ஆதிசைவர் மரபில் அவதரித்த அருளாளர்கள்

1. ஸ்ரீ புகழ்துணை நாயனார்
அவதரித்த தலம் : செருவிலிபுத்தூர் (சோழநாடு அழகாபுத்தூர் என்று அழைக்கப்படுகின்றது)
மரபு : ஆதிசைவ மரபு
அவதார நட்சத்திரம் : சித்திரை மாதம் – சதயம்.
சிறப்புகள் :
• பஞ்சம் மிகுந்து பசிநோய் வாட்டிய வறுமை நிலையிலும் சிவபெருமானை ஆகமவிதிப்படி பூஜித்து வழிபாடு செய்தவர்.
• சிவபெருமானால் பொற்காசு வழங்கப் பெற்றவர். சமணசமய ஆதிக்கம் நிறைந்த களப்பிரர் ஆட்சிக் காலமாகிய கி.பி.5 ம் நூற்றாண்டில் சிவபக்தியோடு வாழ்ந்து அருள் பெற்றவர்.
• திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோருக்கு முற்பட்டவர். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர்.

புடை சூழ்ந்த புலி அதன் மேல் அரவு ஆட ஆடி
பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்’
• திருத்தொண்டத் தொகை
’புண்ணியர்கள் புகழ் அழகார் திருப்புத்தூர்வாழ்
புகழ்துணையார் அகத்தடிமைப் புனிதர் சின்னாள்
மண்ணிகழ மழைபொழியா வற்காலத்தால்
வருந்துடலம் நடுங்கிடவு மணிநீ ரேந்தி
அண்ணல்முடி பொழிகலசம் முடிமேல் வீழ
அயர்ந்தொருநாள் புலம்ப அரன் அருளாலீந்த
நண்ணலரும் ஒருகாசுப் படியால் வாழ்ந்து
நலமலிசீர் அமருலகம் நண்ணினாரே
• திருத்தொண்டர் புராணசாரம்
முக்தியடைந்த தலம் – அழகாபுத்தூர்
குரு பூஜை நாள் : ஆவணி மாதம் – ஆயில்யம்


2. ஸ்ரீ சடையனார் (சடைய நாயனார்)

அவதரித்த தலம் : திருநாவலூர் திருமுனைப்பாடி நாட்டில் தலைநகரம்
மரபு : ஆதிசைவ மரபு
அவதரித்த நட்சத்திரம் : ஆடி மாதம் – புனர்பூசம்
சிறப்புகள் :
• மாதொருபாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலமாகிய ஆதிசைவ மரபில் அவதரித்து சிவபெருமானை ஆகமவிதிப்படி பூஜித்து வந்தவர்.
• ஆலாலசுந்தர்ராகிய நம்பியாரூராரை திருமகனாக வாய்க்கும்திருவரம் பெற்றவர்.
• கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசைவர்.
• அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

‘என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்’
• திருத்தொண்டத் தொகை
’தலம்விளங்கும் திருநாவலூர் தன்னில் சடையனென்னும்
குலம் விளங்கும் புகழோனை உரைப்பர் குவலயத்தில்
நலம் விளங்கும்படி நாம் விளங்கும்படி நற்றவத்தின்
பலம் விளங்கும்படி ஆருரனை முன் பயந்தமையே’
• திருத்தொண்டர் திருவந்தாதி.


3. ஸ்ரீ இசை ஞானியார்

அவதரித்த தலம் : திருவாரூர்
வாழ்ந்த தலம் : திருநாவலூர்
அவதரித்த நட்சத்திரம் : ஐப்பசி மாதம் – மூலம்
சிறப்புகள்:
• ஆலாலசுந்தரராகிய நம்பியாரூராரை திருமகனாக பெற்றெடுக்கும் பாக்கியம் பெற்றவர்.
• சிவபக்தி நிறைந்த அம்மையார். சிவபெருமானை இசைப்பாடல்களால் வழிபட்டு வந்தவர்.
• கி.பி.7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசைவ மங்கையார்.
• அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
இசைஞானியார் திருவாரூர்ரில் வாழ்ந்த சைவகெளதம கோத்திரத்து ஞானசிவாசாரியாரின் திருமகளார் என்பது திருவாரூர் கோயில் கல்வெட்டு செய்தி.
’என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி’
• திருத்தொண்டத்தொகை
’ஒழியாப் பெருமை சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார்
அழியாப் புரங்கள் எய்தழித்தார் ஆண்டநம்பி தனைப்பயந்தார்
இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டியாரை என்சிறுபுன்
மொழியாற் புகழ் முடியுமோ முடியா தெவர்க்கும் முடியாதால்’
• பெரிய புராணம்
முக்தியடைந்த தலம் : திருநாவலூர்
குருபூஜை நாள் : சித்திரை மாதம் – சித்திரை.


4. ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள்

அவதரித்த திருத்தலம் : திருநாவலூர்
ஆன்மார்த்த தலம் : திருவாரூர்
தந்தையார் : ஸ்ரீ சடையனார்
தாயார் : ஸ்ரீ இசைஞானியார்
மரபு : ஆதிசைவ மரபு
குழந்தை திருநாமம் : நம்பி ஆரூரன்
மனைவிகள் : ஸ்ரீ பிரவை நாச்சியார் – ஸ்ரீ சங்கிலி நாச்சியார்
அவதார நட்சத்திரம் : ஆவணி மாதம் – உத்திரம்
சிறப்புகள் :
• ஆதிசைவ மரபில் அவதரித்த சுந்தர், சிவபெருமானால் தனது அடிமை என்று தடுத்தாட்கொள்ளப்பட்டவர்.
• வந்தொண்டர் என்ற திருநாமம் பெற்றவர்.
• அறுபத்தி மூன்று நாயன்மார்களின் பெருமையை எடுத்துக்கூறும் திருத்தொண்டத் தொகையைப் பாடி அருளியவர்.
• திருவாரூரில் சிவபெருமானை தோழனாகப் பெற்றவர்.
• தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பெற்றவர்.
• திருத்தலங்கள் தோறும் சென்று தேவாரம் பாடியவர்.
• முதலை உண்ட பாலகனை மீட்டு அருள் செய்தவர்.
• திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்திற்குப் பின்பு வாழ்ந்தவர்.
• அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
• கி.பி.7-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்நிலவுலகில் 18-வயது வரை வாழ்ந்து மானிடயாக்கையுடன் யானைமீது திருக்கயிலைக்கு எழுந்தருளும் அருள் பெற்றவர்.
• ஸ்ரீ சுந்தரர் பாடிய மொத்த பதிகங்கள் 38,000 ஆகும். நமக்கு கிடைத்த பதிகங்கள் 100 ஆகும். சுந்தரர் தேவாரங்கள், பன்னிரு திருமுறைகளில் 7-ம் திருமுறையாக வைத்துப் போற்றப்படுகின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலையில்யோக நெறியை விளக்க வந்தவர்.
• அறுபத்து மூன்று நாயனார்களின் தொண்டின் சிறப்பை திருத்தொண்டத் தொகையாக பாடியருளவே இவ்வுலகில் அவதரித்தவர்.
’தொழுதும் வணங்கிய மாலயன் தேடருஞ் சோதி சென்றாங்
கெழுதுந் தமிழ்ப்பழ ஆவணங் காட்டி எனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செய் எனப்பெற்றவன் முரல்தேன்
ஒழுகும்மலரினற்றாள் எம்பிரான் நம்பியாரூரனே’
• திருத்தொண்டர் திருவந்தாதி
முக்தியடைந்த தலம் : திருவஞ்சைக்களம்
குருபூஜை நாள் : ஆடி மாதம் – சுவாதி


5. ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள்

அவதரித்த தலம் : திருநாறையூர் (சிதம்பரம் அருகே)
மரபு : ஆதிசைவ மரபு
சிறப்புகள் :
• மாமன்னர் ராஜராஜசோழன் வேண்டுதலுக்கிணங்க தேவாரப் பாடல்களை சிதம்பரத்தில் கண்டெடுத்துத் தந்தவர்.
• தேவார திருமுறைகளை தொகுத்துத் தந்தவர்.
• நாயன்மார்களின் தொண்டினை பெருமைகளை போற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி பாடலை பாடியருளியவர்.
• இளம் பருவத்திலேயே பொல்லப் பிள்ளையாரால் ஆட்கொள்ள பெற்றவர்.
• ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு காலத்தால் பிற்பட்டவர். கி.பி. 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசைவர்.
• வேதத்தை நான்காக வகுத்த வேதவியாசரைப்போன்று நம்பியாண்டார்நம்பி திருமுறைகளை வகுத்தும் தொகுத்தும் அருள் செய்த்தால் ’தமிழ் வியாசர்’ , ‘சைவ வியாசர்’ , என்று சிறப்பிக்கப் பெற்றவர்.
• பத்து நூல்களை பாடியருளியவர். இவர் அருளிய பிரபந்தங்கள் சைவத்திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையில் வைத்து போற்றப்படுகின்றன.
நம்பியாண்டார் நம்பிகள் பாடியருளிய நூல்கள் :
1. திருநாரையூர் விநாயகர் திரு இரட்டை மணிமாலை
2. கோயில் திருப்பண்ணியர் விருத்தம்.
3. திருத்தொண்டர் திரு அந்தாதி
4. ஆளுடைய பிள்ளையார் திருஅந்தாதி
5. ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்.
6. ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை.
7. ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை.
8. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்.
9. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை.
10. ஆளுடைய பிள்ளையார் திருஏகாதச மாலை.
நம்பியாண்டார் நம்பி பாடிய இந்த பத்து பதிகங்களே, சேக்கிழார் ‘பெரிய புராணம்’ பாடுவதற்கும், வரலாற்றுண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கும் பெருந்துணையாக விளங்கியது.
‘பொன்னி வடகரைசேர் நாரையூரில் புழைக்கைமுக
மன்னன் அறுபத்து மூவர் பதிதே மரபு செயல்
பன்ன அத் தொண்டத் தொகைவகை பல்கும் அந்தாதிதனைச்
சொன்ன மறைக்குல நம்பி பொற்பாதத் துணைதுணையே’
முக்தியடைந்த தலம் : திருநாரையூர்
குருபூஜை நாள் : வைகாசி மாதம் புனர்பூசம்


6. ஸ்ரீ அருணந்தி சிவாசாரியார்

அவதரித்த தலம் : திருத்துறையூர் (நடுநாடு)
மரபு : ஆதிசைவ மரபு
அருளிய நூல்கள் : சிவஞான சித்தியார், இருபா இருபஃது
சிறப்புகள் :
• சைவசித்தாந்த தத்துவத்தை பாடியருளிய சந்தானாசாரியார்கள் நால்வரில் ஒருவர். மெய்கண்டார் திருஅவதாரம் செய்ய, குருவாக இருந்து நற்காரணமாக விளங்கியவர்.
• சைவசித்தாந்த தத்துவத்தை அழகுற எளிய நடையில் பாடியருளியவர். தமிழில், சைவசித்தாந்த தத்துவங்களை தெளிவாகவும் விளக்கமுடனும் அளிக்கும் முதல் நூலின் ஆசிரியர் என்ற சிறப்புக்குரியர்.
• கி.பி.13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசைவர்.
• தாம் பிறந்த ஆதிசைவ சிவாசாரியார் மரபிற்கேற்ப ஆகமங்கள் அனைத்திலும் பெரும்புலமை பெற்று ’சகலாகம பண்டிதர்’ என சிறப்பிக்கப் பெற்றவர்.
• தேவாரத் திருமுறைகளின்மீது பெரும் பக்தியும், அன்பும் கொண்டு போற்றி வழிபட்டுவந்தவர். திருமுறைப் பாராயணம் நாள்தோறும் செய்து வந்தவர். தாம் வாழ்ந்த காலத்தில், ஆகமங்களில் தேவாரத் திருமுறைகளில் சைவசித்தாந்த தத்துவங்களில் கரைகண்டு நடமாடும் பல்கலைக்கழகமாக, நடமாடும் நூலகமாகத் திகழ்ந்த பெருமைக்குரியவர்.
• அருணந்தி சிவாசாரியார் சகல ஆகமங்களிலும் பண்டிதராக விளங்கியதால் தாம் செல்லுமிடங்களிலெல்லாம், சாத்திர ஏட்டு சுவடிகளையும், ஆகம சுவடிகளையும் ஏற்றிச் செல்வாராம். தமக்கு ஒரு வண்டி, ஆகம சுவடிகளுக்கு ஒரு வண்டி. எனவே இவர் நடமாடும் பல்கலைக் கழகம் என புகழப்பட்டார்.
• சிவஞானசித்தியார் – பரபக்கம், சுபபக்கம் என்று இரண்டு பாகங்களாக பாடியுள்ளார். பரபக்கம் 301 பாடல்களைக் கொண்டது. சுபபக்கம் 328 பாடல்களைக் கொண்டது.
• தாம்பிறந்த ஆதிசைவ மரபில் கடமை சிவபெருமானின் பெருமைகளை உலகறியச் செய்வது என்ற கொள்கைக்கேற்ப, மாற்று சமயங்களின் கொள்கைகளை மறுத்து சைவசித்தாந்த தத்துவத்தை, சிவபிரத்துவத்தை சுபபக்கம் வாயிலாக அழகுற எடுத்துக்கூரி தாம் அவதரித்த ஆதிசைவ மரபிற்கு பெருமைசேர்த்தவர்.
’முப்பொருளின் ஈரியல்பும் ஓர் இயல்பா நுவலாது முறை
வெவ்வேறாய்
செப்பு சிவாகமங்களின்தன் பொருள் ஒருமை பெற உணர்ந்து
தின்முன் நூலை
ஒப்பவிரி யாப்பு அதனால் சித்தி எனும் வழிநூலாய் ஒளிர்பிற்
காலத்து
இப்புவியோர் தெளிந்து உய்ய மொழிந்த அருள்நந்தி சிவன்
இணைத்தாள் போற்றி’
முக்தியடைந்த தலம் : திருத்துறையூர்
குருபூஜை நாள் : புரட்டாசி மாதம் பூரம்.


7. ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியார்

அவதரித்த திருத்தலம் : காஞ்சிபுரம்
தந்தையார் : காளத்தியப்ப சிவாசாரியார்
மரபு : ஆதிசைவ மரபு
சிறப்புகள் :
• காஞ்சிபுரம் குமரகோட்டத்து ஸ்ரீ முருகப்பெருமானை முப்பொழுதும் திருமேனி தீண்டி வழிபடும் ஆதிசைவ மரபில் அவதரித்தவர்.
• சைவசமயத்தின் பெருங்காப்பியம் எனப் போற்றப்படும் கந்தபுராணத்தை பாடியருளியவர்.
• முருகப்பெருமானே கனவிலே வந்து ‘ கந்தபுராணம் பாடுவாயாக’ என்று அருள் செய்து, ‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என்று அடியெடுத்துக் கொடுக்கும் திருவருள் பெற்றவர்.
• கந்தபுராணம் அரங்கேற்றத்தின் பொழுதுமுருகப் பெருமானே தோன்றி ‘வீரசோழியம்’ என்ற இலக்கண நூல் மூலம் புலவர்களின் சந்தேகத்தைத் தீர்த்து அருள் செய்த புண்ணியம் பெற்றவர்.
• சைவ சமயத்தில் சிவபெருமானின் மூன்று கண்களாக போற்றப் படுபவை, 1. பெரிய புராணம், 2. கந்த புராணம், 3. திருவிளையாடற் புராணம். இவற்றில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணாக போற்றப்படும் கந்தபுராணத்தை பாடியருளிய பெருமைக்குரியவர்.
• ‘கந்தபுராணம் எவரையும் கவர்ந்து இழுக்கும் காந்தபுராணம்’ என்று போற்றப்படும் பெருமைக்கும் சிறப்பிற்கும் உரியவர்.
• தாம்பிறந்த ஆதிசைவ மரபிற்கேற்ப, கந்தபுராணம் நூல் முழுவதிலும், சிவபெருமானின் பெருமைகளையும், ஆகம கருத்துகளையும், சைவசித்தாந்த்த் தத்துவங்களையும் பெருமளவு பாடியருளியவர்.
• கம்பனின் கவித்திறத்தையும் விஞ்சக்கூடிய வகையில் கவியமுதக் காவியமாக கந்தபுராணத்தை வழங்கிய சிறப்புக்குரியவர். ‘காதல் மழை பொழிந்த அருள் கொண்டலான கச்சியப்பன் இருபாதம் உச்சி வைப்பாம்’ என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க பக்தி மழை பொழிந்த கருமேகம் போன்றவர் கச்சியப்ப சிவாசாரியார்’ என்ற பெருமைக்கும் புகழுக்கும் உரியவர். கி.பி.14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசைவர்.
’உச்சிதமாம் சிவவேதியன் காளத்தி ஓங்குமைந்தன்
கச்சியப்பன் செய்த கந்த புராணக் கலைக்கடலின்
மெச்சிய கல்வி மதியும் வெண்டாமரை மேவு மின்னும்
இச்செவி நாவினுக்கு இன்பாம் அமுதம் எழுந்தனவே


8. ஸ்ரீ சிவகோசரியார்

அவதரித்த தலம் : திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி)
மரபு : ஆதிசைவ மரபு
சிறப்புகள் :
• சிவத்தையே எப்பொழுதும் கோசரித்துக் கொண்டிருப்பவர் என்பதால் சிவகோசரியார் எனப் பெயர் பெற்ற சிறப்புக்குடையவர்.
’எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கேற்ப’ என்ற சேக்கிழார் வாக்கிற்கேற்ப ஆகம விதிப்படி சிவபெருமானைப் பூஜித்து அருள் பெற்றவர்.
’கானவர் பெருமானார் தம் கண்ணிடந்தப்புன்போதும்
ஊனமு துகந்த ஐயர் உற்றுமுன் பிடிக்கும் போதும்
ஞானமாமுனிவர் கண்டார்…’
என்று சேக்கிழார் பெருமானால் ஞானமாமுனிவர் என்று போற்றப்படும் பெருமைக்குரியவர். ஏனெனில், கண்ணப்ப நாயனாருடைய செயல்கள் யாவும் இறைவனருளினால் காட்டவும், உணர்த்தவும் பட்ட ஞானத்தை பெற்றவராதலின் ஞானமாமுனிவர் என்றார் – என்று விளக்கம் அளிப்பார் சைவ அறிஞர். சி.கே. சுப்பிரமணிய முதலியார்.
• நக்கீரதேவ நாயனார் தாம் பாடிய கண்ணப்பதேவர் திருமறத்தில் போற்றி புகழப்பெற்றவர். கலியுகத்தின் தொடக்க காலத்தில் ஆகமவிதிப்படி பூஜித்த ஆதிசைவர்.
• கண்ணப்ப நாயனார் செய்த அன்புவழி பூஜை முறைக்கு முன்னுதாரணமாக விளங்கும் அருள் பெற்றவர்.


9. ஸ்ரீ தருமி

அவதரித்த தலம் : திரு ஆலவாய்(மதுரை)
தந்தையார் : சிவமுனி
மரபு : ஆதிசைவ மரபு
சிறப்புகள் :
• சங்ககாலத்திலேயே வாழ்ந்துவந்த ஆதிசைவ மரபைச் சார்ந்தவர்.
• தருமியின் பொருட்டு சிவபெருமான் சங்கப்பலகை ஏறி வாதிட்டு பொற்கிழியினைப் பெற்றுத்தந்த சிறப்பிற்குரியவர்.
அப்பர்பெருமான் திருப்பத்தூர் தேவாரத்தில்,
’நன்பாட்டுப் புலவனாய் சங்கமேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண்’
என்று போற்றிப் பாடியுள்ளார்.
கல்லாடம் நூலானது,
’பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக்
கொங்குதேர் வாழ்க்கைக் செந்தமிழ் கூறிப்
பொற்குவைதருமிக்கு அற்புடன் உதவி
என்னுளங் குடிகொண்டு இரும்பயன் அளிக்கும்
கள்ளவிழ் குழல்சேர் கருணையெம் பெருமான்’
என்று தருமிக்கு பொற்கிழி அளித்த செயலைப் போற்றிப் பாடுகின்றது.
திருவிளையாடற் புராணத்தில்,
அந்த வேலையிலா ஆதிசைவரில்
வந்த மாணவர் மணஞ்செய் வேட்கையான்
முத்தை யாச்சி முயலும் பெற்றியான்
தந்தை தாயிலான் தருமி யென்றுளான்’
என்று தருமியைக் குறித்துப் பாடப்பட்டுள்ளது.
இன்றும், மதுரை திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவில் நான்காம் திருநாளில் தருமிக்கு பொற்கிழி அளித்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 

 

திருமடங்களும் ஆதிசைவர்களும்

குருத்துவம், ஆச்சாரியத்துவம் ஆதிசைவருக்கே உரியது. ஆகமவிதிப்படி சிவதீக்ஷை அளிக்கும் உரிமை ஆதிசைவருக்கே உண்டு. குருவாக இருந்து சிவஞானம் அளிக்கும் காரணாத்தால்தான் ஆதிசைவர்களுக்கு ‘குருக்கள்’ என்ற பெயர் ஏற்பட்டது, குருக்கள் என்ற பெயர் காரணத்தைக் கொண்டே ஆதிசைவர்களின் குருவத்துவத்தை அறிய முடியும்.

கடந்த காலங்களில் சிவாலயத்திற்கு அருகே ஆதிசைவர்களாகிய சிவாசாரியார் இல்லம் இருக்கும். இவர்களின் இல்லம் ஒவ்வொன்றும் சைவ மடமாகவே விளங்கியது. பல சைவர்களுக்கும், சைவ குடும்பங்களுக்கும் குலகுருவாக இருந்து ஆகம உபதேசகமும் சிவபக்தியையும் ஊட்டி வந்துள்ளார்கள்.

பெண்ணாகடத்தைச் சேர்ந்த மெய்கண்டாரின் தந்தை அச்சுதகளப்பாளருக்கு, திருத்துறையூர் சைவ சித்தாந்த ஆசிரியர் அருள்நந்தி சிவாசாரியார் குலகுருவாக இருந்த வரலாற்றை நாம் இங்கும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுபோன்று அக்காலத்தில் பல சைவ குடும்பங்களுக்கு, சைவ குருமார்களாக, குலகுருவாக இருந்து ஆதிசைவ சிவாசாரியார்கள் சிவ உபதேகம் செய்து வந்துள்ளார்கள்.

பதினெட்டு சைவ மடங்கள் என்பதே, சிவாசார்ய பெருமக்களுக்கு உரிய மடங்கள் என்பதே, சிவாசார்ய பெருமக்களுக்கு உரிய மடங்கள் என்பதும், அவர்களால் தோற்றுவிக்கப்பட்டவை என்பதும் வரலாற்று உண்மையாகும்.

பதினெண் மட்த்திற் பயிலு முதலிகளும் – திருவானைக்கா உலா
வெண்ணீற்று வண்டற் பதினெண் மட்த்தாரும் – திருக்காளத்திநாதர் உலா
சைவமார்க்க பதினெண் மட்த்தாரும் – திருப்பூவணநாதர் உலா.

போன்ற உலா நூல்களில் பதினென் மடங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
மேற்கண்ட உலா நூல்களுக்கு அரும்பதவுரையெழுதிய தமிழ் தாத்தா உ.வெ.சாமிநாதய்யர் அவர்கள் "பதினெண் மட்த்தார்" என்பது, சிவாகம பத்ததிகள் பதினெட்டும் இயற்றிய சிவாசாரியார்கள் பதினெண்மர்களுடைய பரம்பரையினர் என்றும், அந்த மரபில் வந்தவையே பதினெண் மடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

மேற்கண்ட செய்திகளை தமது ‘சைவ ஆதினங்கள்’ என்ற நூலில் எடுத்துக் காட்டியுள்ள தவத்திரு ஊரன் அடிகள், கீழ்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளார். மேற்குறித்த உலாநூல்கள் மூன்றிலும் காலத்தால் முற்பட்டது, காளமேகப்புலக்வர் பாடிய திருஆனைக்கா உலாவாகும். காலம் பதினைத்தாம் நூற்றாண்டு. அக்காலத்தில் பதினெண் மடங்கள் என்பது பத்ததி ஆசிரியர் பதினென்மர் பரம்பரை மடங்களையே குறித்த்து. சுத்த சைவ பதினெண் ஆதினங்கள் என்ற பட்டியலிற் காணப்பெறும் மடங்களிற் பல அக்காலத்தில் தோன்றவில்லை.

காளமேகப்புலவர் திருவானைக்கா உலா பாடிய பதினைந்தாம் நூற்றாண்டில் பதினெண்மடங்கள் என்றால் பத்ததிகள் செய்த சிவாசாரியார் பரம்பரை மடங்களே. பிற்காலத்தில் அவை இல்லாமல் போயின. பின்வந்தோர் அவை இன்னதென அறியாத நிலையில் தம் காலத்தில வழக்கிலுள்ள தமிழ்ச் சைவ மடங்கள் பதினெட்டு எனக் கூறப்பெற்றுவிட்டதால் தம் காலத்திலுள்ள மடங்களிற் பதினெட்டைப் பட்டியலிட்டுவிட்டனர்’ என்கிறார்.

அதாவது, முதலில் சைவ மடங்கள் பதினெட்டு என்பது ஆகம பத்ததி நூல் இயற்றிய சிவாசாரியார்கள் மடங்களே என்பதும், இந்தப் பதினெட்டு ஆகம மடங்கள் காலப்போக்கில் மறைந்து, அழிந்து போன பின்பு, பின்வந்தோர், சைவ ஆதினங்கள் பதினெட்டு என்று இப்பொழுது கூறக்கூடிய திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், மதுரை போன்ற ஆதீனங்களை சைவ மடங்கள் பதினெட்டு என்று பட்டியலிட்டனர் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. இதன்மூலம், மடங்கள் ஏற்படுத்தி முதன்முதலில் சைவமும் ஆகம்மும் தழைக்க அரும்பணியாற்றிவர்கள் ஆதிசைவ சிவாசாரியார்களே என்பது தெளிவாகத் தெரிகிறது.

மேலும், இன்று, பதினெட்டு சைவ ஆதினங்கள் என்று வழக்கிலுள்ள பட்டியலில் உள்ள குன்றக்குடி ஆதினமும், சூரியனார் கோயில் ஆதின்மும் ஆதிசைவர்களாகிய சிவாசாரியார்களால் தோற்றுவிக்கப்பட்டது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தைத் தோற்றுவித்தவர், திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்த ஸ்ரீ தெய்வசிகாமணி சிவாசாரியார் ஆவார். இவர் ஆதிசைவ அந்தணர். சிவாசாரிய மரபினர். இல்லறத்தார். சைவ சித்தாந்த ஆசிரியர்களில் ஒருவராகிய அருள்நந்தி சிவாசாரியாரின் நேர் மாணாக்கராவார். ஸ்ரீ தெய்வசிகாமாணி சிவாசாரியாரே சைவ சமயம் தழைத்தோங்க குன்றக்குடி ஆதினத்தை தோற்றுவித்தவர்.

அதேபோல் சூரியனார் கோயில் ஆதினம் ஸ்கந்த பரம்பரை வாமதேவசந்தானம். அதாவது கந்த பெருமானிடம் உபதேசம் பெற்ற வாமதேவ மகரிஷியின் வழியில் வந்த ’ஸ்ரீ சிவாக்கிரயோகிகள்’ என்ற ஸ்ரீ சிவக்கொழுந்து சிவாசாரியார் என்பவரால் சூரியனார் கோயில் ஆதினம் நிறுவப்பட்டது. இவர் ஓர் ஆதிசைவ அந்தணர்.

சோழ தேசத்தில் மருதாந்த சோழபுரத்தில் அவதரித்தருளின சிவாக்கிரகயோகிகள் என்னும் சிவக்கொழுந்து சிவாசாரியாருக்கு’ என்பது இவரைப் பற்றிய குறிப்பு, என்பார் தவத்திரு ஊரன் அடிகள். சிவ வழிபாடும், சிவாகமங்களும், சைவ சமயமும் தழைத்தொங்க ஆதிசைவ சிவாசாரியார்கள் பல மடங்களை நிறுவித் தொண்டு செய்து, மக்களுக்கு நன்முறையில் சிவஞானம் அளித்து நல்வழி காட்டியுள்ளார்கள். காலப்போக்கில் சிவாசார்ய மடங்கள் எல்லாம் அழிந்து போயின அல்லது வளர்ச்சி குன்றின. இதற்கான காரணம் தமிழகத்தின் இடைக்காலத்தில் ஏற்பட்ட மாற்று தேசத்து மன்னர்களின் ஊடுறுவல்களும், அரசியல் மாற்றங்களுமே ஆகும். மேலும், ஸ்ரீ அகோர சிவாசாரியார் தம்முடைய பத்ததி நூலில் மகோற்சவ விதிப் படலத்தில் பதினைந்து மடங்களின் பெயர்களைக் கூறியுள்ளார்.

1. கைலாச மடம் 2. பெளண்ரக மடம் 3. வலாக மடம் 4. கற்பகிராம மடம் 5. பதரீ மடம் 6. தேவதாருவன மடம் 7. கந்தர்ப்ப மடம் 8. உத்தராரண்யகம் மடம் 9. தக்ஷிணாரண்யகம் மடம் 10. கோவிதார மடம் 11. ஆமந்தக மடம் 12. மத்த மடம் 13. மாயூர மடம் 14 ரணபத்ர மடம் 15. சோழக மடம்.
இந்த பதினைந்து ஆகம சைவ மடங்களும் சிவாசாரியார் தலைமையில் இயங்கி வந்துள்ளன.
மேற்கண்ட பத்ததி ஆசிரியராகிய ஸ்ரீ அகோர சிவாசாரியார் கி.பி.பதினோறாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர். சிதம்பரம் ஸ்ரீ அனந்தேஸ்வரன் கோயில் அருகே திருமடம் ஒன்றை நிறுவினார். இதற்கு ’ஸ்ரீ அகோர சிவாசாரியார் மடம்’ என்று பெயர். இம்மடத்தின் துருவாச முனிவரீன் திருவுருவம் அமைந்துள்ளது. இம்மடத்தில் வீற்றிருந்தே அகோர சிவாசாரியார் ஆகம உபதேசம் செய்தும், பல ஆகம நூல்களை இயற்றியதாகவும், ’சிதம்பரஸார’ என்ற நூலில் கூறப்பட்டிருக்கின்றது. இப்பொழுது இம்மடம் ‘மேலமடம்’ என்று அழைக்கப்படுகிறது. சிவாசாரிய மரபில் வந்த இம்மடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஸ்மார்த்த பிராமணர் தலைமையில் செயல்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது.

இன்றைக்கு, ஆதிசைவ சிவாசாரியார்கள் தலைமையில் இரண்டு திருமடங்களே வழிவழியாக இருந்து சைவபணியும், சிவபணியும், ஆற்றி வருகின்றன. அவை,

1. கூனம்பட்டி ஆதினம்
கூனம்பட்டி மாணிக்கவாசகர் மடாலயத்தை நிறுவியவர் ஸ்ரீ மாணிக்கவாசகரின் சீடராகிய, அணுக்கத் தொண்டர் மாணிக்கப்பண்டிதர் என்பவர். இவர் சோழநாட்டு வாட்போக்கி என்னும் ரத்தினகிரியில் ஆதிசைவர் மரபில் தோன்றியவர். ரத்தினகிரிப் பெருமானை முப்பொழுதும் தீண்டி வழிபடும் பரம்பரையினர் கல்வி, அறிவு, ஒழுக்கங்களிலும், சிறப்புற்றும் வேத ஆகம சாஸ்திரங்களிலும், மந்திர சாஸ்திரங்களிலும் புலமை பெற்று விளங்கினார்.

இவர் மதுரை சென்று மீனாட்சி அம்மை சமேத சொக்கநாதப் பெருமானை வழிபட்டு வந்த நாளில், சமயக்குரவர் நால்வரில் ஒருவரான ஸ்ரீ மாணிக்காசகப் பெருமானை கண்டு தரிசித்து, கண்ணீர் ததும்ப அவரின் அணுக்கத்தொண்டராக தொண்டு செய்யும் பேறு பெற்றார். மாணிக்கவாசகப் பெருமானோடு பல தலங்களுக்கும் தலயத்திரை செய்து வந்தார். இந்நிலையில் மாணிக்கவாசகர் சிவபெருமான் திருவடிகளில் மனம் பதித்தவராக, தில்லை சிதம்பரத்தை வந்தடைந்தார். சிவகாமவல்லி உடனுறை நடராஜப் பெருமானை கண்டு தரிசித்த வேளையில், நிழல்போல் தன்னை விட்டுப் பிரியாமல் ஆணுக்க தொண்டராக விளங்கும் சீடர் மாணிக்கவாசகப் பண்டிதருக்கு ஞானதீக்ஷையும், ஞான உபதேசமும், சிவானந்த வெள்ளத்தினாலே ஞானாபிஷேகம் செய்தருளினார். அவருக்கு மாணிக்கவாசர் என்ற தம்முடைய திருநாமத்தைச் சூட்டி அருளினார். பின்னர் மாணிக்கப் பண்டிதர் பூஜித்துவரும் ஸ்ரீ ராஜலிங்க மூர்த்தியோடு, தம் ஆன்மார்த்த மூர்த்தியாகிய மீனாட்சி சுந்தரேஸ்வரரையும் பூஜித்து வருமாறு அருள் செய்து, சைவ பரிபாலனம் செய்து வருவாயாக என்று அருளாசி வழங்கி விடை கொடுத்தார்.

கூனம்பட்டி ஆதீனம், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகில் உள்ளது. இந்த ஆதீனத்தின் குருபரம்பரை வாழையடி வாழையெனப் பெருகியது. இந்த ஆதீனத்தில் பீடமேறுபவர் தங்கள் பெயரோடு மாணிக்கவாசகர் என்ற குருநாமத்தை சேர்த்துக்கொள்ளுவார்கள். மேலும், இந்த குருபரம்பரையில் வருபவர்களை ‘மாணிக்க சாமி’ என்று அழைக்கும் மரபும் உள்ளது.

இந்த ஆதீனத்தின் குருமகா சந்நிதானமாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ ராஜலிங்க மாணிக்கவாச ஸ்வாமிகள் காலத்தில், சமண இளவரசனின் கூன் நிமிர்த்தி அருள் செய்த காரணத்தால் சுவாமிகள் தங்கிய திருமடம் பகுதி ‘கூனம்பட்டி’ எனப் பெயர் பெற்றது. கூன் நிமிர்ந்த இளவரசனுக்கு சுவாமிகள் மடாலயத்திலேயே திருமணம் செய்துவைத்தார்கள். அதுபற்றியே கூனம்பட்டிக்கு ‘கல்யாணபுரி’ என்ற பெயரும் வழங்குவதாயிற்று.

இந்த ஆதீனத்தின் ஜம்பத்தி ஐந்தாம் குருபீடமாக இருந்து அருளாட்சி புரிந்தவர் ஸ்ரீலஸ்ரீ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள். இவர் சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணத்தை தன் அனுபுதி ஞானத்தால் தமிழுலகமும், சைவ உலகமும் வியக்கும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றி வந்துள்ளார்கள். அதுகண்ட சிவநேய சான்றோர்கள் இவரை ‘ கோவை சேக்கிழார்’ என்று அழைத்து பெருமைப் படுத்தினார்கள்.

கொங்கு தேசத்தில், பல சைவ அன்பர்களுக்கு ஆகமவிதிப்படி சிவதீக்ஷை அளித்து சிவஞான உபதேசம் செய்து சைவபரிபாலனமும், சிவபரிபாலனமும் செய்து வரும் திருக்கையிலாய பரம்பரை கல்யாணபுரி எனப்படும் கூனம்பட்டி ஆதீனத்தில் இப்பொழுது 57 ஆம் பட்ட்த்தில் குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ ராஜலிங்க சரவண மாணிக்கவாசக சுவாமிகள் அமர்ந்து ஞானச்செங்கோலோச்சி செய்துவருகிறார்கள்.

2. சீர்காழி சட்டநாத சுவாமிகள் மடம்

சீர்காழி ஸ்ரீ சட்டநாத சுவாமிகள் திருமடம் ஆதிசைவ சிவாசாரியாரை குரும்முதல்வராக்க் கொண்ட திருமடமாகும். இந்தத் திருமடம் முதலில் சீர்காழியில் இருந்து சைவ பணியும் சிவபணியும் ஆற்றி வந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் சென்னை கோமாலீஸ்வரன் பேட்டையில் இந்தத் திருமடமானது வந்து நிலைபெற்றது. பல சைவ அன்பர்களும் பக்தர்களும் இம்மடம் வந்து குரு உபதேசமும், சிவஞானமும் பெற்றுச் செல்கிறார்கள். இந்தத் திருமடத்தின் ஆன்மார்த்த மூர்த்தியாக காமாட்சி அம்மன் உடனுறை அகத்தீஸ்வரர் ஸ்வாமி வீற்றிருந்து அருள்புரிகிறார்.

சட்டநாத ஸ்வாமிகள் திருமட்த்தின் குருமார்களில் ஒருவரான ஸ்ரீ சாம்பசிவ சிவாசாரியாரின் மனைவியார் பெரும் சித்தராக விளங்கியவர். ஸ்ரீ அனந்தம்மாள் என்பது இவரது இயற்பெயராகும். இந்த அம்மையார் ஸ்ரீ சக்ரபூஜை உபாசனை சிறப்பாகச் செய்துவந்ததால், ‘ஸ்ரீ சக்கர அம்மாள்’ என்று அழைக்கப்பட்டார். தமிழ்த் தென்றல் திரு. வி.க. அவர்கள், ‘இந்த அம்மையார் பறக்கும் ஆற்றல் பெற்றிருந்ததாக’ தம் நூலில் குறித்துள்ளார். இவருடைய ஜீவசமாதி திருவான்மியூரில் உள்ளது. பல சித்துகளைச் செய்து பக்தர்களுக்கு அருள்புரிந்த இவர் ஆதிசைவ சிவாசாரியார் மரபில் வந்த அம்மையார் ஆவார்.

இன்றும் சட்டநாத சுவாமிகள் திருமடம் பல சைவ அன்பர்களுக்கு சிவதீக்ஷை அளித்து சைவசமயம் வளரவும் சிவபக்தி பெருகவும் பல பணிகளை தொண்டினை சிறப்புற செய்து வருகின்றது. காஞ்சிபுரத்தில் காலாண்டார் என்னும் பெயரில் தெரு ஒன்று உள்ளது. காலாண்டார்கள் எனப்படும் ஆதிசைவர்களின் மடம் ஒன்று இத்தெருவில் இருந்ததால் இப்பெயர் பெற்றாதென்பர். ‘இவர்கள் சிவவடிவமாகிய பைரவ மூர்த்தியை உபாசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு ஏகாம்பரேஸ்வர்ர், காமாட்சி அம்மன் ஆலயங்களில் கால்பங்கு ஆளுமை இருந்ததால் ’காலாண்டார்கள்’ என அழைக்கப்பட்டனர்’. இவர்களை வடமொழியில் ‘சதுர்பாக மிராசுதாரர்கள்’ என்று அழைக்கின்றனர் என்று கூறுகிறார் சிவசுந்தரி பூசை. ச.ஆட்சிலிங்கம் அவர்கள்.

கொங்கு குல குருக்கள்

இதேபோல், தமிழகத்தில் கொங்கு நாட்டில் பல சைவ மடங்களை நிறுவி ஆதிசைவர்கள் சில பணியும் சைவ சமயத் தொண்டும் செய்துவருகிறார்கள். ஆதிசைவ குருக்கள்கள் கொங்கு தேசத்தில் கொங்கு குடிமக்களுக்கும், பிற குடிமக்களுக்கும் குலகுருவாக வீற்றிருந்து பல தலைமுறைகளாக அவர்களின் குடும்பங்களின் நலன் கருதி சிவபூஜை, சிவ உபதேசம், செய்து அவர்களிக்கு நல்வழி காட்டி வந்துள்ளனார்.

குருபீடம் உயர குடி உயரும்’ என்ற வாக்கிற்கெற்ப கொங்கு தேசத்து மக்களும் அவர்களின் குல குருக்களை நன்கு ஆதரித்து வந்தனர். கொங்கு தேசத்து பூர்வ குடிகள் ஐம்பத்தோரு ஆதிசைவ ஆதினங்களை நிறுவினர். இந்த 51 ஆதினங்களும் குருகுலங்கள், குருமடாலயங்கள் என்று அழைக்கப்பட்டன. குலதெய்வத்தை வழிபடுவது போன்று தங்களின் குலகுருக்களையும் போற்றி வந்தனர். தெய்வம் குலகுருவின் மூலமே நன்மை அளிக்கும் என்ற நம்பிக்கை கொண்டனர்.

மேலும், தங்கள் குலகுருக்கள் திருமடம் அமைத்து இருந்த பகுதிகளை அய்யம்பாளையம், குருக்கள்பட்டி, குருக்கள்பாளையம் என்று குருவின் பெயரை நினைவுபடுத்தும் விதமாக ஊரின் பெயரை சூட்டிக் கொண்டார்கள். கொங்கர் கொங்குதேசம் வருகையிலேயே குருக்களையும் அழைத்து வந்தனர் என கொங்கு காணிப்பட்டயம் கூறுகின்றது. ஆதிசைவ குருக்கள்கள் கொங்கு தேசத்தில் பல்வேறு குடிகளுக்கு குலகுருக்களாக இருந்து சைவசமய பரிபாலனம், சிவபரிபாலனம் செய்து வருகின்றார்கள். இவர்களின் சைவ மடங்கள் விபரம் வருமாறு:

கொங்கு நாட்டு ஆதிசைவ திருமடங்கள்:
1. ஸ்ரீலஸ்ரீ சிவசமய பண்டித குருசுவாமிகள், சிவகிரி மடம்.
2. ஸ்ரீமத் இம்முடி சிற்றம்பல குருசுவாமிகள், அருணகிரி அய்யம்பாளையம் மடம்.
3. ஸ்ரீமத் நாயனார் தில்லைச் சிற்றம்பல குருசுவாமிகள், தாரமங்கலம் மடம், குருக்கள்பட்டி.
4. ஸ்ரீமத் அழகிய தில்லைச் சிற்றம்பல குருசுவாமிகள், கல்லங்குளம் மடம், ராசிபுரம்.
5. ஸ்ரீமத் கனகசபாபதி பண்டித குருசுவாமிகள், வள்ளியறச்சல் மடம், குருக்கள்பட்டி.
6. ஸ்ரீமத் மீனாட்சி சைவபுரந்தர பண்டித குருசுவாமிகள், காடையூர் மடம்.
7. ஸ்ரீமத் கொடுமுடிப் பண்டித குருசுவாமிகள், கீரனூர் மடம்.
8. ஸ்ரீமத் ஒரு நான்கு வேதாந்த பண்டித குருசுவாமிகள், பாப்பினி மடம்.
9. ஸ்ரீமத் பாலசக்தி சைவ சிகாமணி பண்டித குருசுவாமிகள், பரஞ்சேர்வழி மடம், ஆலாம்பாடி.
10. ஸ்ரீமத் சந்திரசேகர பண்டித குருசுவாமிகள், வெள்ளக்கோயில் மடம், மயிலரங்கம்.
11. ஸ்ரீமத் ஆலாலசுந்தர பண்டித குருசுவாமிகள், மருதுறை மடம், குறுக்குப்பாளையம்.
12. ஸ்ரீமத் சைவசிகாமணி குலசேகர பண்டித குருசுவாமிகள், ஸ்ரீ முத்தூர் சந்தான மடம்.
13. ஸ்ரீமத் கனககிரி பண்டித குருசுவாமிகள், பட்டாலி மடம்.
14. ஸ்ரீமத் கனகசபாபதி பண்டித குருசுவாமிகள், ஸ்ரீகண்ணாபுரம் மடம்.
15. ஸ்ரீமத் கொற்றனூர் சடைய பரமேஸ்வர பண்டித குருசுவாமிகள், இலக்கமநாயக்கன்பட்டி மடம்.
16. ஸ்ரீமத் கனகசபாபதி பண்டித குருசுவாமிகள், போரூர் மடம்.
17. ஸ்ரீமத் சுந்தர சென்னிகிரி பண்டித குருசுவாமிகள், பழனி கீரனூர் மடம்.
18. ஸ்ரீமத் சிவசமய பண்டித குருசுவாமிகள், கீழ்சாத்தம்பூரி மடம்.
19. ஸ்ரீமத் மார்கண்டேய பண்டித குருசுவாமிகள், இருகூர் மடம்.
20. ஸ்ரீமத் மாணிக்கநாயக சந்திரசேகர பண்டித குருசுவாமிகள், கொடுமுடி மடம்.
21. ஸ்ரீமத் ஆலாலசுந்தர ஹர்தன வாக்கிய புத்திர சந்தான குருசுவாமிகள், தென்சேரி மலை மடம்.
22. ஸ்ரீமத் ராசமணிக்க ஸ்ரீ ஆலாலசுந்தர பண்டித குருசுவாமிகள், வலையப்பாளையம் மடம், கருவனூர்.
23. ஸ்ரீமத் ஞான சிவாசாரியார் குருசுவாமிகள், போரூர் மேலை மடம்.
24. ஸ்ரீமத் தியாகராஜ பண்டித குருசுவாமிகள், பல்லா கோயில் மடம்.
25. ஸ்ரீமத் மூவேந்திர பண்டித குருசுவாமிகள், தோளூர் மடம், மொஞ்சனூர்.
26. ஸ்ரீமத் கல்யாண பசுபதி பண்டித குருசுவாமிகள், கருவூர் மடம், கரூர்.
27. ஸ்ரீமத் சுந்தர வாகீச சென்னிகிரி பண்டித குருசுவாமிகள், பிடாரியூர் மடம்.
28. ஸ்ரீமத் மூவேந்திர பண்டித குருசுவாமிகள், வெள்ளோடு மடம்.
29. ஸ்ரீமத் நல்மணி வேதாந்த பண்டித குருசுவாமிகள், கத்தங்காணி மாடம், முதலிபாளையம்.
30. ஸ்ரீமத் ஆண்ட சிவசுப்ரமண்ய பண்டித குருசுவாமிகள், கருமாபுரம் மடம்.
31. ஸ்ரீமத் ஆதிசைவ புரந்திர பண்டித குருசுவாமிகள், சாந்தம்பூர் மடம்.
32. ஸ்ரீமத் சிவராஜ பரமேஸ்வர பண்டித குருசுவாமிகள், மூலனூர் மடம்.
33. ஸ்ரீமத் காவேரி பரமேஸ்வர பண்டித குருசுவாமிகள், மாம்பாடி மடம்.
34. ஸ்ரீமத் உமாபதி பண்டித குருசுவாமிகள், நஞ்சை இடையார் மடம்.
35. ஸ்ரீமத் இம்முடி சிற்றம்பல குருசுவாமிகள், நடத்தை மடம்.
36. ஸ்ரீமத் ஆண்ட சிவசுப்ரமணிய பண்டித குருசுவாமிகள், பெருந்துறை சான்றோர் குலகுரு மடம்.
37. ஸ்ரீமத் திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளல் குருசுவாமிகள், வள்ளல் தலையூர் மடம்.
38. ஸ்ரீமத் திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளல் குருசுவாமிகள், வள்ளல் பழங்கரை மடம்.
39. ஸ்ரீமத் திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளல் குருசுவாமிகள், வள்ளல் மயில் ரங்கம் மடம்.
40. ஸ்ரீமத் திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளல் குருசுவாமிகள், வள்ளல் வடகரை மடம்.
41. ஸ்ரீமத் ஆண்ட சிவசுப்ரமணிய பண்டித குருசுவாமிகள், ஏனாதிநாயனார் மடம், திருமுருகன் பூண்டி.
42. ஸ்ரீமத் பராபர பண்டித குருசுவாமிகள், அலங்கியம் மடம்.
43. ஸ்ரீமத் இம்முடி அகோர தர்ம சிவாசார்ய பண்டித குருசுவாமிகள், நெரிஞ்சிப்பேட்டை மடம்.
44. ஸ்ரீமத் மெய்ஞான தேசிக பண்டித குருசுவாமிகள், சிறுகிணர் மடம்.
45. ஸ்ரீமத் விஸ்வநாத சைவபுடந்தர பண்டித குருசுவாமிகள், பவித்ரம் மடம்.
46. ஸ்ரீமத் உத்தம பண்டித குருசுவாமிகள், புலுவர் தீக்ஷாகுரு மடம்.
47. ஸ்ரீமத் தேவேந்திர சைவ புரந்திர பண்டித குருசுவாமிகள், புகழுர் மடம்.
48. ஸ்ரீமத் ஆலாலசுந்த பண்டித குருசுவாமிகள், செட்டிபாளையம் மடம்.
49. ஸ்ரீமத் ஏழுகரைநாட்டு நம்பி சதாசிவ பண்டித குருசுவாமிகள், திருசெங்கோடு மடம்.
50. ஸ்ரீமத் உத்தம பண்டித குருசுவாமிகள், காங்கேய மடம்.
51. ஸ்ரீமத் நவரத்னநாயக பண்டித குருசுவாமிகள், பவானி திருமடம்.
52. ஸ்ரீமத் வீகிர்தீவர வேதாந்த பண்டித குருசுவாமிகள், திருவெஞ்சமாக்கூடல் மடம்.
53. ஸ்ரீமத் ஆகம பண்டித குருசுவாமிகள், புத்தூர் மடம்.
54. ஸ்ரீமத் சிவஞான பண்டித குருசுவாமிகள், கரையூர் மடம்.
55. ஸ்ரீமத் குலோத்துங்க வேதநாயக பண்டித குருசுவாமிகள், திருச்செங்கோடு மடம்.

மேற்கண்ட சைவ ஆதிச்னங்கள் அக்காலங்களில் கொங்கூ நாட்டில் சைய சமயமும், பக்தி இயக்கமும் கிராமங்களில் சிறப்புற வளர்ந்திட தொண்டாற்றியுள்ளனர். சிவசம்ஸ்கார உடையராம் தன்மை ஆதிசைவர்களுக்கு ஜென்மத்திலேயே வந்த்தாகும். குருக்கள், சிவாசாரியார் என்பவை ஆதிசைவர்க்கே உரிய பட்டமாகும். ஆதிசைவர்களுக்கே ஆச்சாரியாத்துவம் சொந்த நிதி ஆதிசைவர்கள் ஸ்வயம்புவாக ஆசாரிய புருஷர்கள் எனவேதான் ஆகம பிராமணத்தாலும், உலக வழக்காலும் ‘குருக்கள்’ என அழைக்கப்பட்டு வருகின்றார்கள்.

குருவுக்குள்ள தர்மம் சிவபெருமானை காட்டுவது. அதன்படி, சைவ நன்மக்களுக்கு சிவதீக்ஷைகளை அவரவர் பக்குவத்திற்கு ஏற்றவாறு செய்து வைக்கும் ஆச்சார்ய அதிகாரம் ஆதிசைவர்களாகிய சிவாசாரியார்களுக்கு உள்ளது என்று ஆகமங்கள் கூறுகின்றன. அந்த வகையில், ஆதிசைவ சிவாசாரியார்கள் கடந்த காலங்களில் பல சைவ மடங்களையும் ஆகம மடங்களையும் தோற்றுவித்து குலகுருவாக, மடாதிபதிகளாக விளங்கி சைவ சமயத்தொண்டும் சிவப்பணியும் ஆற்றி வந்துள்ளார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடியும்.

ஆதிசைவர்களின் தமிழ்த் தொண்டு

"சைவமும் தமிழும் தழைத்தினி தோங்குக’ என்ற வாக்கிற்கேற்ப ஆதிசைவர்கள் சைவ சமயத்திற்கும் தமிழ் பக்தி இலக்கியங்களுக்கும் செய்த தொண்டு அளப்பரியதாகும்.
சங்க்காலம் தருமி என்ற ஆதிசைவர் பொற்கிழி பெறுவதற்காக, சங்கப்பலகை ஏறி நக்கீர்ரோடு வாதிட்டு சங்கப்புலவர்களுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்தார் சிவபெருமான்.
சைவ சமயத்தில் மையமான அறுபத்தி மூன்று நாயன்மார்களையும் அவர்கள் செய்த சிவத் தொண்டையும் இந்த உலகம் முழுவதும் அறியச் செய்தவர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சிவாமிகள். தாம் பாடியத் ‘திருத்தொண்டைத்தொகை தேவாரம்’ மூலம் அடியவர்களில் நாயன்மார்களில் பெருமைகளை உலகறியச் செய்த்தன் காரணமாக பக்தி இயக்கமும் சைவ சமயமும் புத்துயிர் பெற்றது. சுந்தரர் பாடியத் திருத்தொண்டத் தொகை தேவாரத்தின் காரணமாகவே, தமிழில் ‘பெரிய புராணம்’ எனும் அழகிய தமிழ் இலக்கியம் சேக்கிழாரால் பாடப் பெற்றது.
அதேபோல், திருநாரையூரில் அவதரித்த நம்பியாண்டார் நம்பி எனும் ஆதிசைவ குலத்தில் உதித்த சிறுவர்தான் பொல்லாப் பிள்ளையார் திருவருளால் தேவார திருமுறைகளைக் கண்டுபிடித்து மீட்டெடுத்து தந்து, தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் அளப்பரிய மிகப்பெரும் தொண்டினை செய்தார்.
கரையான் புற்றுகளால் செல்லரித்து அழியக்கூடிய நிலையில் இருந்த் தேவாரங்களை எல்லாம் கண்டுப்பிடித்துத் தந்த பெருமை நம்பியாண்டார் நம்பிகளையே சாரும். நம்பியாண்டார் நம்பி தேவார திருமுறைகளைக் கண்டு பிடித்த்தோடு அல்லாமல், அவைகளை முறைப்படி திருமுறைகளாகத் தொகுத்து சைவ சமயத்திற்கும் தமிழுக்கும் மிகப் பெரும் தொண்டு செய்தவர். நம்பியாண்டார் நம்பி இல்லையேல் இன்று தேவாரமும் இல்லை. திருமுறைகளும் இல்லை. சைவ உலகம் என்றென்றைக்கும் ஆதிசைவராகிய நம்பியாண்டார் நம்பிகளுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.
ஆகமங்களின் ஞானபாதமான சைவ சித்தாந்த தத்துவத்தை ‘சிவஞானசித்தியார்’ எனும் நூலாகப் பாடி தமிழுக்கும், சைவ சமயத்திற்கும் தனிப்பெரும் தொண்டு செய்தவர் ’சகலாகம பண்டிதர்’ என்று அழைக்கப்படும் அருள்ந்ந்தி சிவாசாரியார்.
சிவஞான சித்தியார் பெருமைக்கும் சிறப்புக்கும் அது பெற்ற ‘ஆர்’ என்ற அடைமொழியே போதுமானதாகும். சிவஞான சித்தியார் இல்லையேல் இன்று சைவ சித்தாந்த தத்துவத்தைத் புரிந்து கொள்வது கடினம். ஏனெனில் மெய்கண்டாரின் சிவஞானபோதம் சூத்திர வடிவில் சுருக்கமாக உள்ளதால், சைவசித்தாந்த தத்துவத்தை எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும்வகையில் பாடியுள்ளார். மேலும், அருள்ந்ந்தி சிவாசாரியார் ஆகமத்திற்காகவே தோன்றிய ஆதிசைவ மரபில் அவதரித்தவர் என்பதாலும், சகலாகம பண்டிதர் என்பதாலும், ஆகம தத்துவங்களை மிகச்சிறந்த முறையில் சிவஞான சித்தியாரில் கூறுயிருப்பார். எனவேதான், தருமை ஆதின குருமுதல்வர் குருஞானசம்பந்தர்.

பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே
ஓர் விருத்தப் பாதி போதும்’ என்று பாடியுள்ளார்.
தாயுமானவ சுவாமிகள்,
‘பாதிவிருத்தத்தால் இப்பார் முழுவதும் ஆக உண்மை
சாதித்தார் பொன்னடியைச் சாரும்நாள் எந்நாளோ?’
என்று சிவஞான சித்தியார் நூலை புகழ்ந்துரைப்பார்.
மேலும், பழமையான தமிழ் செய்யுள் பகுதி ஒன்று, தரமுயர்ந்த ஆறு தமிழ் நூல்களை வரிசைப்படுத்தி குறிப்பிட்டு, இவை தரமான தமிழ் நூல்கள் என்று புகழ்ந்து போற்றுகிறது. அப்பாடல் இதோ:
‘வள்ளுவர்சீர் அன்பர்மொழி வாசகம் தொல்காப்பியம்
தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை – ஒன்றிய சீர்த்
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராரும்
தண்டமிழின் மேலாம் தரம்

இப்பாடலில் திருவள்ளுவரிய திருக்குறள், மாணிக்கவாசகரின் திருவாசகம், தொல்காப்பியம், பரிமேலழகர் செய்த உரை, சேக்கிழார் பாடிய பெரிய புராணம் இவற்றொடு அருள்நந்தி சிவாசாரியார் பாடிய சிவஞான சித்தியாரையும் குறிப்பிட்டு புகழப்படுவதைக் காணமுடியும்.

சிவஞான சித்தியார் சாத்திரநூல் மட்டுமன்று. முழு அளவு இலக்கிய நூலாகவும் கொள்ளத்தக்கது. ஓரளவு தோத்திர நூலும் ஆகும். தொட்ட இடமெல்லாம் சாத்திரச் சிறப்போடு இலக்கியச் சிறப்பும் கமழும் என்பார்கள் தவத்திரு ஊரன் அடிகள் அவர்கள். சைவ சித்தாந்தக் கொள்கைகளில் தொண்ணூற்று ஐந்து விழுக்காடு சிவஞான சித்தியாரிலேயே உள்ளன. எனவேதான்,

‘சிவனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை
சித்தியார்க்குமிஞ்சிய சாத்திரமும் இல்லை’
என்ற பழமொழி ஏற்பட்டது.

இது ஒன்றே அருள்நந்தி சிவாசாரியாரின் பெருமையையும் அவர் செய்த தமிழ்த் தொண்டையும் பறை சாற்றும். இவ்வாறு போற்றப்படும் சிவஞான சித்தியார் எனும் அரிய நூல், ‘பரபக்கம், சுபக்கம் என்ற இரு பகுதிகளைக் கொண்டது. அடுத்து அருள்நந்தியார் ‘இருபா இருஃபது’ என்ற சைவ சித்தாந்த நூலும் இயற்றியுள்ளார்.

சைவ சித்தாந்த தத்துவத்திற்கும், தமிழுக்கும் ஆதிசைவர் அருள்நந்தி சிவாசாரியாரின் செய்திருக்கும் தொண்டும், ஞானப் பேருதவியும் பெரிதும் போற்றுதற்குரியதாகும். அதேபோல், சான்றோருடைத்த தொண்டை நாட்டில் காஞ்சி குமரக்கோட்டத்தின் அர்ச்சகர்காளத்தியப்ப சிவாசாரியார் திருமகனாக அவதரித்தவர் கச்சியப்ப சிவாசாரியார். ஆதிசைவ மரபில் வந்த கச்சியப்ப சிவாசாரியாரால் பாடப் பெற்றது கந்தப்புராணமாகும்.

கந்தர் புராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை’ –என்று பழமொழி எழும் அளவிற்கு பொருட்செறிவு கொண்ட்தாகவும், இலக்கிய வளம் செறிந்த நூலாகவும் பாடியுள்ளார் கச்சியப்ப சிவாசாரியார். ’கச்சியப்பன் செய்த கந்த புராணக் கலைக்கடல்’ –என்ற வாக்கே கச்சியப்ப சிவாசாரியாரின் பெருமையை உணர்த்தும்.

இனிய வடமொழி அமுதம் உண்டு தென்மொழி வாரம்
என்ற கடலைக் குடித்து ஓர்
இணையிலா உன்சரிதை கூறும் விலிகொண்டு, அன்பில்
ஏறும் ஒரு கச்சியப்பர்’
என்று ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கச்சியப்ப சிவாசாரியாரை போற்றிப் புகழ்கின்றார்.

கந்தபுராணம் மொத்தம் ஆறுகாண்டங்களைக் கொண்டு 10,345 செய்யுள்களைக் கொண்டது. கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணத்தை அரங்கேற்றி முடித்தபின், தொண்டை மண்டல வேளாளப் பிரபுக்கள் அவரை வணங்கி, தந்தப் பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று பெருமைப்படுத்தினர் என்பதை,
’அந்தப்புரமும் அறுநான்கு
கோட்ட்த் தாரும் ஒன்றாய்க்
கந்த புராணம் பதினா
யிரம் சொன்ன கச்சியப்பர்
தந்தப் பல்லக்கிச் சிவிகையும்
தாங்கிஅச் சந்நிதிக்கே
வந்தப் புராணம் அரங்கேற்றி
னார்தொண்டை மண்டலமே’
என்ற தொண்டை மண்டலச் சதகம் பாடல் மூலம் அறிய முடிகிறது.
மேலும், அனைத்து சைவசமய விழாக்களிலும், திருக்கோயில்களிலும் சைவசமய பக்தர்களால் அன்போடு வாழ்த்துப் பாடலாக பாடப் பெற்றுவரும்,
’வான்முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்ன்ன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்’
என்ற இப்பாடல் அருமையிலும் அருமையான வாழ்த்துப் பாடலாகும்.

தமிழின் இனிமையும், சைவ சமயத்தின் சிறப்பையும் எடுத்துக்கூறும் விதமாக, சைவ சமயத்திற்குக் கிடைத்த மணிமகுடமாக இந்த வாழ்த்துப்பாடல் விளங்குகின்றது. சைவ சமய அன்பர்கள் அனைவரையும் வசீகரித்து அன்போடு பாட வைக்கும் காரணம் ஒன்றே இதன் பெருமைக்கும், புகழுக்கும் சான்றாகும். இப்பாடல் ஒன்றே ஆதிசைவராகிய அருள்நந்தி சிவாசாரியாரின் வாக்கு

வன்மைக்கும் தமிழ்த் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக் காட்டாகும். பெரிய புராணத்திற்கு முதல் நூலாக திருத்தொண்டத் தொகையும், வகை நூலான திருத்தொண்டர் திருவந்தாதியை தந்தும், சைவ சமயத்திற்கும், தமிழ்மொழிக்கும் தோத்திரம் பாட ஸ்ரீ சுந்தரரையும், ஸ்ரீ நம்பியாண்டார் நம்பியையும், சாத்திரம் பாட ஸ்ரீ அருள்நந்தி சிவாசாரியாரையும், புராணம் பாட ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியாரையும் தந்துள்ள சிற்ப்பு புகழ்மிக்க மரபே ஆதிசைவ மரபாகும். ஆதிசைவர் மழவை மகாலிங்கையர் தமிழ்த் தொண்டு
19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த மிகப்பெரும் தமிழ் பண்டிதர் மழவை மகாலிங்கயர் ஆவார். அக்காலங்களில் மிகப்பெறும் தமிழ் வித்வானாக சென்னை பட்டினத்தில் சிறப்புற்று வாழ்ந்தவர். யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் அவர்கள், பார்சிவன் பாதிரியார் வேண்டுதலுக்கிணங்க பைபிளை தமிழில் மொழி பெயர்த்தார். அந்த மொழி பெயர்ப்பு சரியானதுதானா என்று பரிசோதித்துத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அன்றைய சென்னை கிருஸ்துவ சபை, மழவை மகாலிங்கையரிடம் ஒப்படைத்தது. மழவை மகாலிங்கையர் ஆறமுக நாஅவலரின் பைபிள் தமிழ்மொழி பெயர்ப்பை பரிசோதித்து, முற்றும் வாசித்தும், அதிலே பிழையில்லை யென்றும், வசன நடை நன்றாக இருக்கின்றது என்றும், இந்தப் பிரகாரம் அச்சிட்டு வெளியிட்த் தகுதியானது என்றும் இவர் சான்றளித்த பின்பே மேற்படி சபையால் நாவலரின் மொழி பெயர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆங்கிலேயர்களால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்லூரி, சென்னை பிரசிடென்சி காலேஜ் (மாநிலக் கல்லூரி) ஆகும். இக்கல்லூரியில் முதல் தமிழ் பேராசிரியராக விளங்கியவர் மழவை மகாலிங்கையர் ஆவார். இவரை தமிழ்த் தாத்தா உ.வெ.சா. அவர்கள் தமது நினைவி மஞ்சரி நூலில், ‘பிரசிடென்சி காலேஜில் ஆரம்பித்தில் தமிழாசிரியராக இருந்தவர் மகாலிங்கையரென்பவர். அவர் ஆதிசைவர். மழவராயனேந்தலென்னும் ஊரினர். அக்காலத்தில் இந்நகரில் (சென்னை) தமிழ் விஷயமாக எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் அவருடைய சம்பந்தம் இருக்கும்’ – என்று புகழ்ந்து கூறுகிறார்.

மேலும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தமது இள்மைப் பருவத்தில் (கி.பி. 1840-1842) சென்னை சென்றிருந்த பொழுது, சபாபதி முதலியார், திரு வேங்கடாசல முதலியார், திருவம்பலத் தின்னமுதம் பிள்ளையென்னும் மூவர் மூலமாக மழவை மகாலிங்கையர் சந்தித்ததையும், தமிழில் தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டுத் தெளித்துக்கொண்ட்தாகவும், தமிழ்த் தாத்தா உ.வெ.சா அவர்கள் தமது குருநாதரின் வரலாற்று நூலாகிய ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதி வருமாறு, “மழவை மகாலிங்கையரை அறியாதவர் யாவர்?” மதுரைக்குக் கிழக்கேயுள்ள மழவராயனேந்தலென்பது அவர் ஊர். அப்பெயரின் மரூ உவே மழவையென்பது. மகாலிங்கையர் திருத்தணிகை விசாகப் பெருமானையரிடத்தும், அவர் சகோதரர் சரவணப் பெருமாளையரிட்த்தும் தமிழ் நூல்களை முறையே பாடங்கேட்டவர். கேட்டவற்றை ஆராய்ந்து தெளிந்தவர்.

கம்பராமயணம், திருத்தணிகைப் புராணம் முதலிய பெருங்காப்பியங்களில் நல்ல பயிற்சி உள்ளவர். இலக்கண அறிவை விசேஷமாக பெற்றவர். அஞ்சாநெஞ்சினர். விரைந்து செய்யுள் செய்யும் ஆற்றலுடையவர், ஸங்கீத லோலர், சிநேக வாத்ஸல்ய சீலர், ஆதிசைவ குலதிலகர், தாண்டவராயத் தம்பிரானுக்கு உயிர்த் தோழர், பிற்காலத்தில் ஆறுமுகநாவலர் சென்னைக்கு வந்திருந்தபொழுது பலருடைய வேண்டுகோளுக்கு இணங்கி அவரெழுதிய பைபிள் தமிழ் வசன புத்தகத்தைப் பரிசோதித்தற்க்குத் தேர்ந்தண்டுக்கப் பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்நூலில்,
பிள்ளையவர்கள் அக்காலங் தொடங்கி மகாலிங்கையரோடு பழகுதலை மிகுதியாக வைத்துக்கொண்டு அவரிடல் நன்னூல் விருத்தியுரை, காரிகையுரை, தண்டியலங்காரவுரை, நாற்கவிராச நம்பியகப்பொருளுரை முதலியவற்றிலும், பிறவற்றிலும், தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டுத் தெளிந்து அதுவரை தமக்கு அகப்படாமல் இருந்த்தாகிய இலக்கணக் கொத்துரையையும் அவர்பால் பாடங்கேட்டனர்’ – என்று குறிப்பிடுக்கின்றார்.

இத்தகைய மிகப்பெறும் புகழைப் பெற்று தமிழ் வித்வானாக விளங்கிய மழவை மகாலிங்கையர் ஓர் ஆதிசைவர் என்றும் ஆதிசைவ குலத்தில் தோன்றியவர் என்றும் தமிழ்த் தாத்தா உ.வெ.சா குறிப்பிட்டுள்ளது ஆதிசைவர்களுக்கு மிகப் பெரும் பெருமையாகும்.

மழவை மகாலிங்கையர் சிறுவர்களுக்கு உபயோகமாகும்படி, வசன நடையில் ஓர் இலக்கண நூல் எழுதியுள்ளார். கி.பி. 1847 –ல் முத்ல்முதலாக ‘தொல்காப்பியம் எழுத்ததிகாரம்’, ‘நச்சினார்க்கினியர் உரையை’ பதிப்பித்துள்ளார். ‘மழவை சிங்கார சதகம்’ முதலிய பல தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். இவ்வாறு பல தமிழ்தொண்டுகளை செய்துள்ளார்.

இவ்வாறு, ஆதிசைவர் மழவை மகாலிங்கையர் தமிழ்த்தொண்டினை போல, சைவமும் தமிழும் தழைக்க, முப்போது திருமேனி தீண்டும் ஆதிசைவ மரபில் தோன்றி, தமிழ்த் தொண்டும் சிவத்தொண்டும் செய்த ஆதிசைவர்களின் பெருமையை என்றென்றும் மறவாது போற்றுவோம்.

 

ஆதிசைவர்களின் சிறப்பு பெயர்கள்

ஆதிசைவர்கள் சைவ சமய பக்தி இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் பல சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுக்கிறார்கள்.
1. சிவவேதியர் – சிவபெருமானை முழு முதற் கடவுளாக வழிபடும் வேதியன் என்பதால் சிவவேதியர் என்று பெயர்.
2. ஆதிசைவர் – இப்பூலகில் தோன்றிய முதல் சைவர் என்பதால் ஆதிசைவர் என்று பெயர்.
3. குருக்கள் – சைவர்களுக்கு ஆகமவிதிப்படி சிவதீக்ஷை அளித்து நல்வழிப்படுத்தும் குருமார்களாக விளங்குவதால் ‘குருக்கள்’ என்று பெயர்.
4. சிவாசாரியார் – சிவபெருமானால் அருளப்பட்ட ஆகமங்களை தெளிவுறக் கற்று, ஆகமவிதிப்படி விசேஷ பூஜைகளை சிவபிரானுக்குச் செய்யும் ஆச்சாரியார் என்பதால் ‘சிவாசாரியார்’ என்று பெயர்.
5. சிவமறையோர் – மறைகளாகிய வேத ஆகமங்களைக் கொண்டு சிவபிரானை அர்ச்சிப்பதால் ‘சிவமறையோர்’ என்று பெயர்.
6. சைவ அந்தணர் – சைவ சமய நெறியில் வாழும், சைவ சமய நெறிகளை கடைபிடிக்கும் அந்தணர் என்பதால் ‘சைவ அந்தணர்’ என்று பெயர்.
7. பட்டர் – பட்டன் என்றால் குரு என்று பொருள் ‘ஆலநிழல் பட்டனே’ என்பது திருமுறை வாக்கு. பட்டறிவு உடையவன். ஆகமங்களை தான் உணர்த்துவதால் ‘பட்டன்’ என்று பெயர்.
8. தொழுகுலத்தோர் - உலகநலன் பொருட்டும், பிறர் நலன் பொருட்டும் இறைவனை ஆலயத்தில் தொழுது வழிபாடு செய்பவர்கள் என்பதால் ‘தொழுகுலத்தோர்’ என்று பெயர்.
9. நம்பியார் – ஆதிசைவர்களின் மரபு பெயர். பூர்வக குடிகள் என்பது இதன் பொருளாகும். நம்பி + ஆரூரர் = நம்பியாரூரர் என்பது சுந்தரரின் இயற் பெயர். நம்பியாண்டார் நம்பி என்பவற்றைக் காண்க.
10. நாயனார் – ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் மரபில் வந்தவர்கள் என்பதால் ‘நாயனார்’ என்று பெயர்.
11. சிவப்பிராமணன் – சிவபெருமானின் திருமுகத்தில் தோன்றிய பிராமணன். சிவபிரானை அர்ச்சித்து வழிபடும் பிராமணன் என்பதால் ‘சிவபிராமணன்’ என்று பெயர்.
12. ஆகம அந்தணர் – ஆகமங்களை பிராமணமாக்க் கொண்ட அந்தணர், ஆகமங்களை பிரதானமாக்க் கற்கும் அந்தணர் என்பதால் ‘ஆகம அந்தணர்’ என்று பெயர்.
13. கோயிற்பிராணன் – கோயில் பூஜையைத் தவிர்த்து வேறு எத்தொழிலும் செய்யாதவர் என்பதால் ‘கோயிற்பிராமணன்’ என்று பெயர்.
14. உரிமையிற் தொழுவார் – சிவபிரானிடம் ஆதிசைவர்களுக்கே முதல் உரிமை உள்ளதால் உரிமை கொண்டு வழிபடுவதன் காரணத்தால் ‘ உரிமையிற் தொழுவார்’ என்று பெயர்.
15. அகத்தடிமை அந்தணன் – அகம் எனும் கருவறையில் பூஜை (அடிமை) புரிமை அந்தணன் என்பதால் ‘அகத்தடிமை அந்தணர்’ என்று பெயர்.
16. அரன் மறையோர் – அரனாகிய சிவபெருமானை வேத ஆகம மறைகளில் கூறியுள்ள விதிப்படி அர்ச்சிக்கும் மறையவர்கள் என்பதால் ‘அரன் மறையோர்’ என்று பெயர்.
17. அணுக்கத்தொண்டர் - சிவபெருமானுக்கு அணுக்கமாக நெருங்கி தொண்டு புரிவதால் ‘அணுக்கத்தொண்டர்’ என்று பெயர். ஆதிசைவர்களாகிய சிவாசாரியார்களை முதன்மையாகக் குறிக்கும் பெயர்.
18. தேசிகர் – தேசிகர் என்றால் குரு என்று பொருள். சைவ மரபில் தேசிகர் என்ற சொல் முதன்மையாக சிவாசாரியார்களைக் குறிக்கும்.
19. மாகேஸ்வரர்கள் – ஆதிசைவ அர்ச்சகர்களுக்கு ‘மாகேஸ்வரர்கள்’ என்று பெயர்.
20. ஆசாரியன் – சைவ மரபில் ஆசாரியன் என்பது ஆகமம் அறிந்த ஆதிசைவ சிவாசாரியார்களைக் குறிக்கும் பெயர்.
பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான், ஆதிசைவ சிவாசாரியார்களை சிவவேதியர், சைவ அந்தணர், சிவமறையோர் என்று குறிப்பதோடு அல்லாமல்,
ஆசிலந்தணர் – குற்றமிலா அந்தணர் என்றும்,
செல்வமறையோர் – சிவனருளை முழுவதும் பெற்ற மறையவர்கள் என்றும்,
மாசிலாமறையோர் – சிவத்தூய்மை உடைய மறையவர்கள் என்றும்,

அன்பில் வரும் குல மறையோர் – சிவபிரானுக்கு அன்பினாலே வழி வழி அடிமை செய்யும் குலத்தாராகிய சிவ்வேதியர் என்றும் போற்றிப் புகழ்ந்துள்ளார். பொதுவாக சோழர்கால கல்வெட்டுகளில் சிவாசாரியார்களை ‘சிவப்பிராமணர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளனர். அர்ச்சகர்களை குறிக்கும் இடங்களில் பெரும்பாலும் நம்பி, பட்டர், பட்டஸ்ய என்று காணப்படுகிறது.

பாண்டிய மண்டலத்திலும், மதுரையைச் சார்ந்த சிவாசாரியார்களும் தம்மை ”பட்டர்” என்று அழைத்துக் கொள்கிறார்கள். மற்றபடி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆதிசைவர்களை, குருக்கள் என்றும், சிவாசாரியார்கள் என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது.
ஸ்ரீ சுந்தரரின் ஆன்மார்த்த ஸ்தலமாகிய திருவாரூரில் ஸ்ரீ தியாகராஜரை பூஜிக்கும் ஆதிசைவர்கள் ”நயனார்” என்றும், “பிரமராயர்” என்றும் அழைக்கப்படுகின்றனர்.

திருவாரூர் ஸ்ரீ சுந்தரரின் ஆன்மார்த்த தலம் என்பதாலும், திருவாரூர், ஸ்ரீ சுந்தரரின் தாயார் இசை ஞானியார் அவதரித்த தலம் என்பதாலும் அங்கு பூஜிக்கும் ஆதிசைவர்கள் தாங்கள் சுந்தரர் மரபில் வந்தவர்கள் என்ற முறையில் நயனார் பட்டம் பெற்றுள்ளனர். நாயனார் என்பதே நாயனார் என்று மருவியுள்ளது.

மேலும், தில்லை அந்தண்ர்களுக்கு சிதம்பரம் நடராஜர் ஆலயம் எவ்வாறு உரிமையுடையாதாக உள்ளதோ, அதுபோல, ஆதிசைவர்களாகிய சிவாசாரியார்களுக்கு உரிமையுடைய கோயிலாக திருவாரூர் தியாகராஜர் கோயில் இருந்ததாகத் தெரிய வருகிறது. பூஜை முதல் பராக், கட்டியம், திருவாசல், சீர்பாதம், பொற்பண்டாரி என அனைத்துப் பணிகளையும் ஆதிசைவர்களே மேற்கொண்ட்தாகவும் தெரிய வருகிறது.

இதே போன்று, திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவர் ஆலயத்தில் பூஜை செய்யும் ஆதிசைவர்கள் ‘நம்பியார்’ என்று அழைக்கப்படுகிறார்கள். திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பனை முப்பொழுதும் தீண்டி பூஜித்து வரும் ஆதிசைவர்களை ‘காணிவட்டத்தார்’ என்று அழைக்கும் மரபு பண்டையகாலத்தில் இருந்து வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெரிய சிவாலயங்களிலும் அர்ச்சகம், ஸ்தானிகம் என்ற பெயரில் சிவாகம விதிப்படி பூஜைகளை ஆதிசைவர்கள் செய்து வருகிறார்கள்.
மேலும், ஆகமங்கள், ஒவ்வொரு சிவாலயத்திலும் ஐந்து நிலைகளில் ஆதிசைவர்களை நியமிக்கக் கூறகிறது. இந்த ஐந்து ஆதிசைவர்களும் பஞ்சாச்சாரியார்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

1. ஆச்சாரியார் : ஆகமங்களை கற்றுணர்ந்து நைமித்திகம் அதாவது விசேஷ பூஜைகளைச் செய்பவர். இவரே சிவாசாரியார் ஆவார்.

2. அர்ச்சகர் : நித்ய பூஜைகளை மட்டும் செய்பவர்.

3. ஸாதகர் : ஆகமத்தில் கூறப்பட்டுள்ளபடி பூஜைக்கு வேண்டிய பொருள்களைச் சேர்த்து வைத்து உதவுபவர்.

4.அலங்கிருதர் : இறைவனுக்கு அலங்காரம் செய்பவர்.

5. வாசகர் : வேத ஆகமங்களை, திருமுறைகளை ஓதுபவர்.

இந்தமுறையில், ஆதிசைவர்களாகிய பஞ்சாச்சாரியர்களுக்கும் தொண்டினை சிவாகமம் வகுத்துள்ளது. இந்த, பஞ்சாச்சாரியர்கள் பற்றிய செய்தி கூறும் கல்வெட்டு ஒன்று திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி கோயில் 2ம் பிரகாரம் வடபுறச் சுவரில் உள்ளது. இக்கல்வெட்டை மனுச்சரிதங்கண்ட கல்வெட்டு என்பர். இதில், ’ஸ்ரீகாரியம் சுப்பிரமங்கலமுடையான் மாதவன் இரவியானமாலையை மூவேந்த வேளார் விண்ணப்பத்தினால்’ பதிபாதமூலப்பட்டுடை பஞ்சாசாரிய தேவகன்மிகளுக்கும் கோயிலார்க்கும்…-என்று கூறப்பட்டுள்ளது.இவ்வாறு கோயில் பூஜை புரியும் ஆதிசைவர்களுக்கும், சைவ சமயத்திற்கும் சிவபெருமானுக்கும் உள்ள தொடர்பைச் சிறப்பித்துப் பொற்றும்வகையில் கெளரவப்படுத்தி ஆதிசைவர்களை பல பெயர்களில் அழைக்கும் பழக்கம் பண்டை சைவ இலக்கியங்களிலும், தமிழகத்திலும் இருந்து வந்துள்ளதை நாம் அறிந்துகொள்ள முடியும். இதன்மூலம், பல பெயர்களில் ஆதிசைவர்கள் அழைக்கப்படுவதைக் கொண்டு ஆதிசைவர்களின் பெருமைகளையும், சிறப்புகளையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்.

 

ஆலய பூஜைகள் ஆதிசைவர்களுக்கே உரிமையானது

சிவாகமங்களில் இரண்டுவித பூஜைகள் கூறப்பட்டுள்ளன.

  1. ஆத்மார்த்த பூஜை : இப்பூஜையை சிவதீக்ஷை பெற்ற ஓருவர் தன்நலன் கருதி தனது இல்லத்தில் செய்வது ஆகும்.
  2. பரார்த்த பூஜை : இது உலக நலன் கருதி மக்களின் நன்மைக்காக பொது நலன் கருதி, ஆகம விதிப்படி திருக்கோயில்களில் செய்யப்படும் பூஜையாகும்.

கிராமத்திலோ, நகரத்திலோ, வனங்களிலோ, மலைகளிலோ, நதிதீரம் (அ) சமுத்திர தீரங்களிலோ உள்ள ஆலயத்தில் இருக்கும் தெய்வ மூர்த்திகளை ஆகமவிதிப்படி மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலத்தில் தோன்றிய ஆதிசைவ சிவாசாரியார்களைக் கொண்டு பூஜிப்பது பரார்த்த பூஜையாகும்.

பரார்த்த பூஜை முன்று வகைப்படும்

  1. நித்ய பூஜை : திருக்கோயில்களில் நாள்தோறும் செய்யப்படும் பூஜையாகும்.
  2. நைமித்திக பூஜை : திருக்கோயில்களில் மாதந்தோறும் நடைபெறும் விசேஷ பூஜைகள் மற்றும் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் போன்றவைகளாகும்.
  3. காம்ய பூஜை : திருக்கோயில்களில் பக்தர்களின் வேண்டுதல்களில் படியும்,விருப்பத்தின்படியும் செய்யப்படும் பூஜையாகும்.

இதில் பரார்த்த பூஜை என்று அழைக்கப்படும். கோயில்களில் செய்யப்படும் ஆலய பூஜையை வழிவழியாகச் செய்யும் உரிமை ஆதிசைவர்களுக்கே உள்ளது. இதனை, சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்தில்,

       ’தெரிந்துணரின் முப்போதுஞ் செல்காலம் நிகழ்காலம்

       வருங்கால மானவற்றின் வழிவழியே திருதொண்டில்

       விரும்பிய அர்ச்சனைகள் சிவ்வேதியர்க்கே உரியன

       அப்பெருந்தகையார் குலபெருமையாம் புகழும்

       பெற்றியதோ’

என்று பாடிகிறார்.

அதாவது சிவாலய பூஜைகள் ஆதிசைவ சிவாசார்யார்களுக்கே உரிமையுடையது என்பதை ‘அர்ச்சனைகள் சிவ்வேதியர்க்கே உரியன’ என்று ஏகாரம் இட்டு சேக்கிழார் வலியுறுத்துகிறார். மேலும், செல்காலம், நிகழ்காலம், வருங்காலம் என்று பிரித்துக் கூறி எக்காலத்திலும் வாழையடி வாழையாக ஆதிசைவ சிவாசாரியார்களுக்கே பூஜைகள் செய்யும் உரிமை உண்டு எனவும் உறுதிபடக் கூறுக்கிறார்.

மேலும், ‘சைவ சமய நெறி’ என்னும் நூலில் ஸ்ரீ மறைஞானசம்பந்தர்,

     ’சிவன் முகத்திலே மேலும், ‘சைவ சமய நெறி’ என்னும் நூலில் ஸ்ரீ மறைஞானசம்பந்தர்,

     ’சிவன் முகத்திலே யுதித்த விப்ரசைவர்

       இவரே யருச்சனைக் கென்றென்’ (பாடல் – 435)

என்று பாடியுள்ளார். அதாவது சிவன் முகத்தில் தோன்றிய விப்ர சைவர்களுக்கே (ஆதிசைவர்களே) அர்ச்சனை செய்யும் உரிமை உண்டு என்கிறார். மேலும், ஸ்ரீ மறைஞானசம்பந்தர் அதே நூலில்,

     ’அயன் முகத்தில் தோன்றிய அந்தணர் அர்ச்சித்துப்

       பயனடைதற் இட்டலிங்கம் பாங்கு’ – என்று பாடுகிறார்.

அதாவது பிரம்மனின் முகத்தில் தொன்றிய பிராமணர்கள் மற்றும் அடியார்கள் உள்ளிட்ட மற்றவர்கள் ஆத்மார்த்த பூஜை செய்யவே உரிமை உண்டு. இவர்களுக்கு கோயில்களில் பூஜை செய்யவோ, கும்பாபிஷேகம், உத்ஸவங்கள் போன்ற விசேஷங்கள் செய்யவோ உரிமை இல்லை என்று பாடியுள்ளார்.

இதன்மூலம், சிவன் முகத்தில் தோன்றிய ஆதிசைவர்களே ஆலய பூஜைகள், கும்பாபிஷேகம் முதலியன செய்ய உரிமையுடையவர் என்பதை மறைஞானசம்பந்தர் உறுதியாகக் கூறுவதை காணலாம்.

இவ்வாறு, ஆதிசைவ சிவாசாரியாரைக் கொண்டு சிவபூஜை, கும்பாபிஷேகம், உத்ஸவங்கள் செய்யாமல் பிராமணர்கள் உள்ளிட்ட மற்றவர்களைக்கொண்டு செய்தால் ஏற்படும் பாதிப்புகளை திருமூலர் தாம் அருளிய திருமந்திரத்தில்,

     ’பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்

       போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

       பார் கொண்ட நாட்டுக்குப்  பஞ்சமுமாம் என்றே

       சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே’ என்று பாடியுள்ளார்.

அதாவது, சிவபெருமானால் அருள்ப்பட்ட சிவாகம மந்திரங்களை அறிந்த ஆதிசைவ சிவாசாரியாரை தவிர்த்து, மற்றவர்களைக் கொண்டு சிவாலய பூஜைகள், கும்பாபிஷேக கிரியைகள் செய்தால், நாட்டின் அரசன் வலிமை இழப்பான். நாட்டில் மழை வற்றும். பஞ்சம் ஏற்படும் என்று எங்கள் அருளாசிரியர் நந்தியம் பெருமான் உரைத்ததாக நாயன்மாரும், முழு முதற் சித்தருமாகிய திருமூலர் கூறிகிறார்.

எனவே சிவாகமம் அறிந்த ஆதிசைவ சிவாசாரியார் செய்யும் பூஜையே நலத்தையும், வளத்தையும் கொடுக்கும் என்பது இதன் உட்பொருளாகும். ஆகமங்களும் மேற்கண்ட கருத்துக்களையே வலியுறுத்துகின்றன.

மகுடாகமத்தில்,

     ’விப்ரக்ஷதரிய விட்சுத்ர: திக்ஷீதாஞ்ச ப்ரவேசகா:

       ஆத்மார்த்தயஜனம் குர்யு: ந குர்யஸ்து ப்ரார்த்தகம்’ – என்று கூறுப்பட்டுள்ளது.

அதாவது பிராமணர், அரசர், வணிகம், வேளாளர்கள் ஆகியோர் சிவதீக்ஷை பெற்று ஆத்மார்த்த பூஜை செய்யவே அதிகாரம் உண்டு. திருக்கோயில்களில் பூஜை, கும்பாபிஷேகம், உத்ஸவ விழாக்கள் செய்ய அதிகாரம் இல்லை என்று ஆகமம் கூறுகிறது. இதன்முலம் பிராம்மணரும், தீக்ஷை பெற்ற அடியார்களும் கோயில்களில் பூஜை, கும்பாபிஷேகம் செய்யக் கூடாது என்பது ஆகம முடிவாகும்.

திருவிளையாடல் புராணம், இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலத்தில், சோமவாரவிரத மகிமை கூறுப்பட்டுள்ளது. அதில், ”சிவபெருமானை தீண்டி பூஜிக்கும் அருகரல்லாத வேத அந்தணர் மற்றும் தீக்ஷை பெற்ற சைவர்கள் இட்டலிங்கம் எனும் ஆன்மார்த்த லிங்கத்தை பூஜை செய்து சோமவாரவிரதம் செய்க என்றும், ஆன்மார்த்த பூஜைக்கு உரிமையில்லாதவர் சிவபிராமணராகிய ஆதிசைவரைக் கொண்டு பூஜை செய்வித்து இவ்விரதம் கொள்க”  என்றும் கூறப்பட்டுள்ளது.

     ’ஆதியில் விலிங்கந் தீண்டற் கருகரல்லாத வேத

       வேதியர் முதலோ ரிட்ட விலிங்த்தில் விதியாலர்ச்சித்

       தோதிய விரத நோற்க வர்ச்சனைக்குரிய ரல்லாச்

       சாதியர் பொருணேர்ந்து ஆதிசைவராற் பூசை செய்தல்’

இதிலிருந்து வேத பிராமணர், மற்றும் தீக்ஷை பெற்ற சைவர்கள் யாவரும் ஆன்மார்த்த பூஜை செய்யலாமேயொழிய திருக்கோயிலில் லிங்கத்தைத் தீண்டி பூஜை செய்தல் கூடாது என்பது அர்த்தமாகிறது. ஆதிசைவ சிவாசாரியார்கள் பிராமணர் உள்ளிட்ட நான்கு பிரிவினர்களில் ஒருவரா என்றால் இல்லை என்பதாகும். ஏனெனில் ஸ்மார்த்த வழிவந்த வைதீக பிராமணர்கள் வேறு, ஆகம வழிவந்த ஆதிசைவ சிவசாரியார்கள் என்பவர்கள் வேறு.

வேத பிராமணர் பிராம்மனின் முகத்தில் தோன்றியவர்கள். ஆதிசைவ சிவாசாரியார்கள் சிவசிருஷ்டியாளர்கள். அதாவது, சிவபெருமானின் திருமுகத்திலிருந்து உதித்தவர்கள். எனவேதான், சிவபெருமானின் திருமுகத்தில் தோன்றிய ஆதிசைவ சிவசாரியார்களே திருக்கோயிலில் பூஜைகள், கும்பாபிஷேகம் ஆகியவை செய்ய வேண்டும் என்பது ஆகம விதியாகும்.

மேலும், பொருளாசை காரணமாகவோ, அல்லது துவெஷம் காரணமாகவோ, பிராமணர், அடியார் உள்ளிட்ட மற்றவர்கள் கோயில்களில் சிவத்தை தீண்டுவதாலும், பூசிப்பதாலும் அதைச் செய்வோர், செய்விப்போர் இருவருக்கும் தேவலோகத்துவ தோஷம் பிடிக்கும். மீறி செய்வாராயின் அவ்விடத்து அரசருக்கும் பொது மக்களுக்கும் கெடுதி உண்டாகும். அதுவும் ஆகம விதியை மீறினவன் அவன்மட்டுமன்றி அவனுடைய இருபத்தோரு வம்சமும் வம்சாவளியும் தீராத கோர நரகத்துக்கு உள்ளாவார்கள் என்று ஆகமம் சொல்கிறது.

மேலும், ”ரெளரவாகமம்” ,

     ’ஆதிசைவனே கர்த்தாவ்யம் ஆத்மார்த்த ச பரார்த்தகம்’

என்றுரைக்கிறது.

அதாவது, ஆதிசைவனே தன் அளவில் ஆத்மார்த்த பூஜையும், திருக்கோயில்களில் பரார்த்த பூஜையும் செய்ய வேண்டியவர், உரிமை உடையவர் என்று ஆகமம் கூறுகின்றது.

மேலும், ”காமிகாமம்” ,

        ’ஆதிசைவ குலெஜாத: ஸ்ரேஷ்டஸ்யாது ஸ்தாப நாதிஷு’

என்கிறது.

அதாவது, ஆதிசைவ சிவாசாரியார்களே பிரதிஷ்டை கும்பாபிஷேக கிரியைகள் செய்ய வேண்டும் என்று உறுதிபட காமிகாமம் கூறுகின்றது.

மேலும், ”சுப்ரபேத ஆகம’த்தில்,

     ’திக்ஷிதானாம் த்விஜாதீனாம் ஆத்மார்த்த மனு லோமினாம்

       பரார்த்தம் ஆதிசைவானாம் ஆத்மார்த்த ஸஹிதம் பவேத்’

அதாவது, சிவதீஷை பெற்ற பிராமணர், அடியார் உள்ளிட்ட அனைவரும் ஆத்மார்த்த பூஜை மட்டுமே செய்யலாம். ஆதிசைவர்களே ஆத்மார்த்த பூஜை, பரார்த்த பூஜை என இரண்டும் செய்ய உரிமை உடையவர்கள் என்று அர்த்தமாகும்.

திருநாகைக்காரோணம் புராணத்தில், திருவாவடுதுறை ஆதினம் மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், ‘ பெருமறை உடன் ஆகமம் முழுதுணர்ந்தார் ‘ என்னும் பாடலில், ஆதிசைவர்கள் சிவபெருமான் திருமுகத்தில் அவதரித்தவர்கள் என்றும், ஆன்மார்த்தம், பரார்த்தம் என்ற இருபூஜைகளும் செய்யும் பூரண உரிமை உடையவர்கள் என்றும் பாடியுள்ளார்.

இதே கருத்தையே காளையார் கோயிற் புராணம்,

     ”பொதுமையுஞ்சிறப்புமென்னப் புராதனன் புகன்றவாய்மை

       முதுமறையாக மங்கண் முழுதுமோர்ந்தென்றும் பூசை

       பதியுமான்மார்த்தத்தொடு பரார்த்தத்தும்புரி இத்தலைக்கோர்

       மதிபெறும் ஆதிசைவர் “ –என்றும்,

திருப்பெருந்துறைப் புராணம்,

     ’மறையுடனாகம்முணர்ந்த மாட்சியர்

       பொறையொடான் மார்த்த பரார்த்த போற்றுவார்

       அறைபெறும் புகழ்மிகும் ஆதிசைவர்’  - என்றும்,

கண்ட்தேவிப் புராணத்தில், ‘எண்ணில்வேதாக மங்களைய’ என்னும் பாடலும், திருக்குடந்தைப் புராணம், ‘வெள்ளியங்கயிலை விமலனார் மொழிந்த’ என்ற பாடலும் வலியுறுத்துகின்றன.

ஆதிசைவர்களாகிய சிவாசாரியார்கள் ஆன்மார்த்தம், பரார்த்தம் என்ற இரு விதத்திலும் சிவபெருமானை பூஜிக்கும் உரிமை பெற்றவர்கள் என்று மேற்கண்ட அத்தனை தலப்புராண பாடல்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன.

திருக்கோயில்களில் சிவலிங்கத் திருமேனியைத் தீண்டி பூஜித்து வழிபடும் உரிமை ஆதிசைவருக்கே உரியது. இதனை ஸ்ரீ சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகை தேவாரத்தில், ’முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்க்கும் அடியேன்’ என்று பாடியுள்ளார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்தில்,

     ”எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து

       மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே

       அப்போதைக் கப்போதும் ஆர்வமிகும் அன்பினராய்

       முப்போதும் அர்ச்சிப்பார் முதற் சைவராம் முனிவர்”

என்கிறார்.

மேற்படி பாடலில் சேக்கிழார் பெருமான் ஆதிசைவரை முதற்சைவர் என்று குறிப்பிடுவது முக்கியத்துவம் பெறுகிறது.

அகத்தடிமைப் பணி (அ) அகம்படித்திருத்தொண்டு

அகத்தடிமைப் பணி (அ) அகம்படித் திருத்தொண்டு என்பது கருவறையில் சிவபெருமானைத் தீண்டி பூஜிக்கும் செயலைக் குறிப்பதாகும். ஆதிசைவருக்கே லிங்க திருமேனியை  தீண்டி பூஜிக்கும் உரிமையை சைவசமயம் அளித்துள்ளது.

ஆதிசைவராகிய புகழ்த்துணை நாயனாரை பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான்,

     ”செருவிலிபுத் தூர்மன்னுஞ் சிவமறையோர் திருக்குலத்தோர்

       அருவரைவில் லாளி தனக்கு அகத்தடிமை யாம்தனக்கு

       ஒருவர்தமை நிகரில்லார் உலகத்துப் பரந்தோங்கிப்

       பொருவாரிய புகழ்நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார்”.

என்ற பாடியுள்ளார்.

திருத்தொண்டர் புராணம் சாரத்தில் உமாபதி சிவாசாரியார்,

     ”புண்ணியர்கள் புகழ் அழகார் திருப்பத்தூர்வாழ்

       புகழ்ந்துணையார் அகத்தடிமை புனிதர்” என்று பாடியுள்ளார்.

ஸ்ரீசுந்தரர் தமது தேவாரத்தில் புகழ்துணை நாயனாரை பற்றிப் பாடும் பொழுது,

     ’அகத்தடிமை செய்யும் அந்தணர் தான் அரி

              சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்,

       மிகத்தளர் வெய்திக் குட்த்தையும் நும்முடி

              மேல்விழுந் திட்டு நடுங்குதலும்

       வகுத்தவ னுக்கு நித்தற் படியும்

              வரும்என் றொருகாசினை நின்ற நன்றிப்

       புகழ்த்துணை கைப்புகச் செய்து கந்தீர்

              பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனிரே’  -என்று பாடியுள்ளார்.

இவ்வாறு, தேவார திருமுறைகளில் ஆதிசைவராகிய புகழ்துணை நாயனாரைப் பற்றி பாடியருளும் பொழுது மட்டுமே அகத்தடிமை பணியை, அகத்தடிமை திருத்தொண்டு பற்றி பாடப்பட்டிருப்பதன் மூலம் ஆதிசைவர்களுக்கே கருவரை சென்று பூஜைகள், கும்பாபிஷேகம், உற்சவங்கள் செய்யும் உரிமை உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

சிவாகமம் அறிந்த ஆதிசைவ சிவாசாரியாரைக் கொண்டு செய்யும் பூஜைகள், கும்பாபிஷேகங்கள் மூலமே, அதைச் செய்தோர், செய்வித்தோர் இருவரும் சுப பலனையும், சிவ புண்ணியத்தையும் முழுமையாக அடைய முடியும். உலகத்திற்கு நன்மை உண்டாக்கும். நீர்வளம், நிலவளம் முதலியன செழுமையுடன் விளங்கும், காரண ஆகமமும்,

‘ஆதிசைவஸ்ய பூஜாம் ஸர்வஸித்திகரம் ஸ்மருதம்’ என்று கூறுகின்றது

அதாவது, ஆதிசைவர்கள் செய்யும் பூஜைகள் உலகத்துக்கு நலத்தையும், வளத்தையும், கீர்த்தியையும், பயனையும் தருவதாகும் என்பது இதன் உட்பொருளாகும்.

திருவாவடுதுறை ஆதினம் மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் தாம் பாடிய ’சிவாலய தரிசன விதி’யில், ஆதிசைவர்களைக் கொண்டே ஆலய்த்தில் வழிபாடு செய்யவேண்டும் என்பதை,

’இருகரங் குவித்துட் புக்காங் கிலங்க நின்றாடு மையர்

பொருவில் குஞ்சிதத்தாள் போற்றிப் புண்ணியச் சிவபிரான்முன்

மருவியங் காதிசைவன் மலர்க்கையி ன்னைத்து நல்கி

யொருவற வனையான் செய்யும் உபசாரம் அனைத்து நோக்கி’

என்று பாடியுள்ளார்.

சைவ சித்தாந்த தத்துவத்தில் ஒரு பொருளை நிரூபணம் செய்ய மூன்று நிலைகளைக் கொண்டு ஆராயப்படும். அவை,

  1. காட்சி (பிரத்யட்ச பிரமாணம்)
  2. கருதல் (அனுமானப் பிரமாணம்)
  3. உரை (ஆகமப் பிரமாணம்)

இந்த மூன்று நிலைகளில், ஆஅதிசைவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பரார்த்த பூஜைக்கு அருகரல்லர் என விதித்த நூல் வழக்காலும்,

வழிபடும் ஏனையோரைக் காட்டிலும் மூர்த்தியைத் தீண்டி வழிபாடு செய்வார் உயர்ந்தவராதல் வேண்டுமெனக் கருதலளவையாலும்,

தாம் கொடுக்கும் திருநீற்றை யாவரும் இருகரங்களையும் நீட்டி ஏற்கக் காணும் காட்சி அளவையாலும்,

ஆதிசைவ சிவாசாரியார்களுக்கே பரார்த்த பூஜை, கும்பாபிஷேகம் போன்ற கிரியைகள் செய்ய பூரண உரிமை உள்ளது என்பது தெரியவரும்.

சிவபெருமான் விரும்புவது ஆகம பூஜைகளையே. எனவேதான் சிவபெருமான் தனது திருமுகங்களில் இருந்து ஆகமங்களை உபதேகம் செய்து, அந்த ஆகம விதிப்படி பூஜைகளைச் செய்ய, தனது திருமுகத்திலிருந்தே ஆதிசைவர்களைத் தோற்றுவித்து தம் திருமேனியைத் தீண்டும் அதிகாரத்தை சிவவேதியர்களாகிய ஆதிசைவ குலத்திற்கே தந்துள்ளார்.

எனவே, ஆதிசைவ சிவாசாரியார்களைக் கொண்டே ஆகம விதிப்படி ஆலங்களில் பூஜைகள், விழாக்கள், கும்பாபிஷேகங்கள் போன்றவை செய்யப்படவேண்டும். இதை எல்லாம் உணர்ந்தே பண்டைய அரசர்கள், முப்போதும் திருமேனி தீண்டுவாராகிய ஆதிசைவ சிவாசாரியார்களுக்கு பரார்த்த பூஜையை பரம்பரை பாத்தியங் கொடுத்துப் பாராட்டினார்கள்.

 

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!