திருவாரூர் - திருஆரூர் - வீதி விடங்கர்
(அஜபா நடனம் - சுவாச ரூபம்)
சுவாமி : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் (மூலஸ்தானம்-பூங்கோவில்) தியாகராஜர்.
அம்பாள் : அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்.
ஸ்தல வ்ருக்ஷம் : பாதிரி.
தீர்த்தம் : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம்.
வழிபட்டோர் : சம்பந்தர்,அப்பர், சுந்தரர்,திருமால், திருமகள், இராமர், மன்மதன், முசுகுந்த சக்கரவர்தி.
திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள்எனப்படும். இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம். கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி.
இத்தலத்தின் சிறப்புகள்: இத்தலம் "பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பினது. தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே. இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு. ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது. கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.
இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது:
1. கமலாலயம் - இது 5-வேலிப் பரப்புடையது - தேவதீர்த்தம் எனப்படுகிறது.
2. சங்கு தீர்த்தம் - இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது -அமுததீர்த்தம் என்றும் பெயர்.
3. கயா தீர்த்தம் - இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது.
4. வாணி தீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது.
மேற்கண்ட தீர்த்தங்கள் தவிர "செங்கழுநீர்ஓடை" எனப்படும் நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது. தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (வீதி விடங்கர்); சப்த விடங்கத் தலங்களுள் இது "மூலாதார"த் தலம். பஞ்ச பூத தலங்களுள் பிருதிவித் தலம்.
இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்:- 1. க்ஷேத்ரவரபுரம், 2. ஆடகேசுரபுரம், 3. தேவயாகபுரம், 4. முசுகுந்தபுரம், 5. கலிசெலா நகரம், 6. அந்தரகேசுபுரம், 7. வன்மீகநாதபுரம், 8. தேவாசிரியபுரம், 9. சமற்காரபுரம், 10. மூலாதாரபுரம், 11. கமலாலயபுரம் என்பனவாகும்.
தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி. இத்தலத்திறைவர் வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி என்று இன்னும் பலப்பல திருநாமங்களில் சிறப்பிக்கப்படுகிறார்.
1. ஆடுதண்டு - மணித்தண்டு, 2. கொடி - தியாகக்கொடி, 3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம், 4. மாலை - செங்கழுநீர்மாலை, 5. வாள் - வீரகண்டயம், 6. நடனம் - அஜபா நடனம், 7. யானை - ஐராவணம், 8. மலை - அரதன சிருங்கம், 9. முரசு - பஞ்சமுக வாத்தியம், 10. நாதஸ்வரம் - பாரி, 11. மத்தளம் - சுத்தமத்தளம், 12. குதிரை - வேதம், 13. நாடு - சோழநாடு, 14. ஊர் - திருவாரூர், 15. ஆறு - காவிரி, 16. பண் - பதினெண்வகைப்பண் என்பன இவையாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்கப்பொருள்களாகும்.
தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருமாம்.
ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற ஆதிரை திருநாளில் இந்த எண்கணங்களும் பெருமானுடன் பவனி வந்ததை அப்பர் பெருமான் தன் தேவாரத்தில் கீழ் கண்டவாறு சொல்லோவியமாகத் தீட்டுகிறார்.
"அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொ டருளிப்பாடியர்
உரிமையிற் றொழுவார் உத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசுப தர்கபாலிகள்
தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே.
இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று முதுகுன்றத்து ஈசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் தலம். சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம். பரவை நாச்சியார் வாழ்ந்த பதி. சுந்தரர் இழந்த இரண்டாவது கண்ணை பெற்ற பதி. சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது. இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.
தண்டியடிகள் அவதரித்த மற்றும் முத்தியடைந்தத் திருத்தலம். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.
தண்டியடிகள் அவதாரத் தலம் : திருவாரூர்.
வழிபாடு : லிங்க வழிபாடு.
முத்தித் தலம் : திருவாரூர்.
குருபூசை நாள் : பங்குனி - சதயம்.
அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம். சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்தத் (கமலாபுரம்) தலம்; இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோயில் ஏதுமில்லை (2005). திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.
இசைஞானியார்
அவதாரத் தலம் : திருவாரூர் (கமலாபுரம்).
வழிபாடு : லிங்க வழிபாடு.
முத்தித் தலம் : திருநாவலூர்
குருபூசை நாள் : சித்திரை - சித்திரை.
திருவாரூர் - கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம்.
திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலஸ்தானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.
கிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் "பிரமநந்தி" எழுந்தருளியுள்ளார்; மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது. சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.