அருள்மிகு புதன் ஸ்தலம் - திருவெண்காடு
ஸ்வாமி : சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர்.
அம்பாள்: பிரமவித்யாநாயகி.
ஸ்தல வ்ருக்ஷம்: ஆல், கொன்றை, வில்வம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம்
வழிபட்டோர்: பிரம்மன், இந்திரன், புத பகவான், வெள்ளையானை
ஸ்தல வரலாறு: நவக்ரஹ ஸ்தலங்களில் திருவெண்காடு நான்காவது ஸ்தலம். காசிக்கு சமமான தலங்களில் ஒன்று . இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. இங்கு நடராஜ சபையும், சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதியும் உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி,புதன் ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்ற ஸ்தலம். சுயம்பு மூர்தியான ஸ்வேதாரயேஸ்வரருக்கு திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் உண்டு. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தி மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றி இங்கு அனுக்ரஹ மூர்தியாக அருள்பாளிக்கின்றார்.
வித்யாகாரகன் எனப்படும் புதபகவான் இங்கு எழுந்தருளும் ஸ்வேதாரயேஸ்வரரிடம் தன் அலி தோஷம் நீங்க தவம் இருந்து நவகிரகங்களில் ஒருவராகி அன்னை பிரஹ்ம வித்யாம்பிகையின் அனுக்ரஹத்தோடு அருள் பாலிக்கிறார். இவர் செய்த தவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார். நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.
திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது.
காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. அட்டவீரட்டத்தலம் போன்றே இங்கும் சிவபெருமான் மருத்துவாசுரனை சம்காரம் செய்து வீரச்செயல் புரிந்துள்ளார். ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது. சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது. பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.