ஸ்வாமி: ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர்
அம்பாள்: ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை.
ஸ்தல விருக்ஷம் : மகிழமரம்
தீர்த்தம் : ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு
வழிபட்டோர்: சிலந்தி, பாம்பு, யானை, முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் முதலியோர்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் சிவனுக்கு உரிய வாயு ஸ்தலம் ஸ்ரீ காளஹஸ்தி. காலசர்ப்ப தோஷத்தை போக்கும் ராஹு கேது பரிஹார ஸ்தலமாகும். சூரிய சந்திர கிரகண காலங்களில் காளஹச்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றும். சிலந்தி, நாகம்,யானை ஆகியன பூஜித்தமையால் ஸ்ரீ காளஹச்தீஸ்வரர் என்ற பெயருடன் அன்னை ஞானப் ப்ரசூன்னாம்பிகை சமேதராக இறைவன் அருள் பாலிக்கிறார். இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இது வாயு (காற்று)தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் - உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252 வது தேவாரத்தலம் ஆகும்.
ஸ்தல புராணம்: காளஹஸ்தியில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ச்சகர் தினமும் பூஜை புனஸ்காரங்கள் செய்து விட்டு சென்று விடுவார். ஆனால் மறுநாள் வந்து பார்த்தால் மாமிசம் இலைதழை முதலியவை நிறைந்து இருக்கும். இது பல நாள் தொடரவே அர்ச்சகர் மிகவும் மனம் வருந்தி சிவனிடம் நான் செய்யும் பூஜையில் ஏதாவது குறை இருக்கிறதா, ஏன் இப்படி சோதிக்கிறாய் என்று கேட்டார் .அன்று இரவு சிவன் அவர் கனவில் தோன்றி நாளை நீ பூஜை முடிந்தவுடன் சென்று விடாதே மறைந்து இருந்து பார் என்ன நடக்கிறது என்று ஆனால் எக்காரணம் கொண்டும் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்து விடாதே என்று கூறினார்.
மறுநாள் வழக்கம்போல் இவர் பூஜை முடித்து விட்டு ஒரு மரத்தின் பின் மறைந்து நின்றார். அச்சமயம் கையில் மாமிசமும் இலைதழைகளுடனும் வாயில் நீருடனும் ஒரு வேடன் வந்து வாயிலுள்ள நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்தான்.பின் இலைதழைகளால் அர்ச்சனை செய்து இறுதியாக மாமிசமத்தை நைவேத்தியமாக படைத்தான்.
அப்பொழுது சிவபெருமான் அவன் பக்தியை சோதிக்க வேண்டும் என்று நினைத்து ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வர செய்தார். உடனே அந்த வேடன் லிங்கத்தின் கண்களில் வடிந்த ரத்தத்தைத் துடைக்க அது மீண்டும் மீண்டும் வேகமாக வந்தது. உடனே கத்தி எடுத்து தன் ஒரு கண்ணை பிடுங்கி சிவன் கண்ணில் வைக்க ரத்தம் நின்றது .அதை பார்த்துக்கொண்டிருந்த அர்ச்சகர் வேடனின் உண்மயான பக்தியை உணர்ந்தார். சிவபெருமானின் மறு கண்ணிலும் ரத்தம் வர அந்த வேடன் தனது மற்றொரு கண்ணயும் பிடுங்கி வைக்க நினைத்தான். ஆனால் கண்ணில்லாமல் சரியாக பொருத்த முடியாது என்று நினைத்து அடையாளத்திற்காக தன் காலை ரத்தம் வரும் சிவபெருமானின் கண் அருகே வைத்து மறு கண்ணையும் எடுத்து வைத்தான் ரத்தம் வருவது நின்றது.
வேடனின் உண்மையான பக்தியை கண்ட சிவபெருமான் உடனே வேடனுக்கு காட்சி தந்து இரு கண்ணையும் தந்தருளினார். சிவபெருமானுக்கு தான் கண்களை வழங்கி வழிபட்டமையால் கண்ணப்ப நாயனார் என்ற பெயர் பெற்றார்.இதுவே கண்ணப்ப நாயனார் சரித்திரம்.காளஹஸ்தி வரலாறு.இன்றும் சிவபெருமான் ஆலயத்திற்கு முன்பாக காளஹஸ்தியில் கண்ணப்ப நாயனார் சிலை உள்ளது.
முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்: ""வாயுதேவனே... நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்,''. போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.
வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட, கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.
தேவாரப் பாடல்கள் :
1. சம்பந்தர் : 1. சந்தமார் அகிலொடு, 2. வானவர்கள் தானவர்கள்.
2. அப்பர் : 1. விற்றூணொன் றில்லாத.
3. சுந்தரர் : 1. செண்டா டும்விடையாய்.