சிவஸ்ரீ இஷ்டசித்தி க.ஏகாம்பர குருக்கள் - காஞ்சிபுரம்
காஞ்சி ஸ்ரீகாமாட்சி உடனாகிய ஸ்ரீஏகாம்பரேசுவர சுவாமி ஆலய பரமபரைஅர்ச்சகரான சிவஸ்ரீ இஷ்டசித்தி கச்சபேசுவர குருக்கள்-திருபுரசுந்தரி அம்மாள் தம்பதிகளுக்கு அக்ஷய வருடம், வைகாசி மாதம் 17-5-1926-ல் இஷ்டசித்தி ஏகாம்பர குருக்கள் பிறந்தார். ஆரம்பகல்வி பயின்ற பிறகு காஞ்சிபுரம் நகரத்தார் வேத சிவாகம பாடசாலை பிரஹ்ம ஸ்ரீ புண்ணியகோடி சோமசுந்தர குருக்கள் பிரஹ்ம ஸ்ரீ இஷ்டசித்தி சோ.கச்சிபேசுவரகுருக்கள், பிரஹ்ம ஸ்ரீ விளக்கடி கோவில் விஸ்வநாத குருக்கள் ஆகியோரிடம் வேதம்,சிவாகமம் பயின்று போதாயன சூத்திரம், ப்ரயோகம் செய்து வைக்கும் வல்லமையும் பெற்றார்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா முதலிய மாநிலங்களிலும், டில்லியிலும் பிரதானஆச்சார்யராகவும், சாதகராகவும், சர்வசாதகராகவும் பல ஆலய கும்பாபிஷேகங்களை சிறப்பாக நடத்தி உள்ளார். பாரதபிரதமர் இந்திராகாந்தி, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். முதலானவர்களுக்காக, பலவேள்விகள் செய்து பாராட்டுப் பெற்றவர். திருத்துறைப்பூண்டி ஆகம வித்வத் சதஸ்ஸில் சிவாகம ரத்னம் விருதினையும் , காஞ்சி செம்பொற்க்கோவில் கும்பாபிஷேகத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் தங்கத்தோடாவும், வித்வத் சால்வையும் 1976-ல் பெற்றார். 1984 சென்னையில் காஞ்சி காமகோடி பீடம் பொன்விழாவில் வெள்ளி பதக்கமும் வாங்கியுள்ளார்.
1964 வருடம் அகோர சிவாச்சாரியார் பத்ததி , சிவப்பிரதிஷ்டா விதி ஆகிய நூல்களை தென்னிந்திய அர்ச்சக அசோசியேஷன் மூலமாக மறுவெளியீடாக சீர்திருத்தத்துடனும், விளக்கத்துடனும் தகப்பனார் பெயரில் வெளியிட்டார். காஞ்சி நகரத்தார் பாடசாலையில் பயின்று அதே பாடசாலையில் ஆசிரியராகவும் இருந்து வந்தார். காஞ்சி மஹாபெரியவர் ஸ்ரீமடத்தின் மூலமாக வேதசிவாகம, சாஸ்திர பாடசாலை அமைத்து அதன் தலைமை ஆசிரியர் பொறுப்பை இவருக்கு அளித்தார். அந்த பாடசாலை தற்கால வேடல் கிராமத்தில் நடந்து வருகிறது.
வாழ்க அவர் பரம்பரை! வளர்க அவர் சிவத்தொண்டு!