சிவஸ்ரீ சொ.சுந்தரேச சிவாச்சாரியார் - மாதர்வேளூர்
நாகை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, மாதர்வேளூர், மாதலிச்சரம் எனும் தலத்தில் ஆதிசைவ குலத்தில் தோன்றி, வேதசிவாகம வித்வானாக திகழ்ந்து பல ஆதிசைவ மாணவர்களூக்கு வேத சிவாகமங்களை குருகுல வாசமுறையில் தன்னுடைய இல்லத்தில் பயிற்சி தந்து, பல கும்பாபிஷேகங்களில் ஆச்சாரியாராகவும், சாதகமாகவும், சர்வசாதகமாகவும் திகழ்ந்து "மாதர் வேளூர் ஐயா" என்று பலராலும் அழைக்கப்பட்டு, செட்டிநாட்டு நகரத்தாராலும் போற்றிப் புகழப்பட்ட சிவஸ்ரீ சொர்ண குருக்கள் என்ற இராமாமருத குருக்கள் மாதுஸ்ரீ யோகாம்பாள் தம்பதியினருக்கு தனது குலதெய்வம் ஸ்ரீ குடவரசி அம்பாள் அருளால் மூன்று திருக்குமாரர்கள் பிறந்தார்கள். அவர்களில் இரண்டாவதாக சிவஸ்ரீ சுந்தரேச சிவாச்சாரியார் விசுவாவசு ஆண்டு சித்திரை மாதம் பிறந்தார்.
தமது எட்டாவது வயதில் உபநயனம், சமயதீக்ஷை பெற்று ஆரம்ப பால பாடம், சிவாகமங்கள், அர்ச்சனை, தியானங்களை தமது தந்தையாரிடம் கற்றார். பின்னர் விசேஷ தீக்ஷை, நிர்வாண தீக்ஷை, ஆச்சாரியாபிஷேகம் ஆகியவற்றை பல ஆதிசைவ பெரியோர்கள் துணையுடன் இவர் தந்தையார் செய்வித்தார்.
வடரங்கத்திற்கு தெற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள எலத்தூர் வேதவித்வான் ப்ரஹ்மஸ்ரீ ராமசாமி சாஸ்திரிகளிடம் வேதமும், ப்ரஹ்மஸ்ரீ சுந்தரராம சாஸ்திரிகளிடம் ஸப்த காவ்ய சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்து, தனது பதினெட்டாம் வயதில் சீர்காழி தாலுக்கா, வள்ளுவக்குடியில் சிவஸ்ரீ குப்புசாமி சிவாச்சாரியாரின் மூன்றாவது புதல்வி மாதுஸ்ரீ வேதாம்பாளை விவாஹம் செய்தார். தேவக்கோட்டை நகரத்தார்கள், கும்பாபிஷேகம் என்றவுடன் மாதர்வேளூர் ஐயா வந்தால் தான் கும்பாபிஷேகம் சிறப்பாக இருக்கும் எனக் கூறி அவரை சர்வசாதகமாக வைத்து சிறப்பு பெறுவார்கள்.
அவருடைய மூத்த குமாரர் சிவஸ்ரீ சேதுபதி சிவாச்சாரியார் பல கும்பாபிஷேகங்களுக்கு சர்வசாதகராக இருந்து "சிவயாக நிர்வாக சாம்ராட்" என்ற விருதினை பெற்றுள்ளார். காச்யப கோத்திரத்தில் தோன்றிய இவர் பல சமுக தொண்டுகளூம் செய்துள்ளார். பல ஏழை ஆதிசைவ குடும்பங்களில் திருமணங்களை தன்பொறுப்பிலும், அதற்குண்டான செலவுகளையும் தான் ஏற்று நடத்தி வைத்துள்ளார்.
பழகுவதிலும், பேசுவதிலும், தோற்றத்திலும் எளிமையுடன் நயமும் கொண்டவர். நிர்வாகம் எப்படி செய்வது? ஆச்சாரிய பெருமக்கள், நிர்வாகிகள், மற்றும் பொதுமக்களிடம் எப்படி பழகுவது? கும்பாபிஷேகத்தில் நிர்வகிக்கும் போது ஏற்படும் சில இடர்பாடுகளை எங்கனம் எளிமையாக தீர்ப்பது? போன்ற இனிய குணநலன்களும் ஆற்றலும் பெற்றவர். ஒர் ஆலய கும்பாபிஷேகத்தில் ஸ்தல சிவாச்சாரியாரை முன்னிலைப்படுத்தி அவ்வாலயத்தில் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற வழி காட்டியவர் ஆவார். ஆத்மார்த்த சிவபூஜையின் சிறப்புகளை அடிக்கடி உணர்த்தியவர்.
சென்னை பெரம்பூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிஷேகத்தில் ஸ்ரீ பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் முன்னிலையில் ஆலய பரம்பரை டிரஸ்டியும், ஆலய அர்ச்சகருமான சிவஸ்ரீ சுப்பிரமணிய குருக்கள் அவர்களிடம் 'சிவமஹாயாக நிர்வாகமணி" என்ற விருதும் பொற்பதக்கமும் பெற்றார்.
காஞ்சி சங்கர மடத்தின் வேத சிவாகம ஸதஸில் பங்கு பெற்று அநேக அரிய ஆகம விஷயங்களை தெளிவாக்கியுள்ளார். ஸ்ரீ மஹாஸ்வாமியின் அருளாசியும், பாராட்டையும் பெற்றார். தமது (மணிவிழா) அறுபதாம் ஆண்டு விழாவிற்கு முன்னர் தனது குலதெய்வம் அருள்மிகு குடவரசி அம்பாள் ஆலய கும்பாபிஷேகத்தை நடத்தி, தொடர்ந்து இவரது மணிவிழா சிறப்பாக பல ஆன்றோர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. மறுதினம் சிவசாயுஜ்யம் அடைந்தார்.