சிவஸ்ரீ கி.இராமலிங்க சிவாச்சாரியார் - திருவண்ணாமலை

பஞ்ச பூத தலங்களில் இறைவன் அக்னி வடிவமாகி அருளாட்சி புரிகின்ற அருள்மிகு உண்ணாமுலை உடனருள் அண்ணாமலையார் ஆலய தலைமை சிவாச்சாரியாரான பெரியபட்டம் வி.கிருஷ்ணசாமி குருக்கள் - நாகலெக்ஷ்மி அம்மாள் தம்பதிகளுக்கு ஆனந்த வருஷம், கார்த்திகை மாதம் 11-ம் தேதி பூரட்டாதி நக்ஷத்திரம், 26-11-1914 அன்று காச்யப கோத்திரத்தில் பிறந்தார். இளமை வயதிலிருந்தே பூஜை வழிபாடுகளில் மிகுந்த ஈடுபாடு  கொண்டவர். நாட்டுக்கோட்டை நகரத்தார் வேத பாடசாலையில் வேதம், சாஸ்த்திரம்,பயின்றார். தமது பெரியதந்தை சிவஸ்ரீ வெ.சோணாத்ரி குருக்கள் அவர்களிடம் ஆகமம் பயின்று, அவராலேயே சமய, விசேஷ, நிர்வாண தீக்ஷையும், ஆச்சார்யாபிஷேகமும் செய்யப்பெற்று, "தத்புருஷசிவம்" எனும் தீக்ஷா நாமத்துடன் ஸ்ரீ அண்ணமலையார் ஆலய தலைமை அர்ச்சகராக பணியாற்றி, பல சிவாச்சாரியார்களை முறையாக பயிற்றுவித்து அர்ச்சகர் பணி செய்ய வழிவகுத்தார். சுமார் 150 நபர்களுக்கு மேல் சிவதீக்ஷை செய்து வைத்துள்ளார்கள்.

இவருடைய காலத்தில் ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயத்தில் பள்ளியறை மேரு புணருத்தாரணமும், புதிய பராசக்தி அம்பாள் கும்பாபிஷேகமும், முதன்முதலில் சுவாமிக்கு சஹஸ்ரகலசாபிஷேகமும் தன் சொந்த செலவிலேயே செய்து வைத்தார். 1976-ல் நடந்த கும்பாபிஷேகத்தில் உத்தமோத்தம முறையில் 33 குண்டம் அமைத்து, அக்காலத்திலேயே மிகவும் சிறப்பாக, தானே பிரதான ஆச்சாரியராக இருந்து நடத்தியவர் ஆவார். இது தவிர வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம், மைலம் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி ஆலயம், தருமபுரி கோட்டை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம் தவிர வெளி மாநிலங்களில் பங்காருபேட்டை ஸ்ரீ கல்யாண முருகன் திருக்கோயில், பிலாய் ஸ்ரீ பிள்ளையார் கோவில் போன்ற கும்பாபிஷேகங்களும் நடத்தி வைத்துள்ளார்.

           இவருக்கு முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் அவர்களால் "சிவாகம வித்யா சரஸ்வதி" என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய அர்ச்சகர் சங்கத்தின் தலைவராகவும், திருவண்ணாமலை திருமுறை கழகத்திலும், திருநாவலூர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பணியில் முக்கிய பொறுப்பும், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடம் வளர்ச்சியில் பெரும்பங்கும் வகித்தவர். திருவண்ணாமலையில் தைமாதம் நடைபெறும் திருவூடல் உற்சவத்தில் சுவாமியின் சிறப்பு அபிஷேகங்களுக்கு டிரஸ்ட் வைத்து அதன் மூலம் ஆண்டு தோறும் இத்திருவிழாவை செம்மையாக நடத்தி வந்தார். தொடர்ந்து இவரது குமாரர் ஸ்ரீ ஹாலாஸ்யநாத சிவாச்சாரியார் அப்பணியை செய்து வருகிறார். இவருடைய சீடர்கள் பலர் பாரதம் முழுவதும் பரவி உள்ளனர். இவர் 26-06-1999 அன்று சிவசாயுஜ்யம் அடைந்தார்.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!