அருள்மிகு அங்காரகன் ஸ்தலம் - வைதீஸ்வரன் கோயில்
ஸ்வாமி : ஸ்ரீ வைத்யநாதர்
அம்பாள்: ஸ்ரீ தையல்நாயகி
அங்காரகன் மேற்க்கு திசையை நோக்கி அருள் பாலிக்கின்றார்
சுமார் 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த இந்த ஸ்தலத்தில் இறைவன் சிவபெருமான் வைத்தியநாதர் என்றும். அம்பாள் தையல் நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள். இந்த வைத்தீஸ்வரன் திருக்கோவிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற வேறு பெயரும் உள்ளது. வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி, அங்காரபுரி, அம்பிகாபுரி என்ற பெயர்களும் உண்டு. சிவபெருமான் உமா தேவியைப் பிரிந்து கல்லால மரத்தின் கீழ் யோகத்திலிருந்தபோது , அவரது நெற்றிக் கண் நீர்த்துளியிலிருந்து அங்காரகன் செந்நிற வடிவத்துடன் தோன்றி சிவபெருமானை வணங்கினார். அப்போது அங்காரகனுடைய மேனியில் செங்குட்டம் இருப்பதைக் கண்டு இந்திராதி தேவர்கள் அஞ்சினார்கள். சிவபெருமான் அங்காரகனிடம் காவிரிக்கரையருகில் வைத்தியநாத தலம் ஒன்று உள்ளது அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் மூழ்கி இறைவனைப் பூசித்து வணங்கினால் உனக்கு ஏற்பட்டுள்ள செங்குட்டம் நீங்கி விடும் என்று கூறினார். அதன்படி அங்காரகன் சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி செங்குட்டம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ வைத்தியநாதரை தினசரி முழு ஈடுபாட்டுடன் தியானம் செய்தார்.
அங்காரகன் இறைவன் திருவடியை மறக்காத மனமும், செவ்வாய்க்கிழமைகளில் வந்து தன்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் சற்புத்திரப் பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார். இறைவன் மனமகிழ்ந்து அங்காரகன் முன்தோன்றி அவருக்கு வேண்டிய வரங்களைக் தந்தருளினார், “செவ்வாய் கிழமைகளில் உன்னை வந்து துதிப்போருக்கு கிரகபீடையை நீக்கி நன்மை செய்யவும், நவக்கிரகங்களில் மூன்றாவதாகத் திகழ்க” எனவும் வரம் அளித்தார்.
இக்கோவிலுக்குள் உள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி , இறைவன் வைத்திய நாதரையும் அம்மை தையல் நாயகியையும் வழிபட்டே அங்காரகன் கிரக பதவியை அடைந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன, இதனால் இத்தலத்தில் உள்ள சித்தமராத குளத்தில் நீராடினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.