ஆதிசைவர்களின் தொன்மை
சங்க காலம் முதலே ஆதிசைவர்கள் தமிழகத்தில் தொன்மை குடிமக்களாக வாழ்ந்து வழிபாடுகளைச் செய்து வந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியமான பரிபாடல்,
’விரி நூலந்தணர் விழவு தொடங்கப்
புரிநூலந்தணர் பொலம் கலம் ஏற்ப’
என்ற புறநானூறு பாடல் மூலம் உணர்த்துகிறது.
இங்கு, விரிநூல் என்பது ஆகமத்தையும், விரிநூலந்தணர் என்பது ஆகமத்தை அறிந்த ஆதிசைவர் அந்தணரையும் குறிக்கும்.
இவர்கள், தமிழகத்தில் தொன்மை குடிமக்களாக வாழ்ந்து வந்து சைவ சமயத்திற்கும் தமிழ் பக்தி இலக்கியங்களுக்கும் தொண்டு செய்து வருகிறார்கள்.
கலியுகம் தொடங்கிய காலத்தில் அவதரித்த கண்ணப்ப நாயனார் புராணத்தில் சிவ்வழிபாட்டினை செய்யும் சிவகோசரியார் ஓர் ஆதிசைவர்.
சங்க காலப் பாடல்களில் பெருமைபடப் பேசப்படும் சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான, ஈசனே சங்கப் பலகை ஏறி வாதிட்டு பொற்கிழி பெற்றுத் தந்த சங்க்கால தருமி ஓர் ஆதி சைவ அர்ச்சகர். தருமி ஆதிசைவர் மரபில் வந்தவர் என்பதை திருவிளையாடல் புராணம் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில்,
’அந்த வேலையிலா ஆதிசைவரில்
வந்த மாணவன் மணஞ்செய் வேட்கையால்
முந்தை யாட்சிமுமுயலும் பெற்றியான்
தந்தை தாயிலான் தருமியென்றுளான்’
என்ற பாடலின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
தமிழகத்தின் இருண்ட காலமாக களப்பிரர் ஆட்சியில் கி.பி. 5ம் நூற்றாண்டில், பல துன்பங்களுக்கும், வறுமைக்கும் இடையில் உயிரினும் மேலாக மதித்து சிவபூஜை செய்த 63 நாயன்மார்களில் ஒருவராகிய ஸ்ரீ புகழ்த் துணை நாயனார் ஓர் ஆதிசைவர்.
கி.பி. 7ம் நூற்றாண்டில் அவதரித்து 63 நாயன்மார்களை இந்த உலகறியச்செய்த தேவாரம் பாடிய மூவரில் ஒருவர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள். அவரது தந்தை ஸ்ரீ சடையனார் தாயார் ஸ்ரீ இசைஞானியார் ஆகியோர் ஆதிசைவர்கள்.
கி.பி. 10ம் நூற்றாண்டில் அவதரித்த மாமன்னன் ராஜராஜசோழன் வேண்டுதலுக்கு ஏற்ப தேவாரத் திருமுறைகளை கண்டெடுத்துத் தொகுத்துத் தந்த ’ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள்’ ஓர் ஆதிசைவர்.
கி.பி. 13ம் நூற்றாண்டில் ‘சிவஞானசித்தியார்’ என்ற உயர்வான சைவ சித்தாந்த நூலை பாடி அருளிச் செய்த சைவ சித்தாந்த ஆசிரியர் ’ஸ்ரீ அருள்நந்தி சிவாசாரியார்’ ஓர் ஆதிசைவர்.
கி.பி. 14ம் நூற்றாண்டில் அவதரித்த தமிழில் உள்ள புராணங்களில் அளவில் பெரியதும் சிறப்பும் உடைய கந்த புராணத்தை பாடிய ’ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியார்’ ஓர் ஆதிசைவர்.
மேலும், ஆளுடைய நம்பி என்று குறிக்கப்படும் ஸ்ரீ சுந்தரரின் தாயார் இசைஞானியார் குறித்து இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய (கி.பி. 1113-1150) திருவாரூர் கோயில் கல்வெட்டில் குறிப்பு உள்ளது.
அப்பகுதியில்,
’ஆளுடைய நம்பி மாதாக்கள் இசைஞானியார்
ஜனனி பவதோ ஞான சிவாச்சார்ய குலே பவத்
சைவே கெளதம கோத்ரேஸ்மின் ஞான்யாரவ்யா
கமலாபுரீ’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆதிசைவ மரபைச் சார்ந்தவர்கள் சங்க காலம் முதல் தொன்மை குடிமக்களாக காலந்தோறும் தமிழகத்தில் வாழ்ந்து வந்து சிவப்பணியும், சைவத் தொண்டும் செய்து வந்துள்ளார்கள் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.