திருக்குவளை - அவனிவிடங்கர்
பிருங்க நடனம் (வண்டு நடனம்)
ஸ்வாமி : பிரம்மபுரீஸ்வரர், கோளிலிநாதர்
அம்பாள் : வண்டமர் பூங்குழலம்மை, பிரம்ம குஜலாம்பிகை
ஸ்தல வ்ருக்ஷம் : தேத்தா மரம், தேற்கு மரம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
புராண பெயர்: திருக்கோளிலி, திருக்குவளை
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
தல வரலாறு : சிவபெருமானின் திருமுடி கண்டதாக பிரம்மா பொய்கூறியதால் அவருக்கு சாபம் உண்டாகிறது. எனவே படைக்கும் தொழில் தடைபடுகிறது. இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை சரியாக செய்ய முடியாமல் திணறுகின்றன. எனவே பிரம்மா இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி மணலால் லிங்கம் அமைத்து இத்தலத்தில் பூஜை செய்து சாபம் நீங்க பெறுகிறார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார். நவகிரகங்களும் தங்களது தோஷம் நீங்கப்பெற்றன. இதனால் இத்தலம் "கோளிலி' ஆனது. இங்கு நவகிரகங்கள் நேர்கோட்டில் இருப்பது மிகவும் சிறப்பு. இத்தலத்தில் இறைவன் மணலால் ஆன சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 187 வது தேவாரத்தலம் ஆகும்.
இத்தலத்தில் இறைவன் மணலால் ஆன சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சிவபெருமான் "வண்டு நடனம்' ஆடி தரிசனம் தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை' ஆனது. சுவாமி, அம்மன் சன்னதி இரண்டும் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்களில் பீமன் பகாசூரனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில் நீங்கியது. சுந்தரர் குண்டையூர் எனும் தலத்தில் பெற்ற நெல்மலையை திருவாரூர் பரவையார் மாளிகைக்கு கொண்டு செல்வதற்காக ஆள் வேண்டி இத்தலத்தில் பதிகம் பாடினார். பிரம்மா, தாமரைக்கண்ணன், வலாரி, அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவகிரகங்கள், ஓமகாந்தன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இத்தலத்தின் அருகே ஓடும் சந்திரநதி, கங்கையைப்போல் புனிதமானது என புராணங்கள் கூறுகின்றன. இத்தல விநாயகர் தியாக விநாயகர் எனப்படுகிறார்.