அருள்மிகு சந்திரன் ஸ்தலம் - திங்களூர்

ஸ்வாமி: ஸ்ரீ கைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீ பெரியநாயகி
சந்திரன் தென்கிழக்கு திசை நோக்கி இருக்கிறார். 

Chandran Thingaloorஸ்தல வரலாறு: நவக்கிரக ஸ்தலங்களில் திங்களூர் இரண்டாவது ஸ்தலம், பண்டைக் காலத்தில் கீழுர் என்று அழைக்கப்பெற்ற இத்தலத்தில் எழுந்தருளியுள்ள கைலாசநாதரை சந்திரன் வழிபாடுகள் செய்து தன் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டமையால் , திங்களூர் என்னும் சிறப்புப் பெயர் உண்டாயிற்று. தட்சன் சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான். இட்ட சாபம் நீங்க சந்திரன் இந்த ஸ்தலத்தில் நீண்ட காலம் தவம் செய்து தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை பூஜித்தான். பங்குனி மாதப் பௌர்ணமியில், இறைவன் கைலாசநாதராக காட்சி கொடுத்து சந்திரனின் சாபத்தைப் போக்கினார். சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்றதால், இத்தலம் சந்திரனுக்கு உரிய தலமாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானின் ஒளி மூலவர் கைலாசநாதர் திருமேனியில் விழுவதை இன்றும் காணலாம். பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில், கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இறைவன் மற்றும் தனி சந்நிதியில் காட்சி தரும் சந்திரனை  வழிபட, சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவதால், அன்று சூரிய பூஜையும், மறுநாள் பெளர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறும்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக நம்பப்படுகிறது. இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் கைலாசநாதர் என்கிற பெயரிலும், அம்பாள் பெரியநாயகி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். இக்கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் இருக்கிறது. தீர்த்தம் சந்திர புஷ்கரணி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. தேவாரம் பாடிய திருநாவுக்கரசரை மட்டுமே அனைவரும் அறிவர். ஆனால் திங்களூரில் வாழ்ந்த சிறந்த பக்தரான அப்பூதியடிகளும் அவரின் மனைவியான தேன்மொழி தேவிக்கும் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளில் மூத்தவர் மூத்த திருநாவுக்கரசு என்றும், இளைய மகன் இளைய திருநாவுக்கரசு என்கிற பெயரிலும் அழைக்கப்பட்டனர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிற கொள்கை முழக்கம் கொண்ட அப்பூதியடிகள், திருநாவுக்கரசர் பெயரில் சிவனடியார்களுக்கும், மக்களுக்கும் தொண்டு செய்து வந்தார்.

ஒரு நாள் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்த போது அப்பூதியடிகள் பற்றி கேள்விப்பட்டு அவரை காண சென்றார். திருநாவுக்கரசரை கண்ட அப்பூதியடிகள் அவரை வரவேற்று உணவளிக்க விரும்பினார். தன் மகனை வாழை இலை பறித்து வருமாறு அனுப்ப அங்கே அவனை பாம்பு தீண்டியது, தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டால் திருநாவுக்கரசர் சாப்பிட மாட்டாரோ என்றென்னிய அப்பூதியடிகள் அதனை மறைத்து உணவளித்தார். மகனை பற்றி அறிந்த திருநாவுக்கரசர், அவனின் உடலை திங்களூர் திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று “ஒன்று கொலாம் அவர் சிந்தை” என்று பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார்.

ஸ்தல சிறப்புகள்: குழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் நிகழ்ச்சி அன்னப்பிரசானம் என்பர். அன்னபிரசன்னம் சடங்கு செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற கோயிலாக கேரள மாநிலம் குருவாயூர் கோயில் இருக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு அன்னப்பிரசானம் சடங்கு செய்வதற்கு மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக இந்த திங்களூர் கைலாசநாதர் கோயில் இருக்கிறது. அஸ்வினி, மிருகசீரிடம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திர தினங்களிலும், சந்திரஹோரை வேளைகளிலும் இக்கோயிலில் குழந்தைகளுக்கு சந்திரனையும், பசுவையும் காண்பித்து ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் பால், தேன் கலந்து குழந்தைக்கு சோறூட்டும் சடங்கை செய்கின்றனர். இவ்வாறு சாப்பிடும் குழந்தைக்கு ஜலதேவதையின் அருளும், ஒளஷதி (மருந்து) தேவதையின் அருளும் கிடைத்து அக்குழந்தை பூரண உடல் நலத்தோடு இருக்கும் என்பது ஐதீகம். ஜல தேவதையின் அருளால் அக்குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாது என்றும், ஒளஷதி தேவதையின் அருளால் மருந்து உண்டவுடன் அக்குழந்தையை பீடித்திருக்கும் நோய்கள் நீங்கும் என்பதற்காக இந்த சடங்கு செய்யப்படுகிறது. நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்குரிய பரிகார தலமாக இக்கோயில் இருக்கிறது.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திங்களூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. கோயில் நடை திறப்பு காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்  திறந்திருக்கும்.

 

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!