பழமுதிர்ச்சோலை - ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி (அறுபடைவீடு)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது. இங்கு திருமாலும், திருமுருகனும் குடிகொண்டு அருள்புரிகின்றனர். சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இத்திருத்தலம் விளங்குகிறது. தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். "அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே'' என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்.
ஸ்தல வரலாறு : தமிழ் மூதாட்டி அவ்வையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் பழமுதிர்சோலை வழியே வந்து கொண்டு இருந்தால். அவ்வை பாட்டியின் களைப்பை போக்கி முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து இந்த உலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார்.
களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, ""என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?'' என்றான். சந்தோஷப்பட்ட பாட்டி ""வேண்டும்''என்றார்.உடனே முருகன்,""பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?''என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல்,""சுட்ட பழத்தையே கொடேன்''என்றார்.சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. அவ்வை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,""பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள்''என்று கூறி சிரித்தான். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்தி அவ்வை பாட்டிக்கு அருள் புரிந்தார்.
இவ்விடத்திற்கு மாலிருங்குன்றம், இருங்குன்றம், திருமாலிருஞ் சோலை, அழகர் மலை என்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. திருமுருகாற்றுப் படையைத் தவிர, இதர சங்க இலக்கியங்களில், அழகர் கோயில் சிறந்த விஷ்ணுத் தலமாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மலையடிவாரத்தில் புகழ்மிக்க விஷ்ணு ஆலயம் உள்ளது. திருமுருகாற்றுப் படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரையில் கூறியருள்கின்றார்.
கந்தபுராணத் துதிப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார், வள்ளியம்மையைத் திருமணம் புரிய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார்கள். அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
இங்கே கோயில் கொண்டுள்ள பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விசேஷ நாளல்ல. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு உகந்த வெள்ளிக்கிழமையே விசேஷ நாளாகும். அன்று பூவங்கி சாத்தப்படுகிறது. அன்று தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. தவிர பெரும்பாலும் அர்ச்சனைக்கு அரளி புஷ்பமே சாற்றப்படுகிறது. மற்ற விஷ்ணு ஆலயங்களைப் போல் பக்தர்களுக்குத் துளசி வினியோகிப்பது கிடையாது. இக்கோயிலில் உற்சவம் ரதோச்வ காலங்களில் வரும் பெரும்பாலான மக்களுக்கும் அர்ச்சனை செய்பவர்களுக்கும் விபூதிதான் கொடுத்து வருகிறார்கள். துளசி எப்போதும் கொடுப்பதில்லை.
மதுரை மாவட்டத்திலிருந்து வடக்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ளது பழமுதிர்ச்சோலை. திருமாலின் திருக்கோயிலான, சுந்தராஜப் பெருமாள் என்றழைக்கப்படும் அழகராக அவர் நின்று அருள்புரியும் அழகர்கோயில் திருத்தலத்தில் அமைந்திருப்பது பழமுதிர்ச்சோலை.