சிவஸ்ரீ சைவ சித்தாந்த  ஈசான சிவாச்சாரியார் - பழனி
(சுப்பு ரத்தின குருக்கள்)
   

தமிழ்நாட்டு தவப்புதல்வராக கொங்குநாட்டில் உள்ள சென்னிமலையில் சிவஸ்ரீ காவேரி சிவசுப்ரமணிய குருக்களுக்கும் மாதுஸ்ரீ
பாக்யலக்ஷ்மி அம்மையாருக்கும் 1901 ஆம் ஆண்டு சென்னிமலையில் பிறந்தார். தனது ஏழாவது வயதில் தந்தையாரால் உபநயனம், சமயதீக்ஷை செய்விக்கப் பெற்றார். வேத சிவாகமங்களை தேவக்கோட்டை சிவாகம சங்க பாடசாலையில் கண்டதேவி சிவஸ்ரீ. காளீஸ்வர சிவாச்சாரியாரிடம் பயின்றார். தமிழ் இலக்கணம் மற்றும் சைவசித்தாந்த பாடங்களை தூத்துக்குடி சிவஸ்ரீ. முத்தைய்யா பிள்ளையிடம் கற்றுணர்ந்தார். பின்னர் சென்னிமலை ஆண்டவன் அருளால் அன்பு அகலாத மனைவியை மணம் கொண்டார். நிர்வாண தீக்ஷை, ஆச்சார்யாபிஷேகம் செய்து கொண்டுத் தினம் ஆத்மார்த்த பூஜையில் நித்யாக்னி ஹோமங்கள் செய்து பூஜிப்பார்.

பழனியிலும், சென்னிமலையிலும் வேதசிவாகம பாடசாலை நிறுவி தலைமை ஆசிரியராக இருந்து பல மாணவர்களை உருவாக்கினார்.வேதசிவாகமம், திருமுறைகள், புராணங்கள், சைவசித்தாந்த சாஸ்திரம் போன்றவற்றின் அரியகருத்துக்களை எளிமையாக சொற்பொழிவு செய்வதில் சிறந்தவராக திகழ்ந்தார்.

"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதற்கிணங்க இவர் அநேக சிவாச்சாரியார் மற்றும் சைவ அன்பர்களுக்கு சிவதீக்ஷை செய்துள்ளார். அவர்களில் மிக முக்கியமானவர்கள், சென்னிமலை, ஈரோடு, பழனி, திருநெல்வெலி, சங்கரன்கோவில், தூத்துக்குடி போன்ற பல ஊர்களில் இவரிடம் சிவதீக்ஷை பெற்று பயன் பெற்றவர்கள் பலர் உள்ளனர்.

பல ஆலயங்களுக்கு ஸர்வசாதகராகவும் ஸர்வபோதகராகவும் இருந்து கும்பாபிஷேகங்கள் நடத்தி உள்ளார். குறிப்பாக சேலம்  ஸ்ரீ சுகவனேஸ்வரர் ஆலயம், பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், திருவாவினங்குடி(பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடந்தது) மற்றும் ஈரோடு, கோபி செட்டிபாளையம், பாரியூர்,பவானி, பேரூர் மற்றும் கொங்குநாட்டு திருத்தலங்கள் என பல ஆலய கும்பாபிஷேகங்களும், பழனியில் 33 குண்டங்கள் அமைத்து சிறப்பான முறையில் கும்பாபிஷேகத்தையும் நடத்தியுள்ளார்.

1940 ஆம் ஆண்டுக்கு முன்னர் காசியில் தங்கி அங்கே ஓர் குருநாதர் மூலம் ஞானசாஸ்திர பயிற்சிகள் பெற்று காசி விஸ்வநாதர் திருவருள் பெற்றார். நேபாளம் வரைசென்று பல அருளாளர்களையும் பசுபதி நாதரையும் தரிசித்தார். 1941 ஆம் ஆண்டு தருமையாதீனத்தில் நடந்த சைவசித்தாந்த மாநாட்டில் தலைமை தாங்கி விரிவுரை செய்து "சிவஞான போதசூத்திரத்திற்கு விளக்கம்" என்ற நூலை எழுதி வெளியிட்டார். அப்போது தருமை ஆதீன 25வது குருமஹா சன்னிதானம் கயிலை குருமணி சுப்ரமணிய தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் "சைவ சித்தாந்த சரபம்" என்ற விருதினை வழங்கினார். அப்போது சைவசித்தாந்தத்தை மரபு வழி கற்றுக் கேள்வி பெற்ற இவர் தாம் கற்றவற்றை அனுஷ்டானத்தில் கொண்டு ஒழுகுபவர் ஆதலால் இவர்தலைமை சிறப்பு பெற்றது எனவும் பாராட்டினார்.

கோவையிலிருந்து வெளிவந்த "சிவாகமவித்யா" என்ற மாத இதழுக்கு துணை ஆசிரியாராக பணியாற்றி பல கட்டுரைகள் எழுதி உள்ளார். "சைவ அனுஷ்டானவிதி" என்னும் நூலை சைவ உலகத்திற்கு அளித்துள்ளார். ஆகம பயிற்சி இல்லாத அர்ச்சகர்களை கோவில் பணியிலிருந்து வெளியேற்ற அரசு ஆணையிட்ட போது அறநிலைத்துறை கமிஷனர் அவர்களை சந்தித்து பாதிக்கப்பட்ட அர்ச்சகர்கள் நிலையை எடுத்துக்கூறி, அரசு ஆணையை திரும்பப்பெறுமாறு செய்து, ஆலய வருமானத்திலிருந்து, ஆகம பாடசாலை நடத்தியும், பயிற்சி வகுப்புகள் நடத்தியும் ஆகமப் பயிற்சி கொடுக்க வேண்டும், என கமிஷனருக்கு ஆலோசனை கூறி அதன்படி அறநிலையத்துறையின் பொறுப்பில் பழநியில் ஒரு ஆகமப்பாடசாலை நிறுவி அதில் தானே தலைமை  ஆசிரியராக பணிபுரிந்து பல அர்ச்சகர்களை உருவாக்கினார்.

சென்னிமலையில் "கலாஞான சங்கம்" அமைத்து அதன் மூலம் சாஸ்திர, தோத்திர கருத்துக்களை தமிழக தலைசிறந்த சான்றோர்களை வரவழைத்து சொற்பொழிவு கூட்டங்கள் நடத்தியுள்ளார். இன்னும் பல அரிய அற்புத விஷயங்கள் இவரைப் பற்றி பல சீடர்கள் அறிந்திருப்பார்கள். விபரங்கள் அறிந்த பெரியோர்கள் நமது இணையதள மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. அல்லது 6374847909 என்ற whatsapp எண்ணிற்க்கு அனுப்பவும்.


பல விருதுகளையும் பாரட்டுகளையும் பெற்ற இவர் தமது 62-வது வயதில் 10-04-1963ல் சிவசாயுஜ்யம் அடைந்தார்.

        வாழ்க ஆதிசைவர்கள்! வாழ்க அவர்கள் தம் தொண்டு

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!