சிவாச்சாரியார் வரலாறு
திருக்கயிலாயத்தில் பார்வதி பரமேசுவரன் திருக்கல்யாணம் நடந்த சமயம் பார்வதி பரமேசுவரனிடம், "சுவாமி! தங்களுக்கு மிக விருப்பமானதை செய்திட ஆசைபடுகிறேன்" என்றிட இறைவன் தனக்கு விருப்பமானதை பூசனை என கூறிட,
"எண்ணிலா ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை" என உரைத்தருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணில் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்து"
உமாதேவியார் மிக உவந்து பூசனை பொருட்களுடன் வந்து, "இறைவா! பூசனைபுரிய அனுமதிக்க வேணும்" எனக் கேட்டு நின்றாள். இறைவர், "தேவி! பூசனைக்கேற்ற இடம் பூலோகமே, பூலோகத்தில் பூசனை செய்து அதன் பயனைக் கைலாயத்தில் அனுபவிக்கலாம் என்றிட, தேவி "பூலோகத்தில் எங்கு பூஜிக்கலாம்? எப்படி பூஜிக்க வேண்டும்?" என்று கேட்க, இறைவன், "நகரேஷு காஞ்சி என்னும் (ப்ருத்வீ தலம்) காஞ்சிபுரம் அங்கு சென்று பூஜிக்க" என்று கூறி, பூசனை செய்ய நான்கு வேதங்கள், இருபத்தியெட்டு ஆகமங்கள், ஆறு அங்கங்கள் ஆகியவற்றையும் உபதேசமாகக் கூறினார்.
ஸ்காந்தே அகஸ்த்ய ஸம்ஹிதாயாம்
ப்ரணவாத்யா மஹா மந்த்ரா: அகாராத்ய க்ஷராணிச
சிவக்ஞாநாநி த்ரவ்யாணி காமிகாதீநி பூஸூரா:
ஸ்ரீமத் ஹாலாஸ்ய நாதஸ்ய ஸம்பவத் ஊர்த்வ வக்த்ரத:
புநஸ்த்வ தேவ தேவஸ் தத்புருஷாக்யயேந வக்த்ரத:
ஏகவிம்சதி பேதேநயுக்தம் ருக்வேத மப்ரவீத்
யஜுர்வேத த்வேகசத பேதயுக்தம் அகோரத:
ஸஹஸ்ர சாகா ஸம்யுக்தம் ஸாமவேதந்து வாமத:
அதர்வம் நவதாபிந்தம் ஸத்யோஜாதேந மப்ரவீத்
ஊர்த்துவ முகமான ஈசானத்திலிருந்து சிவஞானத்தை தரகூடிய சிவாகமங்கள் இருபத்தியெட்டினையும், தத்புருஷ முகத்திலிருந்து இருபத்தியொரு பேதங்களை உடைய ரிக் வேதத்தையும், அகோர முகத்திலிருந்து நூற்றியொரு பேதங்கள் உடைய யஜுர் வேதத்தையும், வாமதேவ முகத்திலிருந்து ஆயிரம் சாகைகளையுடைய ஸாம வேதத்தையும்,ஸத்யோஜாத முகத்திலிருந்து ஒன்பது பேதங்களுடைய அதர்வண வேதத்தையும் உபதேசமாகக் கூறினார். "ஆகமத்தின் மூலமாக பூஜை செய்ய வேண்டிய முறைகள் எத்தனை லிங்கங்களை வைத்து ஆத்மார்த்த பூஜை செய்ய வேண்டும்? என்னென்ன லிங்கங்களை வைத்து பூஜை செய்தால் என்னென்ன பலன்கள்?" என்று தேவி கேட்டாள்.
ஆத்மார்த்த பூஜையில் க்ஷணிகலிங்க பூஜையை கல் முதலிய பன்னிரெண்டினாலும் செய்யலாம், என்றிட அவற்றுள் நாலாவதாக கூறிய நதிமிருத்தை (மண்ணையே) சிவலிங்கமாகக் கொண்டு பூஜை செய்ய முற்பட்டாள். அதனை திருஞானசம்பந்த சுவாமிகள்
"வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக
போதத்தால் வழிப்பட்டாள் புள்ளிருக்கு வேளுரே" என்று பாடியுள்ளார்.
இவ்வாறு தினம் வழிபாடு செய்து வரும்போது ஒரு நாள் தேவியின் பக்தியை சோதிக்க எண்ணி, தனது தலையில் உள்ள கங்கையை பூஜை செய்யும் இடத்திற்கு மேற்கே சென்று அவிழ்த்துவிட ஓவென்ற இரைச்சலுடன் வெள்ளமாக வர, உடனே பூஜிக்கும் சிவலிங்கத்திற்கு எந்த இடையூறும் வராமல் பாதுகாப்பாக இருகைகளாலும் தழுவிக் கொண்டாள். இதனை சுந்தரமூர்த்தி சுவாமிகள்
எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்துள்ளி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்ற வா கண்டு
வெள்ளங்காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
கள்ளக்கம்பனை எங்கள் பிரானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே.
மேற்கேயிருந்து வந்த வெள்ளத்தை கண்டு தன் இருகைகளாலும் தழுவிட வெள்ளம் இருபக்கமும் சென்று கிழக்கில் ஒன்று சேர்ந்துள்ளது கம்பாநதி. தன்னை மறந்து, என்னை நினைந்து, சிறப்பான முறையில் வழிபட்டு வரும் தேவிமுன் காட்சி தந்து உன் பக்தியில் மகிழ்ச்சி அடைந்தோம்!. உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்க தங்களை என்றும் பிரியாமல் இருக்க வரம் தருமாறு கேட்டாள். அவ்வாறே தம்முடலில் இடது பாகத்தை தருகிறோம், என்று சுவாமி கூறிட, மேலும் இன்று வரை தங்களை பூஜித்து வந்தது தடைப்படாமல் தொடர்ந்து நடைபெற அருள் பாலிக்க வேணுமெனக்கேட்க, இறைவன் உடனே தன் ஐந்து முகங்களிலிருந்து ஐந்து ரிஷிகளை சிருஷ்டித்தார்.
கௌசிக காச்யபச்சைவ பாரத்வாஜோத கௌதம:
அகஸ்த்யச்சைவ பஞ்சே தே பஞ்சவக்த்ரேஷு தீக்ஷிதா:
கௌசிகர், காச்யபர், பாரத்வாஜர், கௌதமர், அகஸ்தியர் என்ற ஐந்து ரிஷிகளையும் தோற்றுவித்து தனது ஐந்து முகங்களின்று தீக்ஷை செய்து, அவர்களுக்கு ஐந்து மடங்களை தந்து சிவபரிபாலனம் செய்து வருமாறு அருளி செய்தார். பல சிஷ்யர்களை உருவாக்கி அவர்களுக்கு சிவ தீக்ஷை செய்து, கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம், ப்ரதிஷ்டாதி உத்ஸவாந்தம், உத்ஸவாதி ப்ராயச்சித்தாந்தம் செய்யும் முறைகளை அறிவித்து, சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிர்வாணதீக்ஷை, ஆச்சார்யாபிஷேகம், முதலியவைகளைச் செய்வித்து ஆத்மார்த்த சிவபூஜை, பரார்த்த பூஜைகள் முதலியவைகளை பரவச் செய்து, சிவ பரிபாலனம் செய்து வருமாறு ஆக்ஞாபித்தார்.
கைலாஸ சிகரேரம்யே சிவஸ்யாப்யர்ச்சநார்த்தகம்
மத்யே மந்தானகாளீசம் பூர்வேச ஆமர்த்தகீ ததா
யாம்யே புஷ்பகிரீஞ் சைவ கோளகம் சௌம்ய தேசகே
ரணபத்ரம் பச்சிமே சாபி அதிபாஞ்ச ததச்ருணு
தூர்வாஸ ருருச்சைவ ததீசி ச்வேதமேவச
உபமன்யுரிதிக்யாத: மடாநாம் அதிபாம் ச்ருணு
கௌசிகோ ஊர்த்து வக்த்ரேண தீக்ஷிதோ சிவகோசர:
காச்யபோ புருஷேனைவ சிகாகோசர ஸம்ஸகம்
பாரத்வாஜோப்ய கோரேண தீக்ஷிதோ ஜோதிகோசர:
வாமே கௌதம ஸம்க்ஞானம் ஸாவித்ரி கோசரஸ்மிருதம்
ஸத்ய வக்தரோத்ய கஸ்தயச்ச தீக்ஷிதோ வ்யோமகோசர
பஞ்சகோசர ஸம்ஞானம் ஆதிசைவா இதிஸ்ம்ருதா
கோசரம் சிவ சின்னம்ஹி கோத்ரஸ்ய முனிவர்ககம்
ஸூத்ர மாசாரமேவம்ஹி சைவாநாம் உத்யதே க்ரமாது
ருத்ராக்ஷமுபவீதஞ்ச ததாசைவ சோத்தரீயகம்
பஸ்மஞ்ச தண்ட கௌபீனம் பஞ்சமுத்ரா ப்ரகீர்த்திதா
சிகாநாமேவ ஸாமாந்யம் உஷ்ணீஷம் குருணாமபி
ஆதௌ சிவஸ்வமஸ்தீதி ஆதிசைவ உதீரத:
சிவ தீக்ஷிதச் சைவ ஏதே சிவப்ராஹ்மண இதி ஸ்ம்ருதா:
1. கௌசிகர்
ஈசான முகத்தால் தீக்ஷை செய்விக்கப்பெற்று மந்தானகாளீச மடத்தையும் அதன் அதிபராக தூர்வாச மஹரிஷியையும் பெற்று
சிவகோசரத்தின் மூலமாக
கௌசிகோ நந்தகோ தக்ஷோ விச்வாமித்ர ஸுநந்தன:
வால்மீகிச முனிஸ்ஸத்யம் புலஸ்த்யோ விபுலஸ்ததா
அதிதீர்க்கச்ச வக்த்ராங்கோ போதாயநஸ் ஸநாதன:
ஸநத்குமாரோ மேதாவி வால்மீகோ மத்யமஸ்தக
ஆச்வாலாயநச்சாங்கிச்ச சிவகோசரவர்க்கிண:
1. கௌசிகர் 2. நந்தகர் 3. தக்ஷர் 4. விச்வாமித்ரர் 5. ஸுநந்தஸ் 6.வால்மீகி 7. ஸத்யர் 8. புலஸ்தியர் 9. விபுலர் 10. அதிதீர்க்கர்
11. வக்த்ராங்கர் 12. போதாயனர் 13. ஸநாதர் 14. ஸனத்குமாரர் 15. மேதாவி 16. ஆச்வலாயநர்
இவர்கள் கௌசிகரிடம் சிவ தீக்ஷை பெற்ற சிவகோசரத்தை சார்ந்தவர்கள்.
2. காச்யபர்
தத்புருஷ முகத்தால் தீக்ஷை செய்விக்கப்பெற்று ஆமர்த்தகீ மடத்தையும் அதன் அதிபராக ருருமஹரிஷியையும் பெற்று சிவகோசரத்தின் மூலமாக
காச்யபோ ஆங்கிரச ஸ்தூல கர்த்தபச்சய வநோதக:
நாட்யாயனச்ச சாண்டில்ய சங்குகர்ண புராந்தந:
சங்கஸ்தூல சிகினச்சைவ முக்யோவை ரோம ஹர்ஷண:
ஆபஸ்தம்பா இமேஸர்வா : சிகாகோசரவர்கிண:
1. காச்யபர் 2. ஆங்கிரசர் 3. ஸ்தூலரிஷி 4. கர்த்தபரிஷி 5. வநோதகர் 6. நாட்டியாயனர் 7. சாண்டில்யர் 8. சங்குகர்ணர்
9. புராந்தனர் 10. சங்கர் 11. ஸ்தூலர் 12. சிகினர் 13. முக்யர் 14. ரோமரிஷி 15. ஹர்ஷணர் 16. ஆபஸ்தம்பர்
இவர்கள் காச்யபரிடம் சிவதீக்ஷை பெற்று சிகா கோசரத்தை சார்ந்தவர்கள்.
3.பாரத்வாஜர்
அகோர முகத்தால் சிவ தீக்ஷை செய்விக்கப்பெற்று புஷ்பகிரி மடத்தையும் அதன் அதிபராக ததீசி முனிவரையும் பெற்று ஜோதி கோசரத்தின் மூலமாக
பாரத்வாஜ த்ரிசங்குச்ச மார்க்கண்டேயோ சநோரஜ:
ஸுமஹோ தேவலோ ஜங்க: பிங்களோ வருணஸ்ததா
விச்வஸ்ருட் வியாக்ரபாதச்ச ரோமச்சாந்த்ர வாஜஸ:
க்ருணச்சைவ இமேஸர்வே ஜோதி கோசர வர்கிண:
1. பாரத்வாஜர் 2.திருசங்கு 3. மார்க்கண்டேயர் 4. சநோரஜர் 5. ஸுமஹர் 6. தேவலர் 7. ஜங்கர் 8. பிங்களர் 9. வருணர் 10. விசவஸ்ருட் 11. வ்யாக்ரபாதர் 12. ரோமசர் 13. சாந்த்ரவர் 14. கிருஷ்ணர்
இவர்கள் பாரத்வாஜரிடம் சிவ தீக்ஷை பெற்று ஜோதி கோசரத்தை சார்ந்தவர்கள்.
4.கௌதமர்
வாமதேவ முகத்தால் சிவ தீக்ஷை செய்விக்கப்பெற்று கோளகீ மடத்தையும் அதன் அதிபராக ச்வேத மஹரிஷியையும் பெற்று ஸாவித்ரி கோசர மூலமாக
கௌதமோ கலபச் சைவ முத்கலோ வியவஸ் ததா
கவ்யச்ச விஜயச்சைவ பிந்துச்சோபந்த வஸ்ததா
ரிக்யச்சாங்கோ வஸிஷ்டச்ச காத்யாயநோ ப்ரஹஸ்பதி:
ஸாவித்ரி கோசரச்சைவ புனந்தே வ்யோம கோசரா:
1. கௌதமர் 2. கலபர் 3.முத்கலர் 4. வயவர் 5. கவ்யர் 6. விஜயர் 7. பிந்துசோபர் 8. ரிக்யர் 9. சாங்கியர் 10.வஸிஷ்டர்
11. காத்யாயனர் 12. ப்ரஹஸ்பதி
இவர்கள் கௌதமரிடம் சிவ தீக்ஷை பெற்ற சாவித்ரி கோசரத்தை சார்ந்தவர்கள்
5.அகஸ்தியர்
ஸத்யோஜாத முகத்தால் சிவ தீக்ஷை செய்விக்கப்பெற்று ரணபத்ர மடத்தையும் அதன் அதிபராக உபமன்யு மஹரிஷியையும் பெற்று வ்யோம கோசரத்தின் மூலமாக
பூதரோ கௌதமச்சைவ ச்வேத கௌத்ஸோ விபாவஸு:
பரசரச்ச பலிச : சம்பரோ நீலலோஹிதர்
பலவச்ச இமே ஸர்வே வ்யோம கோசர வர்கிண:
1. அகஸ்தியர் 2. பூதரர் 3.கௌதமர் 4. சுவேதர் 5. கௌத்ஸுகர் 6. விபாவஸு 7. பராசரர் 8. பலி 9. சம்பர: 10. நீலலோஹித
11. பலவர்
இவர்கள் அகஸ்தியரிடம் சிவ தீக்ஷை பெற்ற வ்யோம கோசரத்தை சார்ந்தவர்கள்.
ஆகமங்களும்,ஆதிசைவர்களும்
சைவ சமயத்தில் முதல் நூல்கள் இரண்டு. அவை வேதம், சிவாகமம். இவற்றுள், வேதத்தை பொது நூல் என்றும் ஆகமத்தை சிறப்பு நூல் என்றும் அழைப்பார்கள், இதனை திருமூலர் தமது திருமந்திரத்தில்,
"வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டத்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே"
என்று பாடியுள்ளார்.
இதே கருத்தை சைவ சித்தாந்த நூல் சிவஞான சித்தியார்,
"ஆரணநூல் பொது சைவம் அருஞ்சிறப்பு நூலாம்
நீதியினால் உலகர்க்கும் சத்தி நிபாதர்க்கும் நிகழ்த்தியது’ என்று கூறுகின்றது.
ஆதிசைவகளாகிய சிவசாரியார்கள் வேதங்களை பொதுவாகக் கொண்டு சிவபெருமானால் அருளப்பட்ட சிறப்பு நூலாகிய சிவாகமங்களையே தங்கள் வாழ்வில் பிரமாணமாகக் கொண்டவர்கள்.ஆகமமானது ஸதாசிவமூர்த்தியின் ஈசானம் தத்புருஷம், அகொரம்,வாமதேவம், ஸத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களில் மேல்முகமாகிய ஈசான திருமுகத்தில் இருந்து ’ஈசானஸ் ஸர்வ வித்யாணாம்’ என்ற வாக்கிற்கேற்ப எட்டு ஆகமங்களும் தத்புருஷம் முதலிய நான்கு முகங்களில் இருந்தும் ஐந்து ஐந்தாக இருபது ஆகமங்களும் ஆக மொத்தம் 28 ஆகமங்கள் தோன்றின.
சிவபெருமான் தனது சத்யோஜாத முகத்தில் இருந்து, காமிகம், யோகஜம் சிந்தியம், காரணம் அஜிதம் என்ற ஐந்து ஆகமங்களையும், வாமதேவம் என்ற திருமுகத்தில் இருந்து, தீப்தம், சூக்ஷ்மம், ஸஹஸ்ரம், அம்சுமான், சுப்ரேதம் என்ற ஐந்து ஆகமங்களையும், அகோரம் என்ற திருமுகத்தில் இருந்து விஜயம், நிச்வாசம், சுவாயம்புவம், அநலம், வீரம் என்ற ஐந்து ஆகமங்களையும், தத்புருஷம் என்ற திருமுகத்தில் இருந்து ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம் என்ற ஐந்து ஆகமங்களையும், ஈசானம் என்ற திருமுகத்தில் இருந்து புரோத்கீதம்,லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம் பாரமேஸ்வரம், கிரணம், வாதுளம் என்ற எட்டு ஆகமங்களையும் அருளிச் செய்தார்.
இந்த இருபத்தெட்டு ஆகமங்களும் சிவபேதம், ருத்ரபேதம் என்று இருவகைப்படும். சத்யோஜாதம், வாமதேவம் ஆகிய இருமுகங்களில் இருந்து அருளிய பத்து ஆகமங்கள் சிவபேதமாகும். ஈசானம், தத்புருஷம், அகோரம் ஆகிய மூன்று முகங்களிலிருந்து அருளிய பதினெட்டு ஆகமங்கள் ருத்ரபேதமாகும். மேற்கண்ட இருபத்தெட்டு ஆகமங்களும் ‘மூல ஆகமங்கள்’ என்று அழைக்கப்படும். இவையன்றி உப ஆகமங்கள் 207 உள்ளன. சிவபெருமான் தனது ஐந்து திருமுகங்களில் இருந்து இருபத்தெட்டு ஆகமங்களையும் அருளினார் என்பதை திருமூலர் தமது திருமந்திரம், ‘அஞ்சனமேனி அரிவையோர் பாகத்தன்’ என்னும் பாடலிலும், மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில், ‘மன்னு மாமலை மகேந்திரம்’ என்று தொடங்கும் பாடலிலும் பாடியுள்ளார்கள்.
ஆகமங்கள் ஒவ்வொன்றும், சரியை, கிரியை, யோகம், ஞானம், என்று நான்கு பாதங்களாக (பிரிவுகளாக) உள்ளன.
1.சரியாபாதம்: ஆகமங்களில் உள்ள நடைமுறை விதிகள் இதில் கூறப்பட்டுள்ளன. அதாவது திருகோயில் அலகிடுதல், மெழுகுதல், திருநந்தவனம் அமைத்தல், அனுஷ்டானம் போன்ற சரீரத்தால் செய்யப்படும் பணிகளை விளக்குகின்றது.
2.கிரியாபாதம்: தீக்ஷை பற்றியும், ஆலயங்களை நிர்மாணம் செய்வது பற்றியும், இறை பிம்பங்களில் உருவ அமைப்பு பற்றியும், பிரதிஷ்டை,கும்பாபிஷேகம் செய்யும் முறைகள் பற்றியும், உத்ஸவ விழாக்கள் செய்வது பற்றியும் கூறுகிறது. பொதுவாக சிவாகம விதிப்படி பூஜைகள் செய்யும் முறைகளை கூறும் பகுதி கிரியாபாதம் ஆகும்.
3.யோகபாதம்: அஷ்டாங்க யோகங்களைப் பற்றியும் பூதசுத்தி, அந்தர்யாகம் போன்ற யோக நிலைகள் இந்த யோகபாதத்தில் கூறப்பட்டுள்ளன.
4.ஞானபாதம்: பதி,பாசம்,பசு பற்றிய முப்பொருள் உண்மைகளை விளக்கும் பகுதி ஞானபாதம் ஆகும். ஆகம தத்துவங்களை அறியும் பகுதியாகவும் உள்ளது. சிவாகமத்தில் இந்த ஞானபாதமே ’சைவ சித்தாந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சிவாகமங்களே சைவ சித்தாந்த நூலாக விளங்குகின்றது என்பதனை, பதினொறாம் திருமுறையில் திருக்கழுமல மும்மணிக் கோவையில், பட்டிணத்து அடிகள்,” கைவலம் நெல்லியங் கனியது போலச்சைவசித்தாந்தத் தெய்வ ஆகமத்தை வரன்முறை பகர்ந்த திருமலர் வாய “ என்று பாடியுள்ளார்.
சைவசித்தாந்த நூல்களில் ஒன்றான சிவஞான சித்தியாரில், வேதநூல் சைவ நூல் என்று இரண்டே நூல்கள், வேறு உரைக்கும் நூல்கள் இவற்றின் விரிந்த நூல்கள், ஆதிநூல் அநாதி அமலன் திருநூல் இரண்டும், ஆரணநூல் பொது சைவம் அருஞ்சிறப்பு நூலாம் நீதியினால் உலகர்க்கும் சத்திநிபாதர்க்கும் நிகழ்த்தியது நீள் மறையின் ஒழிபொருள் வேதாந்தத்தீது இல் பொருள்கொண்டு உரைக்கும் நூல் சைவம்பிறநூல் திகழ்பூர்வம் ‘சிவாகமங்கள் சித்தாந்தம்’ “ ஆகும் என்று அருள்நந்தி சிவாசாரியார் சிவாகமங்களே சித்தாந்தமாகும் என்பதனைத் தெளிவு செய்து பாடியுள்ளார்.
ஆகமங்களின் சாரமாக திருமூலரால் பாடப் பெற்ற திருமந்திரத்தில் தான் ‘சைவ சித்தாந்தம்’ என்ற சொல் முதன் முதலில் வருகின்றது. "கற்பன கற்றுக் கலைமன்னும் மெய்யோகம் முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே சொற்பதம் மேவித் துரிசற்று மேலான தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே” என்று சைவசித்தாந்தத்தை சிறப்பித்துக் கூறுகிறார் திருமூலர். மேலும், சிவஞான சித்தியார் –பரபக்கம் நூலில், படிக்கும் நூல்கள் சிவாகமம் ; பசுபாசமோடு பதித்திறம் எடுத்து இயம்புவது ஈசன்; வார்கழல் ஏத்திடும் என்று அருள்நந்தி சிவம் பாடியிருக்கின்றார். அதாவது பேரின்பம் எய்த விரும்புபவர் படிக்கும் நூல்கள் சிவாகமங்கள் ஆகும். அவை பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மைகளை எடுத்து கூறும் நூல்களாக விளங்குகின்றன என்று கூறுகிறார். இவ்வாறு நமது சைவ சமய அருளாளர்கள் சிவாகமங்களே சைவ சித்தாந்த தத்துவமாக விளங்குகின்றன என்று தெளிவுபடுத்தி உறுதிபடக் கூறுகின்றனர்.
மேலும், இந்த ஆகமங்களில் வழிநூல்களாக பதினெட்டு சிவாசாரியார்கள் பத்ததி நூல்களை (பத்ததி என்றால் வழி, பாதை அல்லது ஒழுங்கு செய்தல் எனப் பொருள்படும்) அருளிச் செய்தனர். இந்த பத்ததி நூல்கள் ஆகமவிதிப்படி பூஜைகள், கும்பாபிஷேகம், உத்ஸவங்கள் செய்வது பற்றியும், சிவதீஷை, அனுஷ்டானம், சிவபூஜை போன்றவற்றின் முறைகளைப் பற்றியும், ஆலய நடைமுறைகள் பற்றியும், விரிவாகவும், விளக்கமாகவும், விவரித்துக் கூறுகின்றன. இந்த பத்ததி நூல்கள் ஆகமங்களுக்கு அமைந்த விளக்கவுரை போல் உள்ளன. இந்த பத்ததி நூல்களில் , ‘அகோர சிவாசாரியார் பத்ததி’ , ‘சோமசம்பு சிவாசாரியார் பத்ததி’, ‘ஈசான சிவாசாரியார் பத்ததி’ போன்றவை புகழ்பெற்ற பத்ததி நூல்களாக விளங்குகின்றன. இன்று தமிழகத்தில் பெரும்பாலான சிவாலயங்களில் ஆதிசைவ சிவாசாரியார்களால் ‘ஸ்ரீ அகோர சிவாசாரியார் பத்ததி’யே கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாறு சிவபெருமானால் அருளப்பட்ட சிறப்புமிக்க ஆகமங்களை ஆதிசைவர்கள் தங்களது முன்னோர்கள் காட்டிய வழியில் கடைபிடிக்கிறார்கள். சிறுவயது முதலே குருகுல முறையில் கற்று ஆகம விதிப்படி பூஜைகள், விழாக்கள், கும்பாபிஷேகங்கள் ஆகியவற்றை செய்யும் அருள் பெற்றவர்களாகத் திகழ்கின்றார்கள்.
ஆதிசைவ சிவாசாரியார்கள் வேதங்களில் உள்ள கோயில் வழிபாடுகளுக்குரிய மந்திரங்களை மட்டுமே பயின்று ஆகம பிரதானமாக பயில்வார்கள். ஆதிசைவர்கள் ஆகமங்களையே பிரதானமாகவும், பிரமாணமாகவும் கொள்வதால் இவர்கள் ஆகம அந்தணர்கள் என்றும், ஆகம வேதியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சிவபிரானை வழிபடும் சைவர்களுக்கு ஆகமமே பிரமாண நூலாகும். சிவனை வழிபடும் அடியார்களுக்கும், சைவர்களுக்கு ஆகம விதிப்படி சிவதீக்ஷை அளித்து சிவபக்தியை பரவச் செய்யும் முதற்கடமை ஆதிசைவர்களுக்கே உரியதாகும். ஆதிசைவர்கள் சிவாகம விதிப்படி சிவபெருமானை அர்ச்சிப்பவர்கள் என்பதை ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி தனது ‘திருத்தொண்டர் திருஅந்தாதியில்’, ’நெறிவார் சடையரைத் தீண்டி முப்போது நீ டாகமத்தின் அறிவால் வணங்கி அர்ச்சிப்பவர் நம்மையும் ஆண்டமராக் கிறையாய் முக்கண்ணும் எந்தோளிம் தரித்தீறில் செல்வத் தொடும் உறைவார் சிவபெருமாற்குறை வாய உலகினிலே’ என்று பாடியுள்ளார்.
ஸ்ரீ உமாபாதிசிவசாரியார் தமது திருத்தொண்டர் புராண சாரத்தில், ’செப்பலருந் தவமுடைய செம்மை யாளர் சிறுகாலே மலர்வாவி திகழ மூழ்கி ஒப்பில் திருநீறணிந்து நியதி ஆற்றிஓவாமே ஐந்தெழுத்தும் உணர்ந்துரைத்துதப்பில் சிவாகம விதியால் இன்பால் அன்பாந்தன்மையால் தன்மையாந் தகையார் என்றும் முப்பொழுந் திருமேனி தீண்ட வல்ல முறைமையார் பிறவிதொறுந் திறமையாரே’ என்று பாடியுள்ளார். இதுபோலவே ஆகமங்கள் சிவபிரானால் அருளப் பெற்றவை என்பதை, ‘அண்டர் தமக்கு ஆகமநூல்கள் மொழியும் எம் ஆதியை’ என்று ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பாடியருளுகின்றார். அந்த ஆகமவிதிப்படியே அன்னை பார்வதி தேவி பூஜை செய்ய ஆசைப் பட்டாள் என்பதை சேக்கிழார் பெருமான், திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணத்தில், ’இங்கு நாதா நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரியப் பொங்கு கின்றதென் ஆசை என்றிறைஞ்சிப் போக மார்த்தபூண் முலையினாள் போற்றி’ என்று கூறுயுள்ளார்.
மேலும், அம்மையார், சிவபெருமான் அருளிய ஆகமநெறியிலே உறைத்துநின்று பூஜித்த செயலை, ’உம்பர் நாயகர் பூசனைக்கவர்தாம் உரைத்த ஆகமத் துண்மையே தலைநின் எம்பிராட்டியார் அர்ச்சனைபுரிவதனும்’ – என்றும், ஆகம விதியில் குறைவில்லாமல் அம்மையார் சிவபூஜை செய்த செயலை, ’மெய்தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவமெய்ப் பூசை எய்த ஆகம விதியெலாஞ் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம்பிராட்டி என்றும் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் பாடுகின்றார். இவ்வாறு இவ்வுலகத்தில் முதன்முதலில் சிவபூஜை செய்தவள் அன்னை பார்வதி தேவியே.
அன்னை பார்வதிதேவியே ஆகம விதிப்படியே சிவபெருமானை பூஜை செய்த்தாக சேக்கிழார் பெருமான் பாடி அருளியது அனைவரும் சிந்திக்கத்தக்கது. அன்னை பார்வதி தேவி மட்டுமல்ல, 63 நாயன்மார்களில் ஒருவராகிய திருநீலநக்க நாயனார் தினம்தோறும் ஆகம விதிப்படியே சிவபெருமானை பூஜை செய்து வந்தார் என்பதனை, ‘மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை நித்தல் பூசனை புரிந்தெழு நியம்முஞ் செய்தே’, என்றும் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் கூறுயுள்ளார். இவ்வாறு, சிவபெருமானுக்குச் செய்யப்படும் பூஜைகள் மட்டுமல்ல, சிவபெருமானுக்கு அமைக்கப்படும் கோயில்களும் கூட ஆகம விதிப்படியே தான் நிர்மாணிக்கப்பட வேண்டும்.
பூசலார் நாயனார் தனது மனதுக்குள் தான் எழுப்பிய கோயிலையும் ஆகம விதிப்படியே அமைத்தார் என்பதை, சாதனத்தொடு தக்சர் தம்மையும்’ என்கிற பாடலில் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் பாடியுள்ளார். மேலும், சிவபெருமானுக்கு செய்யும் பூஜைகளும் எழுப்பும் கோயிலும், ஆகம விதிப்படி நடப்பதொடு அல்லாமல், திருக்கோயில்களில் நடைபெறும் விழாக்களும், திருக்கோயில்களுக்கு வழங்கப்படும் நிபந்தங்களும் ஆகம விதிப்படியே நடந்திடல் வேண்டும். இதனை மனுநீதிச்சோழன் வரலாறு உணர்த்தும். மனுநீதிச் சோழன் திருவாரூர் திருக்கோயிலிக்கு சிவாகம விதிப்படியே பூஜைக்கு வேண்டிய நிபந்தங்களை அளித்தான் என்பதை, ‘பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர் எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக் அங்கன் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்தான் துங்க ஆகமம் சொன்ன முறைமையால்’ என்று பெரிய புராணம் கூறுகிறது. இவ்வாறு, ஓர் ஆலயம் நிர்மணித்து அமைப்பது முதல் பூஜைகள், விழாக்கள் அனைத்தும் ஆகம விதிப்படியே செய்யப்பட வேண்டும் என்பதை சைவத் திருமுறைகளும் நமது அருளாளர்க்ளின் திருவாக்குகளும் நமக்கு உணர்த்துகின்றன.
திருக்கோயில்களுக்கு நிலத்தைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து (பூகர்ஷணம்) கோயில் அமைத்து தெய்வங்களை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் முதல் மண்டலாபிஷேகம் வரையிலும் அதன்பின் நடைபெறும் விழாக்கள், பிராயச்சித்தங்கள் என அனைத்திற்கும் ஆகமங்களே பிரமாணமாகும். இதனை, கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம்- கோயில் நிலம் தேர்ந்தெடுத்து அமைப்பது முதல் கும்பாபிஷேகம் வரை ப்ரதிஷ்டாதி உத்ஸவாந்தம்- கும்பாபிஷேகம் முதல் உற்சவ விழாக்கள் வரை உத்ஸவாதி ப்ராயச்சித்தாந்தம்- உத்ஸவ விழாக்கள் முதல் பிராயச்சித்த பரிகாரம்வரை என்ற வரிசை முறையில் ஆகமங்கள் விளக்கமாக எடுத்து உரைக்கின்றன. ஆகமவிதிப்படித்தான் ஆலயங்களில் பூஜைகள், விழாக்கள் செய்யப் படவேண்டும். ஆகமம் அறிந்த ஆதிசைவ சிவச்சாரியாரைக் கொண்டு, ஆலயங்களில் கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம், ப்ரதிஷ்டாதி உத்ஸவாந்தம்,உத்ஸவாதி பிராயச்சித்தாந்தம் என்கிற முறையில் பூஜைகள், விழாக்கள் செய்யப்பட வேண்டும் என்பது ஆகம விதியாகும்.
இவ்வாறு, ஆகம விதிகளை முறைப்படி கடைபிடுத்து பூஜித்து வரும் பக்தர்களுக்கு சிவபெருமான் அருள் புரிவான் என்பதை, ’அம்மானே ஆகம சீலர்க்கருள் நல்கும் பெம்மானே’ என்று ஸ்ரீ சுந்தரர் திருவாரூர் தேவாரத்தில் பாடி அருளுகின்றார். அவ்வாறு இல்லாமல், சிவபெருமானால் அருளப்பட்ட ஆகம விதிகளை புறந்தள்ளி இகழ்பவர்களை அரசன் தண்டித்திடல் வேண்டும் என்பதனை திருமூலர் தமது திருமந்திர்த்தில், தத்தம் சமய தகுதிநில் லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி எத்தண்டமும் செயும் அம்மையில் இம்மைக்கே மெய்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே’ – என்று பாடுகின்றார். ஓர் ஆலயத்திற்குரிய நிலத்தை தேர்ந்தெடுப்பது முதல், ஆலயத்தை அமைக்கும் முறை, கும்பாபிஷேகம் செய்யும் முறை, அதற்குண்டான மந்திரங்கள், தத்துவ விளக்கங்கள், கும்பாபிஷேகத்திற்குப் பின் அந்த ஆலயத்தில் செய்யப்படும் உத்ஸவங்கள், விழாக்கள் ஆகியவற்றைச் செய்யும் முறைகள், ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அதனை நீக்கும் பிராயச்சித்த விதிகள், பரிகாரங்கள் என்று ஒரு கோயிலைப் பற்றிய அனைத்துவித தகவல்களும், செய்திகளும் ஆகமங்களில் மட்டுமே உள்ளன.
ஆகமங்கள் சிவபெருமானால் அருளப்பெற்றதும், ‘ஆகமவிதிப்படி பூஜிப்பதே தமக்கு விருப்பமானது’ என்று சிவபெருமானே அருளியதும், அன்னை பார்வதி தேவியே ஆகம விதிப்படி சிவபெருமானை பூஜித்து வரம் பெற்றதும் ஆகமங்களின் முக்கியத்துவத்தையும், சிற்ப்பையும் உணர்த்துகிறது. கடந்த காலங்களில் நமது முன்னோர்களாகிய மன்னர்கள் திருக்கோயில்களை ஆகம விதிப்படியே அமைத்தும், ஆகம விதிப்படியே பூஜித்தும், விழாக்களும் செய்து வந்துள்ளார்கள் என்பதை ஒவ்வொரு திருக்கோயில்களிலும் உள்ள கல்வெட்டுச் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆகமங்கள் தமிழ்பண்பாட்டையே பிரதிபலிக்கின்றன. ஸ்மார்த்த பிராமணர்களை விட சிவாசாரியார்கள் உயர்ந்தவர்கள் என்று ஆகமங்கள் கூறும். ஆகமங்கள் சிவாசாரியார்களின் பெருமைகளை பேசுவதால் வட இந்தியாவில் ஆகமங்கள் புறக்கணிக்கப்பட்டன என்று கூறுவார் உழவாரம் ராஜசேகரன் அவர்கள்.
ஆதிசைவர்களின் தொன்மை
சங்க காலம் முதலே ஆதிசைவர்கள் தமிழகத்தில் தொன்மை குடிமக்களாக வாழ்ந்து வழிபாடுகளைச் செய்து வந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியமான பரிபாடல்,
’விரி நூலந்தணர் விழவு தொடங்கப்
புரிநூலந்தணர் பொலம் கலம் ஏற்ப’
என்ற புறநானூறு பாடல் மூலம் உணர்த்துகிறது.
இங்கு, விரிநூல் என்பது ஆகமத்தையும், விரிநூலந்தணர் என்பது ஆகமத்தை அறிந்த ஆதிசைவர் அந்தணரையும் குறிக்கும்.
இவர்கள், தமிழகத்தில் தொன்மை குடிமக்களாக வாழ்ந்து வந்து சைவ சமயத்திற்கும் தமிழ் பக்தி இலக்கியங்களுக்கும் தொண்டு செய்து வருகிறார்கள்.
கலியுகம் தொடங்கிய காலத்தில் அவதரித்த கண்ணப்ப நாயனார் புராணத்தில் சிவ்வழிபாட்டினை செய்யும் சிவகோசரியார் ஓர் ஆதிசைவர்.
சங்க காலப் பாடல்களில் பெருமைபடப் பேசப்படும் சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான, ஈசனே சங்கப் பலகை ஏறி வாதிட்டு பொற்கிழி பெற்றுத் தந்த சங்க்கால தருமி ஓர் ஆதி சைவ அர்ச்சகர். தருமி ஆதிசைவர் மரபில் வந்தவர் என்பதை திருவிளையாடல் புராணம் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில்,
’அந்த வேலையிலா ஆதிசைவரில்
வந்த மாணவன் மணஞ்செய் வேட்கையால்
முந்தை யாட்சிமுமுயலும் பெற்றியான்
தந்தை தாயிலான் தருமியென்றுளான்’
என்ற பாடலின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
தமிழகத்தின் இருண்ட காலமாக களப்பிரர் ஆட்சியில் கி.பி. 5ம் நூற்றாண்டில், பல துன்பங்களுக்கும், வறுமைக்கும் இடையில் உயிரினும் மேலாக மதித்து சிவபூஜை செய்த 63 நாயன்மார்களில் ஒருவராகிய ஸ்ரீ புகழ்த் துணை நாயனார் ஓர் ஆதிசைவர்.
கி.பி. 7ம் நூற்றாண்டில் அவதரித்து 63 நாயன்மார்களை இந்த உலகறியச்செய்த தேவாரம் பாடிய மூவரில் ஒருவர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள். அவரது தந்தை ஸ்ரீ சடையனார் தாயார் ஸ்ரீ இசைஞானியார் ஆகியோர் ஆதிசைவர்கள்.
கி.பி. 10ம் நூற்றாண்டில் அவதரித்த மாமன்னன் ராஜராஜசோழன் வேண்டுதலுக்கு ஏற்ப தேவாரத் திருமுறைகளை கண்டெடுத்துத் தொகுத்துத் தந்த ’ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள்’ ஓர் ஆதிசைவர்.
கி.பி. 13ம் நூற்றாண்டில் ‘சிவஞானசித்தியார்’ என்ற உயர்வான சைவ சித்தாந்த நூலை பாடி அருளிச் செய்த சைவ சித்தாந்த ஆசிரியர் ’ஸ்ரீ அருள்நந்தி சிவாசாரியார்’ ஓர் ஆதிசைவர்.
கி.பி. 14ம் நூற்றாண்டில் அவதரித்த தமிழில் உள்ள புராணங்களில் அளவில் பெரியதும் சிறப்பும் உடைய கந்த புராணத்தை பாடிய ’ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியார்’ ஓர் ஆதிசைவர்.
மேலும், ஆளுடைய நம்பி என்று குறிக்கப்படும் ஸ்ரீ சுந்தரரின் தாயார் இசைஞானியார் குறித்து இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய (கி.பி. 1113-1150) திருவாரூர் கோயில் கல்வெட்டில் குறிப்பு உள்ளது.
அப்பகுதியில்,
’ஆளுடைய நம்பி மாதாக்கள் இசைஞானியார்
ஜனனி பவதோ ஞான சிவாச்சார்ய குலே பவத்
சைவே கெளதம கோத்ரேஸ்மின் ஞான்யாரவ்யா
கமலாபுரீ’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆதிசைவ மரபைச் சார்ந்தவர்கள் சங்க காலம் முதல் தொன்மை குடிமக்களாக காலந்தோறும் தமிழகத்தில் வாழ்ந்து வந்து சிவப்பணியும், சைவத் தொண்டும் செய்து வந்துள்ளார்கள் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஆதிசைவர்கள் இனத்தால் தமிழர்களே!
ஆதிசைவர்கள் சங்க காலம் முதலே தமிழ் நிலத்தில் வாழ்த்து வரும் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களாவார்கள். ஆதிசைவர்கள் பழத்தமிழர்கள். தொல்குடி அந்தணர்கள்.தமிழ்நாட்டுக் கோயில்களில் பூஜை செய்யும் மரபுக்குரியவர்கள். "கா.சு. பிள்ளை, அவர்கள் தமது ’சேக்கிழார் சுவாமிகள் வரலாறு’ என்ற நூலில், “கோயிலில் பூஜை புரியும் ஆதிசைவர்கள் பண்டைத் தமிழ்ப் பார்ப்பனராவார். நம்பி என்ற தமிழ்பெயரும் அவர்கள்க் குறித்து வழங்குகின்றது” என்று கூறுயுள்ளார். அவரே தாம் எழுதுய ’தமிழர் சமயம்’ என்ற நூலில், ‘இப்போது ஆலயங்களின் குருக்களாக உள்ள ஆதிசைவ மரபினர் தமிழ்ப் பார்ப்பனரே ஆவார். அவர்கள் சிவன் முகத்து அருள்பெற்ற அந்தணர் எனவும், ஸ்மார்த்தப் பிராம்மணர் அயன் முகத்துதித்த பிராமணர் எனவும் கருதப்படுவதுடன், பின்னையோர் கோயிற் பூசனைக்கு உரியரல்லர் என்று ஆகமம் விதிக்கிறது.
ஆதிசைவர் தமிழ்நாட்டிலே பொதியின் மலைக்குத் தெற்கிலுள்ள பெருஞ் செல்வமென்னும் மகேந்திர மலையில் தவமியற்றித் திருவருள் பெற்ற ஐந்து தமிழ் முனிவர்களின் சந்ததியர் ஆவார். அவர்கள் தற்காலத்தில் தம்மை இன்னார் என்று அறியாது சுமார்த்த மதநெறியை தழுவி நடக்க முயலுகின்றார்கள் என்று கூறுகிறார். மேலும், ஆதிசைவர்களை தமிழ் குருக்கள், சைவ குருக்கள்மார் என்றும் கா.சு.பிள்ளை குறிப்பிடுகின்றார்.
மறைமலையடிகளாரும் தனது ’தமிழர் மதம்’ எனும் நூலில், ஆதிசைவர்களை தமிழ் பார்ப்பனர் என்றும் தமிழ்குருக்கள்மார் என்றும் குறிப்பிடுகின்றனர். சமயங்களின் அரசியல்’ என்ற நூலில் முனைவர். தொ. பரமசிவம் அவர்கள், சிவப்பிராமணர்கள் தமிழ்நாட்டில் உருவாகிய ஒரு கூட்டத்தராக இருக்க வேண்டும். வடமொழியிலும் தமிழிலும் அர்ச்சனை செய்யத் தெரியும். அடியவர்களுக்குத் திருநீறு வழங்கும் உரிமையும் கடமையும் இவர்களுக்கு மட்டுமே உண்டு. இவர்கள் எண்ணிக்கையில் சிறிய கூட்டத்தவராவர். இவர்களுக்குக் ’காணியாளர்’ என்ற பெயரும் உண்டு. காணியாளர் என்றால் மரபுரிமை உடையவர் (மண்ணின் மைந்தர்) என்பதே பொருளாகும். பின்நாளில் வடநாட்டிலிருந்து இடம் பெயர்ந்து வந்து வேதப் பார்ப்பனர் பெருந்தொகையினர் ஆவர். எனவே, இந்த கடைசி இடப்பெயர்வுக்கு ’பிருகத்சரணம்’ என்றே பெயர். எனவேதான் சிவன் கோயிலை அடுத்த அக்ரஹாரங்களில் சிவப்பிராம்மணர் வீடுகள் ஒன்று, இரண்டு என்பதாக இருக்க, வேதப்பார்ப்பனர்கள் வீடு நாற்பது, ஐம்பது என்பதாக இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
திருப்பனாந்தாள் ஸ்ரீ காசிமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ எஜமான் சுவாமிகள் தனது ‘ மெய்யும் பொய்யும்’ என்கிற நூலில், ‘சிவாசார்யார்கள் ஆரியர் அல்லர் என்றும், திராவிடர்களில் ஆதியானவர்கள் இந்த நிலத்திற்கே சொந்தமான பூர்வீக் குடிமக்கள் என்றும், சைவர்களில் ஆதியானவர்கள் ஆதிசைவர்கள் ஆக ஆதி என்ற அடைமொழி பூர்வீகமானவர்கள் என்ற பொருள் தருவதை உணரலாம். எனவே, ஆதிசைவர்கள் தமிழகத்தின் பூர்வீக்க் குடிகள்’ என்கிறார். மேலும், ஆதியிலிருந்தே இந்நிலத்தில் இருந்தவர்களை ‘ஆதிதிராவிடர்கள்’ என்கிறோம். திராவிடர்கள் என்ற சொல் விந்திய மலைக்குத் தெற்கே உள்ள்வர்களைக் குறிக்கும். சைவர்கள் என்ற சமயப் பெயர் ஒட்டுவதால் சிவாசாரியார்களை ஆதிசைவர்கள் என்கிறோம். நிலப்பெயரும், சமயப்பெயரும் ஒன்றாக ஒட்டாது என்பது யாவரும் அறிந்த்தே. ஒட்டுத்தான் ஆகவேண்டுமென்றால், இவர்களை ‘ஆதிசைவத்திராவிடர்கள்’ என்பதே பொருந்திவரும். எனவே, சமயரீதியாகப் பார்க்கும்போது சிவாசாரியார்கள் சைவர்கள், மொழிவழியாகப் பகுக்கும்போது தமிழர்கள்’ என்கிறார்.
பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி வரை பிராமணர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஆதிசைவ சிவாசாரியார்கள் தமிழகத்தில் மட்டுமே வாழ்ந்து வருபவர்கள். தமிழகம்மட்டுமே சிவாசாரியார்களின் பூர்வீகமாக உள்ளது. தமிழகத்தைத் தாண்டி வட இந்தியாவில் சிவாசாரியார்கள் என்ற பிரிவினர் கிடையாது. ஆதிசைவ சிவாசாரியார்களும் அவர்கள் பிரமாணமாகக் கொண்ட ஆகம நூல்களும் தமிழகத்தில் மட்டுமே வழக்கில் உள்ளவை. இதன் மூலமே சிவாசாரியார்கள் தமிழகத்தின் பூர்வீகக் குடிகள், தமிழர்களே என்பதை அறந்து கொள்ள வேண்டும். மேலும், ஆதிசைவர்களாகிய சிவாசாரியார்கள் தமிழகத்தில் மட்டும் வாழ்ந்து வருவது போல், தமிழர்கள் பூர்வீக்க் குடிகளாக வாழும் மற்றொரு நாடாகிய இலங்கை ஈழத்திலும், சிவாசாரியார்கள் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வருவது சிந்திக்கத்தக்கது. ஈழ தேசத்தில் உள்ள சிவாலயங்களில் அகமபடித்தொண்டு என்ற சிவாலய பூஜைகளைச் செய்துகொண்டு சைவ சமயம் வரைவும், சிவபத்தி பெருகவும் பல சிவாசாரியார்கள் ஈழத்தில் தொண்டு செய்துவருகிறார்கள். தமிழர்கள் தொன்மையாக வாழும் இடங்களே, சிவாசாரியார்களின் பூர்வீக இடமாக இருப்பதில் இருந்தே ஆதிசைவ சிவாசாரியார்கள் தமிழர்களே என்பதை தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் ஆதிசைவர்கள் தமிழ்நாட்டின் பூர்வகுடிகள், மண்ணின் மைந்தர்கள் என்பதை உணர முடியும்.
ஆலய பூஜைகள் ஆதிசைவர்களுக்கே உரிமையானது
சிவாகமங்களில் இரண்டுவித பூஜைகள் கூறப்பட்டுள்ளன.
கிராமத்திலோ, நகரத்திலோ, வனங்களிலோ, மலைகளிலோ, நதிதீரம் (அ) சமுத்திர தீரங்களிலோ உள்ள ஆலயத்தில் இருக்கும் தெய்வ மூர்த்திகளை ஆகமவிதிப்படி மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலத்தில் தோன்றிய ஆதிசைவ சிவாசாரியார்களைக் கொண்டு பூஜிப்பது பரார்த்த பூஜையாகும்.
பரார்த்த பூஜை முன்று வகைப்படும்
இதில் பரார்த்த பூஜை என்று அழைக்கப்படும். கோயில்களில் செய்யப்படும் ஆலய பூஜையை வழிவழியாகச் செய்யும் உரிமை ஆதிசைவர்களுக்கே உள்ளது. இதனை, சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்தில்,
’தெரிந்துணரின் முப்போதுஞ் செல்காலம் நிகழ்காலம்
வருங்கால மானவற்றின் வழிவழியே திருதொண்டில்
விரும்பிய அர்ச்சனைகள் சிவ்வேதியர்க்கே உரியன
அப்பெருந்தகையார் குலபெருமையாம் புகழும்
பெற்றியதோ’
என்று பாடிகிறார்.
அதாவது சிவாலய பூஜைகள் ஆதிசைவ சிவாசார்யார்களுக்கே உரிமையுடையது என்பதை ‘அர்ச்சனைகள் சிவ்வேதியர்க்கே உரியன’ என்று ஏகாரம் இட்டு சேக்கிழார் வலியுறுத்துகிறார். மேலும், செல்காலம், நிகழ்காலம், வருங்காலம் என்று பிரித்துக் கூறி எக்காலத்திலும் வாழையடி வாழையாக ஆதிசைவ சிவாசாரியார்களுக்கே பூஜைகள் செய்யும் உரிமை உண்டு எனவும் உறுதிபடக் கூறுக்கிறார்.
மேலும், ‘சைவ சமய நெறி’ என்னும் நூலில் ஸ்ரீ மறைஞானசம்பந்தர்,
’சிவன் முகத்திலே மேலும், ‘சைவ சமய நெறி’ என்னும் நூலில் ஸ்ரீ மறைஞானசம்பந்தர்,
’சிவன் முகத்திலே யுதித்த விப்ரசைவர்
இவரே யருச்சனைக் கென்றென்’ (பாடல் – 435)
என்று பாடியுள்ளார். அதாவது சிவன் முகத்தில் தோன்றிய விப்ர சைவர்களுக்கே (ஆதிசைவர்களே) அர்ச்சனை செய்யும் உரிமை உண்டு என்கிறார். மேலும், ஸ்ரீ மறைஞானசம்பந்தர் அதே நூலில்,
’அயன் முகத்தில் தோன்றிய அந்தணர் அர்ச்சித்துப்
பயனடைதற் இட்டலிங்கம் பாங்கு’ – என்று பாடுகிறார்.
அதாவது பிரம்மனின் முகத்தில் தொன்றிய பிராமணர்கள் மற்றும் அடியார்கள் உள்ளிட்ட மற்றவர்கள் ஆத்மார்த்த பூஜை செய்யவே உரிமை உண்டு. இவர்களுக்கு கோயில்களில் பூஜை செய்யவோ, கும்பாபிஷேகம், உத்ஸவங்கள் போன்ற விசேஷங்கள் செய்யவோ உரிமை இல்லை என்று பாடியுள்ளார்.
இதன்மூலம், சிவன் முகத்தில் தோன்றிய ஆதிசைவர்களே ஆலய பூஜைகள், கும்பாபிஷேகம் முதலியன செய்ய உரிமையுடையவர் என்பதை மறைஞானசம்பந்தர் உறுதியாகக் கூறுவதை காணலாம்.
இவ்வாறு, ஆதிசைவ சிவாசாரியாரைக் கொண்டு சிவபூஜை, கும்பாபிஷேகம், உத்ஸவங்கள் செய்யாமல் பிராமணர்கள் உள்ளிட்ட மற்றவர்களைக்கொண்டு செய்தால் ஏற்படும் பாதிப்புகளை திருமூலர் தாம் அருளிய திருமந்திரத்தில்,
’பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே’ என்று பாடியுள்ளார்.
அதாவது, சிவபெருமானால் அருள்ப்பட்ட சிவாகம மந்திரங்களை அறிந்த ஆதிசைவ சிவாசாரியாரை தவிர்த்து, மற்றவர்களைக் கொண்டு சிவாலய பூஜைகள், கும்பாபிஷேக கிரியைகள் செய்தால், நாட்டின் அரசன் வலிமை இழப்பான். நாட்டில் மழை வற்றும். பஞ்சம் ஏற்படும் என்று எங்கள் அருளாசிரியர் நந்தியம் பெருமான் உரைத்ததாக நாயன்மாரும், முழு முதற் சித்தருமாகிய திருமூலர் கூறிகிறார்.
எனவே சிவாகமம் அறிந்த ஆதிசைவ சிவாசாரியார் செய்யும் பூஜையே நலத்தையும், வளத்தையும் கொடுக்கும் என்பது இதன் உட்பொருளாகும். ஆகமங்களும் மேற்கண்ட கருத்துக்களையே வலியுறுத்துகின்றன.
மகுடாகமத்தில்,
’விப்ரக்ஷதரிய விட்சுத்ர: திக்ஷீதாஞ்ச ப்ரவேசகா:
ஆத்மார்த்தயஜனம் குர்யு: ந குர்யஸ்து ப்ரார்த்தகம்’ – என்று கூறுப்பட்டுள்ளது.
அதாவது பிராமணர், அரசர், வணிகம், வேளாளர்கள் ஆகியோர் சிவதீக்ஷை பெற்று ஆத்மார்த்த பூஜை செய்யவே அதிகாரம் உண்டு. திருக்கோயில்களில் பூஜை, கும்பாபிஷேகம், உத்ஸவ விழாக்கள் செய்ய அதிகாரம் இல்லை என்று ஆகமம் கூறுகிறது. இதன்முலம் பிராம்மணரும், தீக்ஷை பெற்ற அடியார்களும் கோயில்களில் பூஜை, கும்பாபிஷேகம் செய்யக் கூடாது என்பது ஆகம முடிவாகும்.
திருவிளையாடல் புராணம், இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலத்தில், சோமவாரவிரத மகிமை கூறுப்பட்டுள்ளது. அதில், ”சிவபெருமானை தீண்டி பூஜிக்கும் அருகரல்லாத வேத அந்தணர் மற்றும் தீக்ஷை பெற்ற சைவர்கள் இட்டலிங்கம் எனும் ஆன்மார்த்த லிங்கத்தை பூஜை செய்து சோமவாரவிரதம் செய்க என்றும், ஆன்மார்த்த பூஜைக்கு உரிமையில்லாதவர் சிவபிராமணராகிய ஆதிசைவரைக் கொண்டு பூஜை செய்வித்து இவ்விரதம் கொள்க” என்றும் கூறப்பட்டுள்ளது.
’ஆதியில் விலிங்கந் தீண்டற் கருகரல்லாத வேத
வேதியர் முதலோ ரிட்ட விலிங்த்தில் விதியாலர்ச்சித்
தோதிய விரத நோற்க வர்ச்சனைக்குரிய ரல்லாச்
சாதியர் பொருணேர்ந்து ஆதிசைவராற் பூசை செய்தல்’
இதிலிருந்து வேத பிராமணர், மற்றும் தீக்ஷை பெற்ற சைவர்கள் யாவரும் ஆன்மார்த்த பூஜை செய்யலாமேயொழிய திருக்கோயிலில் லிங்கத்தைத் தீண்டி பூஜை செய்தல் கூடாது என்பது அர்த்தமாகிறது. ஆதிசைவ சிவாசாரியார்கள் பிராமணர் உள்ளிட்ட நான்கு பிரிவினர்களில் ஒருவரா என்றால் இல்லை என்பதாகும். ஏனெனில் ஸ்மார்த்த வழிவந்த வைதீக பிராமணர்கள் வேறு, ஆகம வழிவந்த ஆதிசைவ சிவசாரியார்கள் என்பவர்கள் வேறு.
வேத பிராமணர் பிராம்மனின் முகத்தில் தோன்றியவர்கள். ஆதிசைவ சிவாசாரியார்கள் சிவசிருஷ்டியாளர்கள். அதாவது, சிவபெருமானின் திருமுகத்திலிருந்து உதித்தவர்கள். எனவேதான், சிவபெருமானின் திருமுகத்தில் தோன்றிய ஆதிசைவ சிவசாரியார்களே திருக்கோயிலில் பூஜைகள், கும்பாபிஷேகம் ஆகியவை செய்ய வேண்டும் என்பது ஆகம விதியாகும்.
மேலும், பொருளாசை காரணமாகவோ, அல்லது துவெஷம் காரணமாகவோ, பிராமணர், அடியார் உள்ளிட்ட மற்றவர்கள் கோயில்களில் சிவத்தை தீண்டுவதாலும், பூசிப்பதாலும் அதைச் செய்வோர், செய்விப்போர் இருவருக்கும் தேவலோகத்துவ தோஷம் பிடிக்கும். மீறி செய்வாராயின் அவ்விடத்து அரசருக்கும் பொது மக்களுக்கும் கெடுதி உண்டாகும். அதுவும் ஆகம விதியை மீறினவன் அவன்மட்டுமன்றி அவனுடைய இருபத்தோரு வம்சமும் வம்சாவளியும் தீராத கோர நரகத்துக்கு உள்ளாவார்கள் என்று ஆகமம் சொல்கிறது.
மேலும், ”ரெளரவாகமம்” ,
’ஆதிசைவனே கர்த்தாவ்யம் ஆத்மார்த்த ச பரார்த்தகம்’
என்றுரைக்கிறது.
அதாவது, ஆதிசைவனே தன் அளவில் ஆத்மார்த்த பூஜையும், திருக்கோயில்களில் பரார்த்த பூஜையும் செய்ய வேண்டியவர், உரிமை உடையவர் என்று ஆகமம் கூறுகின்றது.
மேலும், ”காமிகாமம்” ,
’ஆதிசைவ குலெஜாத: ஸ்ரேஷ்டஸ்யாது ஸ்தாப நாதிஷு’
என்கிறது.
அதாவது, ஆதிசைவ சிவாசாரியார்களே பிரதிஷ்டை கும்பாபிஷேக கிரியைகள் செய்ய வேண்டும் என்று உறுதிபட காமிகாமம் கூறுகின்றது.
மேலும், ”சுப்ரபேத ஆகம’த்தில்,
’திக்ஷிதானாம் த்விஜாதீனாம் ஆத்மார்த்த மனு லோமினாம்
பரார்த்தம் ஆதிசைவானாம் ஆத்மார்த்த ஸஹிதம் பவேத்’
அதாவது, சிவதீஷை பெற்ற பிராமணர், அடியார் உள்ளிட்ட அனைவரும் ஆத்மார்த்த பூஜை மட்டுமே செய்யலாம். ஆதிசைவர்களே ஆத்மார்த்த பூஜை, பரார்த்த பூஜை என இரண்டும் செய்ய உரிமை உடையவர்கள் என்று அர்த்தமாகும்.
திருநாகைக்காரோணம் புராணத்தில், திருவாவடுதுறை ஆதினம் மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், ‘ பெருமறை உடன் ஆகமம் முழுதுணர்ந்தார் ‘ என்னும் பாடலில், ஆதிசைவர்கள் சிவபெருமான் திருமுகத்தில் அவதரித்தவர்கள் என்றும், ஆன்மார்த்தம், பரார்த்தம் என்ற இருபூஜைகளும் செய்யும் பூரண உரிமை உடையவர்கள் என்றும் பாடியுள்ளார்.
இதே கருத்தையே காளையார் கோயிற் புராணம்,
”பொதுமையுஞ்சிறப்புமென்னப் புராதனன் புகன்றவாய்மை
முதுமறையாக மங்கண் முழுதுமோர்ந்தென்றும் பூசை
பதியுமான்மார்த்தத்தொடு பரார்த்தத்தும்புரி இத்தலைக்கோர்
மதிபெறும் ஆதிசைவர் “ –என்றும்,
திருப்பெருந்துறைப் புராணம்,
’மறையுடனாகம்முணர்ந்த மாட்சியர்
பொறையொடான் மார்த்த பரார்த்த போற்றுவார்
அறைபெறும் புகழ்மிகும் ஆதிசைவர்’ - என்றும்,
கண்ட்தேவிப் புராணத்தில், ‘எண்ணில்வேதாக மங்களைய’ என்னும் பாடலும், திருக்குடந்தைப் புராணம், ‘வெள்ளியங்கயிலை விமலனார் மொழிந்த’ என்ற பாடலும் வலியுறுத்துகின்றன.
ஆதிசைவர்களாகிய சிவாசாரியார்கள் ஆன்மார்த்தம், பரார்த்தம் என்ற இரு விதத்திலும் சிவபெருமானை பூஜிக்கும் உரிமை பெற்றவர்கள் என்று மேற்கண்ட அத்தனை தலப்புராண பாடல்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன.
திருக்கோயில்களில் சிவலிங்கத் திருமேனியைத் தீண்டி பூஜித்து வழிபடும் உரிமை ஆதிசைவருக்கே உரியது. இதனை ஸ்ரீ சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகை தேவாரத்தில், ’முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்க்கும் அடியேன்’ என்று பாடியுள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்தில்,
”எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே
அப்போதைக் கப்போதும் ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதற் சைவராம் முனிவர்”
என்கிறார்.
மேற்படி பாடலில் சேக்கிழார் பெருமான் ஆதிசைவரை முதற்சைவர் என்று குறிப்பிடுவது முக்கியத்துவம் பெறுகிறது.
அகத்தடிமைப் பணி (அ) அகம்படித்திருத்தொண்டு
அகத்தடிமைப் பணி (அ) அகம்படித் திருத்தொண்டு என்பது கருவறையில் சிவபெருமானைத் தீண்டி பூஜிக்கும் செயலைக் குறிப்பதாகும். ஆதிசைவருக்கே லிங்க திருமேனியை தீண்டி பூஜிக்கும் உரிமையை சைவசமயம் அளித்துள்ளது.
ஆதிசைவராகிய புகழ்த்துணை நாயனாரை பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான்,
”செருவிலிபுத் தூர்மன்னுஞ் சிவமறையோர் திருக்குலத்தோர்
அருவரைவில் லாளி தனக்கு அகத்தடிமை யாம்தனக்கு
ஒருவர்தமை நிகரில்லார் உலகத்துப் பரந்தோங்கிப்
பொருவாரிய புகழ்நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார்”.
என்ற பாடியுள்ளார்.
திருத்தொண்டர் புராணம் சாரத்தில் உமாபதி சிவாசாரியார்,
”புண்ணியர்கள் புகழ் அழகார் திருப்பத்தூர்வாழ்
புகழ்ந்துணையார் அகத்தடிமை புனிதர்” என்று பாடியுள்ளார்.
ஸ்ரீசுந்தரர் தமது தேவாரத்தில் புகழ்துணை நாயனாரை பற்றிப் பாடும் பொழுது,
’அகத்தடிமை செய்யும் அந்தணர் தான் அரி
சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்,
மிகத்தளர் வெய்திக் குட்த்தையும் நும்முடி
மேல்விழுந் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்கு நித்தற் படியும்
வரும்என் றொருகாசினை நின்ற நன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்து கந்தீர்
பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனிரே’ -என்று பாடியுள்ளார்.
இவ்வாறு, தேவார திருமுறைகளில் ஆதிசைவராகிய புகழ்துணை நாயனாரைப் பற்றி பாடியருளும் பொழுது மட்டுமே அகத்தடிமை பணியை, அகத்தடிமை திருத்தொண்டு பற்றி பாடப்பட்டிருப்பதன் மூலம் ஆதிசைவர்களுக்கே கருவரை சென்று பூஜைகள், கும்பாபிஷேகம், உற்சவங்கள் செய்யும் உரிமை உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
சிவாகமம் அறிந்த ஆதிசைவ சிவாசாரியாரைக் கொண்டு செய்யும் பூஜைகள், கும்பாபிஷேகங்கள் மூலமே, அதைச் செய்தோர், செய்வித்தோர் இருவரும் சுப பலனையும், சிவ புண்ணியத்தையும் முழுமையாக அடைய முடியும். உலகத்திற்கு நன்மை உண்டாக்கும். நீர்வளம், நிலவளம் முதலியன செழுமையுடன் விளங்கும், காரண ஆகமமும்,
‘ஆதிசைவஸ்ய பூஜாம் ஸர்வஸித்திகரம் ஸ்மருதம்’ என்று கூறுகின்றது
அதாவது, ஆதிசைவர்கள் செய்யும் பூஜைகள் உலகத்துக்கு நலத்தையும், வளத்தையும், கீர்த்தியையும், பயனையும் தருவதாகும் என்பது இதன் உட்பொருளாகும்.
திருவாவடுதுறை ஆதினம் மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் தாம் பாடிய ’சிவாலய தரிசன விதி’யில், ஆதிசைவர்களைக் கொண்டே ஆலய்த்தில் வழிபாடு செய்யவேண்டும் என்பதை,
’இருகரங் குவித்துட் புக்காங் கிலங்க நின்றாடு மையர்
பொருவில் குஞ்சிதத்தாள் போற்றிப் புண்ணியச் சிவபிரான்முன்
மருவியங் காதிசைவன் மலர்க்கையி ன்னைத்து நல்கி
யொருவற வனையான் செய்யும் உபசாரம் அனைத்து நோக்கி’
என்று பாடியுள்ளார்.
சைவ சித்தாந்த தத்துவத்தில் ஒரு பொருளை நிரூபணம் செய்ய மூன்று நிலைகளைக் கொண்டு ஆராயப்படும். அவை,
இந்த மூன்று நிலைகளில், ஆஅதிசைவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பரார்த்த பூஜைக்கு அருகரல்லர் என விதித்த நூல் வழக்காலும்,
வழிபடும் ஏனையோரைக் காட்டிலும் மூர்த்தியைத் தீண்டி வழிபாடு செய்வார் உயர்ந்தவராதல் வேண்டுமெனக் கருதலளவையாலும்,
தாம் கொடுக்கும் திருநீற்றை யாவரும் இருகரங்களையும் நீட்டி ஏற்கக் காணும் காட்சி அளவையாலும்,
ஆதிசைவ சிவாசாரியார்களுக்கே பரார்த்த பூஜை, கும்பாபிஷேகம் போன்ற கிரியைகள் செய்ய பூரண உரிமை உள்ளது என்பது தெரியவரும்.
சிவபெருமான் விரும்புவது ஆகம பூஜைகளையே. எனவேதான் சிவபெருமான் தனது திருமுகங்களில் இருந்து ஆகமங்களை உபதேகம் செய்து, அந்த ஆகம விதிப்படி பூஜைகளைச் செய்ய, தனது திருமுகத்திலிருந்தே ஆதிசைவர்களைத் தோற்றுவித்து தம் திருமேனியைத் தீண்டும் அதிகாரத்தை சிவவேதியர்களாகிய ஆதிசைவ குலத்திற்கே தந்துள்ளார்.
எனவே, ஆதிசைவ சிவாசாரியார்களைக் கொண்டே ஆகம விதிப்படி ஆலங்களில் பூஜைகள், விழாக்கள், கும்பாபிஷேகங்கள் போன்றவை செய்யப்படவேண்டும். இதை எல்லாம் உணர்ந்தே பண்டைய அரசர்கள், முப்போதும் திருமேனி தீண்டுவாராகிய ஆதிசைவ சிவாசாரியார்களுக்கு பரார்த்த பூஜையை பரம்பரை பாத்தியங் கொடுத்துப் பாராட்டினார்கள்.