ஸ்ரீ ராமநாத ஸ்வாமி - ராமேஸ்வரம்
ஸ்வாமி : ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்
அம்பாள் : பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி
தீர்த்தம் : கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன.
(வெளியிலுள்ள 22 தீர்த்தங்கள் தேவிபட்டினம், திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் முதலான இடங்களில் உள்ளன.)
புராண பெயர் : கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம்பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்திறக்கும் நேரம்: காலை 4 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
ஸ்தல வரலாறு: சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வர தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் லிங்கம்அமைத்தாள். அந்த லிங்கத்தை ராமர் பூஜித்ததால் "ராமநாதசுவாமி' என்ற திருநாமம் அமைந்தது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் இது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது. பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம். அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும். 1212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம்உலகப்புகழ் பெற்றது. மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டே ராமநாதருக்கு பூஜை செய்கின்றனர்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 198 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம் ஆகும்.
காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும்.கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும். சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம். புரட்டாசியில் வரும் மகாளய பட்சத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருகின்றனர். எமதர்மராஜா அவர்களை விடுவித்து, அவரவர் குடும்பத்தினரை பார்த்து வர அனுமதியளிப்பார். "மகாளயம்' என்றால் "கூட்டமாக பூமிக்கு வருதல்' எனப்பொருள். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று, தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை. இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். பிதுர் காரியங்களைச் செய்ய சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.
ஜோதிர்லிங்கம் : சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று ராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன. விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்த பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, "ஜோதிர்லிங்கம்' ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.
ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, "விஸ்வநாதர்' என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது. ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டபின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது. கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, ராமநாதரை தரிசிக்க வேண்டும். ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.
ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.
ராமேஸ்வரம் கடல், "அக்னி தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் "அக்னி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் சொல்வதுண்டு.
குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார். மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது. இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.
தீர்த்தமாடுவதின் பலன் : பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.
தீர்த்தமும் பலனும்:
1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும். 1212 தூண்கள்,690 அடிநீளம், 435 அடிஅகலம்கொண்டஇக்கோயிலின்மூன்றாம்பிரகாரம்உலகப்புகழ்பெற்றது.