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுக்கிறார்கள்.
1. சிவவேதியர் – சிவபெருமானை முழு முதற் கடவுளாக வழிபடும் வேதியன் என்பதால் சிவவேதியர் என்று பெயர்.
2. ஆதிசைவர் – இப்பூலகில் தோன்றிய முதல் சைவர் என்பதால் ஆதிசைவர் என்று பெயர்.
3. குருக்கள் – சைவர்களுக்கு ஆகமவிதிப்படி சிவதீக்ஷை அளித்து நல்வழிப்படுத்தும் குருமார்களாக விளங்குவதால் ‘குருக்கள்’ என்று பெயர்.
4. சிவாசாரியார் – சிவபெருமானால் அருளப்பட்ட ஆகமங்களை தெளிவுறக் கற்று, ஆகமவிதிப்படி விசேஷ பூஜைகளை சிவபிரானுக்குச் செய்யும் ஆச்சாரியார் என்பதால் ‘சிவாசாரியார்’ என்று பெயர்.
5. சிவமறையோர் – மறைகளாகிய வேத ஆகமங்களைக் கொண்டு சிவபிரானை அர்ச்சிப்பதால் ‘சிவமறையோர்’ என்று பெயர்.
6. சைவ அந்தணர் – சைவ சமய நெறியில் வாழும், சைவ சமய நெறிகளை கடைபிடிக்கும் அந்தணர் என்பதால் ‘சைவ அந்தணர்’ என்று பெயர்.
7. பட்டர் – பட்டன் என்றால் குரு என்று பொருள் ‘ஆலநிழல் பட்டனே’ என்பது திருமுறை வாக்கு. பட்டறிவு உடையவன். ஆகமங்களை தான் உணர்த்துவதால் ‘பட்டன்’ என்று பெயர்.
8. தொழுகுலத்தோர் - உலகநலன் பொருட்டும், பிறர் நலன் பொருட்டும் இறைவனை ஆலயத்தில் தொழுது வழிபாடு செய்பவர்கள் என்பதால் ‘தொழுகுலத்தோர்’ என்று பெயர்.
9. நம்பியார் – ஆதிசைவர்களின் மரபு பெயர். பூர்வக குடிகள் என்பது இதன் பொருளாகும். நம்பி + ஆரூரர் = நம்பியாரூரர் என்பது சுந்தரரின் இயற் பெயர். நம்பியாண்டார் நம்பி என்பவற்றைக் காண்க.
10. நாயனார் – ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் மரபில் வந்தவர்கள் என்பதால் ‘நாயனார்’ என்று பெயர்.
11. சிவப்பிராமணன் – சிவபெருமானின் திருமுகத்தில் தோன்றிய பிராமணன். சிவபிரானை அர்ச்சித்து வழிபடும் பிராமணன் என்பதால் ‘சிவபிராமணன்’ என்று பெயர்.
12. ஆகம அந்தணர் – ஆகமங்களை பிராமணமாக்க் கொண்ட அந்தணர், ஆகமங்களை பிரதானமாக்க் கற்கும் அந்தணர் என்பதால் ‘ஆகம அந்தணர்’ என்று பெயர்.
13. கோயிற்பிராணன் – கோயில் பூஜையைத் தவிர்த்து வேறு எத்தொழிலும் செய்யாதவர் என்பதால் ‘கோயிற்பிராமணன்’ என்று பெயர்.
14. உரிமையிற் தொழுவார் – சிவபிரானிடம் ஆதிசைவர்களுக்கே முதல் உரிமை உள்ளதால் உரிமை கொண்டு வழிபடுவதன் காரணத்தால் ‘ உரிமையிற் தொழுவார்’ என்று பெயர்.
15. அகத்தடிமை அந்தணன் – அகம் எனும் கருவறையில் பூஜை (அடிமை) புரிமை அந்தணன் என்பதால் ‘அகத்தடிமை அந்தணர்’ என்று பெயர்.
16. அரன் மறையோர் – அரனாகிய சிவபெருமானை வேத ஆகம மறைகளில் கூறியுள்ள விதிப்படி அர்ச்சிக்கும் மறையவர்கள் என்பதால் ‘அரன் மறையோர்’ என்று பெயர்.
17. அணுக்கத்தொண்டர் - சிவபெருமானுக்கு அணுக்கமாக நெருங்கி தொண்டு புரிவதால் ‘அணுக்கத்தொண்டர்’ என்று பெயர். ஆதிசைவர்களாகிய சிவாசாரியார்களை முதன்மையாகக் குறிக்கும் பெயர்.
18. தேசிகர் – தேசிகர் என்றால் குரு என்று பொருள். சைவ மரபில் தேசிகர் என்ற சொல் முதன்மையாக சிவாசாரியார்களைக் குறிக்கும்.
19. மாகேஸ்வரர்கள் – ஆதிசைவ அர்ச்சகர்களுக்கு ‘மாகேஸ்வரர்கள்’ என்று பெயர்.
20. ஆசாரியன் – சைவ மரபில் ஆசாரியன் என்பது ஆகமம் அறிந்த ஆதிசைவ சிவாசாரியார்களைக் குறிக்கும் பெயர்.
பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான், ஆதிசைவ சிவாசாரியார்களை சிவவேதியர், சைவ அந்தணர், சிவமறையோர் என்று குறிப்பதோடு அல்லாமல்,
ஆசிலந்தணர் – குற்றமிலா அந்தணர் என்றும்,
செல்வமறையோர் – சிவனருளை முழுவதும் பெற்ற மறையவர்கள் என்றும்,
மாசிலாமறையோர் – சிவத்தூய்மை உடைய மறையவர்கள் என்றும்,
அன்பில் வரும் குல மறையோர் – சிவபிரானுக்கு அன்பினாலே வழி வழி அடிமை செய்யும் குலத்தாராகிய சிவ்வேதியர் என்றும் போற்றிப் புகழ்ந்துள்ளார். பொதுவாக சோழர்கால கல்வெட்டுகளில் சிவாசாரியார்களை ‘சிவப்பிராமணர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளனர். அர்ச்சகர்களை குறிக்கும் இடங்களில் பெரும்பாலும் நம்பி, பட்டர், பட்டஸ்ய என்று காணப்படுகிறது.
பாண்டிய மண்டலத்திலும், மதுரையைச் சார்ந்த சிவாசாரியார்களும் தம்மை ”பட்டர்” என்று அழைத்துக் கொள்கிறார்கள். மற்றபடி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆதிசைவர்களை, குருக்கள் என்றும், சிவாசாரியார்கள் என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது.
ஸ்ரீ சுந்தரரின் ஆன்மார்த்த ஸ்தலமாகிய திருவாரூரில் ஸ்ரீ தியாகராஜரை பூஜிக்கும் ஆதிசைவர்கள் ”நயனார்” என்றும், “பிரமராயர்” என்றும் அழைக்கப்படுகின்றனர்.
திருவாரூர் ஸ்ரீ சுந்தரரின் ஆன்மார்த்த தலம் என்பதாலும், திருவாரூர், ஸ்ரீ சுந்தரரின் தாயார் இசை ஞானியார் அவதரித்த தலம் என்பதாலும் அங்கு பூஜிக்கும் ஆதிசைவர்கள் தாங்கள் சுந்தரர் மரபில் வந்தவர்கள் என்ற முறையில் நயனார் பட்டம் பெற்றுள்ளனர். நாயனார் என்பதே நாயனார் என்று மருவியுள்ளது.
மேலும், தில்லை அந்தண்ர்களுக்கு சிதம்பரம் நடராஜர் ஆலயம் எவ்வாறு உரிமையுடையாதாக உள்ளதோ, அதுபோல, ஆதிசைவர்களாகிய சிவாசாரியார்களுக்கு உரிமையுடைய கோயிலாக திருவாரூர் தியாகராஜர் கோயில் இருந்ததாகத் தெரிய வருகிறது. பூஜை முதல் பராக், கட்டியம், திருவாசல், சீர்பாதம், பொற்பண்டாரி என அனைத்துப் பணிகளையும் ஆதிசைவர்களே மேற்கொண்ட்தாகவும் தெரிய வருகிறது.
இதே போன்று, திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவர் ஆலயத்தில் பூஜை செய்யும் ஆதிசைவர்கள் ‘நம்பியார்’ என்று அழைக்கப்படுகிறார்கள். திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பனை முப்பொழுதும் தீண்டி பூஜித்து வரும் ஆதிசைவர்களை ‘காணிவட்டத்தார்’ என்று அழைக்கும் மரபு பண்டையகாலத்தில் இருந்து வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெரிய சிவாலயங்களிலும் அர்ச்சகம், ஸ்தானிகம் என்ற பெயரில் சிவாகம விதிப்படி பூஜைகளை ஆதிசைவர்கள் செய்து வருகிறார்கள்.
மேலும், ஆகமங்கள், ஒவ்வொரு சிவாலயத்திலும் ஐந்து நிலைகளில் ஆதிசைவர்களை நியமிக்கக் கூறகிறது. இந்த ஐந்து ஆதிசைவர்களும் பஞ்சாச்சாரியார்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
1. ஆச்சாரியார் : ஆகமங்களை கற்றுணர்ந்து நைமித்திகம் அதாவது விசேஷ பூஜைகளைச் செய்பவர். இவரே சிவாசாரியார் ஆவார்.
2. அர்ச்சகர் : நித்ய பூஜைகளை மட்டும் செய்பவர்.
3. ஸாதகர் : ஆகமத்தில் கூறப்பட்டுள்ளபடி பூஜைக்கு வேண்டிய பொருள்களைச் சேர்த்து வைத்து உதவுபவர்.
4.அலங்கிருதர் : இறைவனுக்கு அலங்காரம் செய்பவர்.
5. வாசகர் : வேத ஆகமங்களை, திருமுறைகளை ஓதுபவர்.
இந்தமுறையில், ஆதிசைவர்களாகிய பஞ்சாச்சாரியர்களுக்கும் தொண்டினை சிவாகமம் வகுத்துள்ளது. இந்த, பஞ்சாச்சாரியர்கள் பற்றிய செய்தி கூறும் கல்வெட்டு ஒன்று திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி கோயில் 2ம் பிரகாரம் வடபுறச் சுவரில் உள்ளது. இக்கல்வெட்டை மனுச்சரிதங்கண்ட கல்வெட்டு என்பர். இதில், ’ஸ்ரீகாரியம் சுப்பிரமங்கலமுடையான் மாதவன் இரவியானமாலையை மூவேந்த வேளார் விண்ணப்பத்தினால்’ பதிபாதமூலப்பட்டுடை பஞ்சாசாரிய தேவகன்மிகளுக்கும் கோயிலார்க்கும்…-என்று கூறப்பட்டுள்ளது.இவ்வாறு கோயில் பூஜை புரியும் ஆதிசைவர்களுக்கும், சைவ சமயத்திற்கும் சிவபெருமானுக்கும் உள்ள தொடர்பைச் சிறப்பித்துப் பொற்றும்வகையில் கெளரவப்படுத்தி ஆதிசைவர்களை பல பெயர்களில் அழைக்கும் பழக்கம் பண்டை சைவ இலக்கியங்களிலும், தமிழகத்திலும் இருந்து வந்துள்ளதை நாம் அறிந்துகொள்ள முடியும். இதன்மூலம், பல பெயர்களில் ஆதிசைவர்கள் அழைக்கப்படுவதைக் கொண்டு ஆதிசைவர்களின் பெருமைகளையும், சிறப்புகளையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்.