தருமபுரம் சிவஸ்ரீ சு. சுவாமிநாத சிவாச்சாரியார்
திருநாவுக்கரசு சுவாமிகள் "வானவன்காண் வானவன்.மேலான்காண்......... வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்" என்று சிவபுரத்து பெருமானை பாடியுள்ளார். அந்த சிவபுரத்தில் 1908ல் கீலக வருஷம், சித்திரை மாதம், கிருத்திகை நக்ஷத்திரத்தில், ஸ்ரீ சுப்பிரமணிய சிவாச்சாரியார் அனந்த லக்ஷ்மி தம்பதிகளுக்கு தவப்புதல்வனாக ஸ்ரீ சுவாமிநாத சிவாச்சாரியார் பிறந்தார். ஆரம்பக் கல்வியை சிவபுரம் பள்ளியிலே படித்து வந்தார் ஒன்பது வயதில் உபநயனம் ஆனவுடன், பருத்தியூர் சிவஸ்ரீ சுப்பிரமணிய சிவாச்சாரியாரிடம் குருகுல வாசமாயிருந்து வேத ஆகம சாஸ்திர பாடங்களைக் கற்று, குடந்தை அக்னி ஹோத்ரம் பட்டுசுவாமியின் அவரது ஸகோதரர் கோபாலதீக்ஷிதர் அவர்களிடம் ந்யாய, மீமாம்ஸ சாஸ்திரம் பயின்றார். மன்னார்குடி யக்ஞசாமி தீக்ஷிதரிடமும், ஜகதீச சாஸ்திரிகளிடமும் ஸ்ரீ கண்டபாஷ்யம் பயின்றார். பழனி காசிவாசி ஈசான சிவாச்சாரியாரிடம் சைவ சித்தாந்தம் கற்றார். பிறகு சிற்பசாஸ்திரம், விக்ரஹலக்ஷணம், ஆலயலக்ஷணம் முதலிய சாஸ்திரங்களில் தேர்ச்சிப் பெற்று பல ஆலய கும்பாபிஷேகளுக்கு சர்வசாதகம் வகிக்கும் திறமைப் பெற்றார். தம் தந்தையாரிடம் மந்திர, சாஸ்திரங்கள் முறைகளை யறிந்து மந்திர யந்திரங்களுடைய நுட்பங்களையறிந்து கொண்டார். இவருடைய திறமைகளையறிந்த தருமையாதீனம் 24வது குருமஹாஸந்நிதானம் அழைத்து, தமது ஆதீனத்தில் ஒரு வேத சிவாகம பாடசாலை அமைத்து, அதற்கு இவரை தலைமையாசிரியராக அமர்த்தியுள்ளார். ஆதீனத்திற்கு சொந்தமான 27 தேவஸ்தானங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கிடவும், திருப்பணி செய்து கும்பாபிஷேகம் முறையாக செய்து வரும் பொறுப்பினை தந்திடவே, இவர் கற்ற கல்விக்கு மெருகிட்டது போல இவர் திறமை எங்கும் பரவவே பாடசாலையில் மிகுந்த அளவு மாணவர்கள் வந்து கல்வி கற்றதுடன் மிக திறமைசாலியாக விளங்கிவந்தார்கள். 25வது குருமகா ஸந்நிதானம் அவர்கள் ஆதரவினைக் கொண்டு ஆகமத்திற்கு விரோதமில்லாமல் பஞ்சமுகார்ச்சனை, ஷண்முகார்ச்சனை, அஷ்டமூர்த்தியர்ச்சனை, நவசக்தியர்ச்சனை, ஷோடசார்ச்சனை, ஏகதின லக்ஷார்ச்சனை, கோடியர்ச்சனை, நவகோடியர்ச்சனை, என பல செய்ததுடன் யாகசாலை ஆகமசாஸ்திர முறைப்படியும் அதேநேரத்தில் புதுமையாக அமைத்து பார்ப்பவர்கள் வியப்படையும் வண்ணம் அமைத்து, ஆதிசைவ சிவாச்சாரியார்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். இவரது யாகசாலை அமைத்திருக்கும் முறைகளைக் கண்டு 25வது குருமஹா சன்னிதானம் அவர்கள் ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் முன் நடந்த கும்பாபிஷேகத்தின் போது "சிவாகம வித்வான்" என்ற விருதினையும் பொன்னாடையும் அணிவித்து பெருமை படுத்தியும், திருக்கடையூர் கும்பாபிஷேகத்தில் ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் 2 வது கும்பாபிஷேகத்தில் "சிவாகம ரத்னாகரம்" என்ற விருதினை பொற்பதக்கத்தில் பொறித்து தந்து பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார். 1969ல் அர்ச்சகர் சங்கம் சார்பில் வள்ளலார் கோயில் ஸ்ரீ சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் "சிவாகம செம்மல்" என்ற விருதினை பொற்பதக்கத்துடன் பெற்று ஆசிப்பெற்றார்கள்.
உலக நலனை வேண்டி, விரைவாகவும், சுலபமாக வும், மிகுதியாகவும் பலனளிக்ககூடிய மஹாசண்டியாகத்தை, தருமபுரம் ஸ்ரீ அஷ்டதசபுஜ துர்கா பரமேஸ்வரி ஆலயத்தின் முன்பு துவங்கி தாமே ஆச்சார்யனாக இருந்து நடத்தி ஒவ்வொரு நவராத்திரியையும் சிறப்பாக நடத்தி வந்தார். பழனி ஸ்ரீ தண்டபாணி ஆலய மஹாகும்பாபிஷேகத்தில் உத்தமோத்தமபடி 33 குண்டம் அமைத்து சிறப்பாக நடத்தினார். 1976ல் இலங்கையில் பாடல் பெற்ற
திருக்கேதீசுவரர் கும்பாபிஷேகத்தில் சர்வ சாதகமாகவும், 1986ல் மலேசியா நாட்டில் ஜோகூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தால் சர்வசாதகமாகவும் இருந்து நடத்தினார்.
ஐம்பது ஆண்டுகள் தருமையாதீனம் ஆகம பாடசாலையின் முதல்வராக இருந்தருளி பலநூறு சிவாச்சாரிய மாணாக்கர்களை சிவாகம வித்வான்களாக உருவாக்கி அருளிய நம் சிவபுரத்து குருநாதர் தமது ஐம்பது ஆண்டுகால ஆசிரிய வாழ்க்கையில் நித்ய பூஜாலஷண சங்கிரஹம், வாமதேவ பத்ததி போன்ற நூல்களை எழுதி வெளியிட்டும், சிவாகம ஸாரஹாரம், ஸஹஸ்ராகமம் போன்றவற்றை தருமையாதீன மாதஇதழாகிய ஞானசம்பந்தத்தில் தொடர் கட்டுரைகளாகவும் எழுதியருளியுள்ளார்கள்.
இவர்கள் போதித்த பாடங்களில் கும்பாபிஷேகக் கிரியைகளின் பாடம் அறிஞர் பெருமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. பலரது ஆராய்ச்சிகளுக்கும் முன்னோடியாக அமைந்தது. இப்பூவுலகில் ஆகமங்கள் போதிக்கும் நிலையுள்ள வரையும், சூரிய சந்திரர்கள் உள்ளவரையும் குருநாதரின் கருணையை நன்றியுடன் நினைவு கூற நமது சமுதாயம் கடமைப்பட்டுள்ளது.