சிவஸ்ரீ பஞ்சாபிகேச சிவாச்சாரியார் - திருத்துறைபூண்டி
திருத்துறைப்பூண்டி ஸ்ரீபவ ஔஷதீஸ்வரர் சிவாலய பரம்பரை அர்ச்சகர் சிவஸ்ரீ. ராமஸ்வாமி சிவாச்சாரியார் அவர்களுக்கு 24-09-1898 ஆம் வருடம் பிறந்தார். 12-ம் வயதில் தனது தந்தையார் காலமான பிறகு தனது அண்ணா சிவஸ்ரீ சுப்பையா குருக்கள் அவர்கள் மாயூரம் வேத சிவாகம பாடசாலையில் இவரை சேர்த்து சர்வ சாஸ்த்திர விசாரதா எனும் பட்டம் பெற செய்தார்.
சிவஸ்ரீ. வைத்யநாத சிவாச்சாரியாரிடம் சப்த காண்ட யஜுர்வேத அத்யாயனம், மூலாகம வசனங்களுடன் நித்ய நைமித்திக உத்சவம் காரிகை பிரயோகங்கள், சாஸ்திரம் மற்றும் தர்க்கம், வியாகரண சாஸ்த்திரம் காவ்ய நாடகம் பயின்று கவிதை, ஸ்லோகங்கள் இயற்றும் ஆற்றலும் பெற்றார்.
1930-ல் தேவகோட்டை சித்தாந்த பரிபாலன சங்கம் பொறுப்பு ஆசிரியராகவும் திகழ்ந்தார். கீழ்வேளூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் முதலிய பல தலங்களில் சிவாச்சாரியார்களிடம் இருந்த சுவடுகளை சேகரித்து 28 ஆகமங்களையும், அதன் நான்கு பாதங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சுவடிகளை படி எடுத்து தேவக்கோட்டை சித்தாந்த சபை நூலகத்தில் வைத்துள்ளார். அவற்றில் கிரணாகமம் 4 பாதங்கள் 1932-ல் வெளியிடப்பட்டது. "கிரணாகம மஹாதந்த்ரம்" என்ற நூலும் வெளியிட்டுள்ளார். சைவபூஷணம், சைவ சித்தாந்த பரிபாஷை மூலமும் தமிழ் உரையும், பரார்த்த நித்ய பூஜா விதி எனும் நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவைதவிர பல புத்தகங்களை எழுதி தேவக்கோட்டை சிவாகம சங்கத்தில் வெளியிட்டுள்ளார். தேவக்கோட்டை ஆலால சுந்தரர் சங்க மாதவெளியீடு, திருச்செந்தூர் சிவஸ்ரீ முத்தைய்யா பட்டர் மாத வெளியீடுகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
அம்பகரத்தூர் சிவஸ்ரீ நாகநாத சிவாச்சாரியாரின் மூத்தகுமாரி ஸ்ரீமதி கமலாம்பாளை திருமணம் செய்து கொண்டார். தமது குரு சிவஸ்ரீ வைத்யநாத சிவாச்சாரியாரிடம் தீக்ஷைப் பெற்று தத்புருஷ சிவம் எனும் தீக்ஷாநாமம் பெற்றார். 1935-ம் வருடம் சென்னை ஆர்.சி.பி.ராமஸ்வாமி அய்யர், கவர்னர், பூண்டி வாண்டையார், பாப்பாநாடு ஜமீன் இவர்கள் தலைமையில் திருவையாறு அம்மன் அக்ரஹாரத்தில் சிவாகம வகுப்பு ஆசிரியராகவும், திருவையாறு ஸ்ரீராஜா வேதபாடசாலையில் தலைமை சிவாகம ஆசிரியராகவும் 40 ஆண்டுகாலம் பனியாற்றினார்.
அச்சுவேலி சிவஸ்ரீ. குமாரசாமி சிவாச்சாரியார் புத்தக வெளியிடுகளில் புத்தக பரீக்ஷாதிகாரியாக இருந்து வந்துள்ளார். தமது கட்டுரை மற்றும் சந்தேக விளக்கங்களையும் வெளியிட்டுள்ளார். தருமை ஆதீனம் 25-ம் சன்னிதானம் விழாவில் ஆகமவசன நித்யபூஜா லக்ஷண சங்க்ரஹம் என்ற நூல் பரிசோதகராக திகழ்ந்தார். அல்லூர் வேதசிவாகம பாடசாலையில் பல ஆண்டுகள் பரீக்ஷாதிகாரியாக இருந்துள்ளார்.
பாண்டிச்சேரி பிரஞ்ச் இன்ஸ்டியூட் ஆப் இண்டாலஜி என்.ஆர்.பட். அவர்களுக்கு ஒலைச்சுவடிகளை உபசரித்து பல ஆகம நூல்கள் வெளிவர உதவியுள்ளார். காஞ்சி ஸ்ரீமட மஹா சுவாமிகளால் நடத்தப்பட்ட வியாச பாரத வேதசிவாகம வைஷ்ணவ சிற்பகலா வித்வத் ஸதஸில் இளையாத்தங்குடியில் 1962-லும், 1963-ல் மதுரையிலும் 1964-ல் காஞ்சிபுரத்திலும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். திருவாடனை அய்யாமணி சிவாச்சாரியார் தலைமையில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் சிவாகம குறுகியகால பயிற்சி வகுப்பு ஆசிரியராக இருந்துள்ளார். தமிழகமெங்கும் பல கும்பாபிஷேகங்களுக்கு சர்வசாதகராக இருந்து சிறப்பித்துள்ளார்.
18-01-1979-ல் சிவசாயுஜ்யத்தை அடைந்தார்.
அவர் புகழ் ஒங்குக.